Tuesday, February 24, 2015

புவி அரசியலில் இந்து மகாக்கடலும் இலங்கை திரிகோணமலையும்.




ம்பது ஆண்டுகளுக்கு முன் சீனா, இலங்கையிலுள்ள திரிகோணமலை கடற்கரை துறைமுகத்தை குத்தகைக்குப் பெற்று தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்தது.
அன்றைய இலங்கையின் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதுகுறித்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் டட்லி சேனநாயக எதிர்ப்புத் தெரிவித்தார். இந்தப்போக்கு நல்லதல்ல என்று இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தன. இந்த எச்சரிக்கைகளின் பயத்தை உணர்ந்த பண்டாரநாயக்கா
சீனாவுக்கு திரிகோணமலையினை கையளிக்கப்போவதில்லை என்ற உறுதிமொழியினைத் சரியாக இன்றோடு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 24-02-1965 அன்று,தெளிவாக மக்கள் மத்தியில் வெளியிட்டார்.

அதுவரை இந்தியாவை பயமுறுத்த திரிகோணமலை கடற்கரை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுக்கலாம் என நினைத்த சிறிமாவோ தன் முடிவை மாற்றிக்கொண்டார்.

இந்த திரிகோணமலைத் துறைமுகம் இயற்கைத்துறைமுகம் ஆகும். பாறைகள் சுற்றியிருக்க அருகருகே நிற்கும் கப்பல்கள் கூட கண்ணுக்குப் புலப்படாது. துறைமுகத்தின் செயல்பாடுகள் கருவிகள் மூலம் தான் கண்காணிக்கமுடியும். இத்தகைய பாதுகாப்புத் தன்மையாலும், திரிகோணமலைத் துறைமுகம் இந்தியாவுக்கு அருகிலே அமைந்திருப்பதாலும் ஆதிக்கசக்தி படைத்த நாடுகளுக்கு இந்த துறைமுகத்தின் மீது எப்போதும் ஒரு கண்ணுண்டு.

புவி அரசியலில் அமெரிக்காவின் கழுகுப்பார்வையும் ; சீனாவின் ட்ராகன் நெழிவதும் திரிகோணமலையினை நோக்கி என்று.வேடிக்கையாகச் சொல்வார்கள்

அதற்கேற்றார்போலவே, இடைப்பட்ட ஐம்பது ஆண்டுகளில், 1970 - 80காலகட்டத்தில் அமெரிக்காவுக்குச் சாதகமாக சிறிமாவோ பண்டாரநாயகா, “வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா”, “அமெரிக்க எண்ணெய்” நிறுவனங்களின் சேமிப்புக் கிடங்குகளுக்காக திரிகோணமலை துறைமுகத்தை வழங்க முன்வந்தார்.

இதற்கு சற்றுகாலம் முன்பு, இந்திய பெருங்கடலில் டியூகோகர்சியா இராணுவ தளத்தை இலங்கையின் உதவியோடு அமெரிக்கா அமைத்தபோது, இந்திராகாந்தியின் எச்சரிக்கையின் விளைவாக அமெரிக்கா அங்கிருந்து தனது தளத்தை மாற்றிக்கொண்டது. வங்கதேசம் உதயமாகி இந்திராகாந்தியின் செல்வாக்கு உச்சத்தில் இருந்த நேரம் அப்போது. சோவியத் யூனியனுடன் இந்தியாவுக்கு நட்புறவும் இருந்தது.



இதேபோன்ற பதட்டநிலை எப்போதும் இந்தியப் பெருங்கடலில் நிலவி வருகின்றது. இதற்கு முக்கியக்காரணம் இலங்கை தான். இராஜபக்‌ஷே தயவில் சீனாவின் ஆதிக்கம் இந்துமகா சமுத்திரத்திலும் , வங்கக்கடலிலும் இன்றைக்கு வரை கோலோச்சுகின்றது. கச்சத்தீவுவரை சீனாவின் நடமாட்டம் இருப்பதாக தரவுகள் சொல்கின்றன.

சீனா தங்களுடைய உற்பத்திகளைச் சந்தைப்படுத்த ஆப்பரிக்கா, இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அமைக்கும் வணிகப் பாதையான சில்க்வே(Silk way) அமைக்கும் திட்டம் மற்றும் இந்தியபெருங்கடல், வங்கக்கடல் அடியில் எரிவாயுக்குழாய்கள் பதித்து மியான்மர் வழியாக சீனாவுக்குக் கொண்டு செல்லும் திட்டமும் அதற்கான பணிகளும் நடக்கின்றன.

இந்தியப்பெருங்கடலில் இந்தியாவின் ஆளுமையை நிலைநாட்டவும், அமைதிமண்டலமாக இந்தியப்பெருங்கடல் வங்கக்கடல் பகுதிகளை பாதுகாக்கவும் வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது. ஏனென்றால் கடந்தவாரம் பிரதமர் மோடி அருணாச்சலபிரதேசத்திற்குச் சென்றதற்கு சீனா கண்டணம் தெரிவித்துள்ளது. நமது நாட்டின் மண்ணிற்கே ஒரு பிரதமர் செல்வதற்கு அண்டைநாடு கண்டணம் எழுப்புகிறது. அதுமட்டுமல்லாமல் பிரம்மபுத்ரா நதியின் இடையே அணைகள் கட்டுவதும், மின்சார உற்பத்தி நிலையம் அமைப்பதும் இந்தியாவின் ஒப்புதல் இல்லாமல் சீனா கட்டிவருகின்றது. பிரம்மபுத்திராவின் நீர்வரத்தையே சீனாவுக்கு மாற்றிவிடுமோ என்ற அச்சம் நமக்கு ஏற்படுகின்றது.

நில எல்லையிலே இத்தனை முரண்டுபிடிக்கும் சீனா, தனக்குச் சம்பந்தமில்லாத இந்தியப்பெருங்கடலில் கால் வைத்தால் பயங்கரமான எதிர்வினைகள் உருவாகும்.

இந்நிலையில், ஒரு முக்கிய அறிவிப்பை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியப்பெருங்கடலில் என்னென்ன தாதுக்கள் இருக்கின்றன என்பது பற்றிய ஆய்வு மேற்கொள்ளபட இருக்கின்றது. . கடலுக்கடியில் கிடைக்கும் துத்தநாகம், இரும்பு, கோபால்ட், நிக்கல், தங்கம், வெள்ளி என இந்தியப் பெருங்கடலினடியில் இருக்கும் தாதுக்களை கண்டறிய ஒரு ஆராய்ச்சி அடுத்துவரும் நான்காண்டுகளும் நடைபெறும் என்றுமத்திய அரசு அறிவித்துள்ளது.


டிசம்பர் மாதம் கோவாவில் துவங்கி மொரீசியஸ் வரை முதல்கட்டமாக இந்த ஆய்வுப்பணிகள் நடைபெறும் . இது வரவேற்புக்குரியது. இதுவரை இந்தியா பெரிய ஆய்வுகளை இந்துமகா சமுத்திரத்தின் கடல்பரப்பில் நடத்தவில்லை. இந்த ஆராய்ச்சியாவது, இந்தியாவின் ஆளுமையை ஓரளவு கடல்பகுதியில் நிலைநிறுத்துமென்ற திருப்தி நமக்கு எழுகிறது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

*Life is all about living in peace*.

*Life is all about living in peace*.Life is not about  ups and down, right and wrong, success and failure. Know that failure simply states t...