Thursday, February 12, 2015

அரசுகளும் எல்லைகளும் - புவி அரசியல். - ஈழநிலவன்









உலகில் அரசு என்ற நிறுவனம் தோன்றிய காலத்தில் இருந்தே நிலவியல் எல்லைகள் தோன்றி விடுகின்றன. நிலங்களை மனிதர்கள் உரிமை கொண்டாட தொடங்கிய காலத்தில் நிலங்களுக்கான பரஸ்பர மோதலும் தொடங்கின. இதன் தொடர்ச்சியில் உலகம் எப்போதுமே நிலங்களுக்கான, அதன் எல்லைகளுக்கான போராட்டத்தில் தன்னை கடத்திக்கொண்டே வந்திருக்கிறது.

நாடோடி தன்மையிலிருந்து மனிதர்கள் நிலங்களை தங்களின் நிரந்தர வசிப்பிடமாக மாற்றிக்கொள்ளத்தொடங்கிய நிலையில் உலகின் எல்லாவித இயக்கங்களும் தொடங்கி விடுகின்றன.
இருபதாம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் இரு உலகப்போர்கள் புவி அரசியல் பற்றிய கருத்தாக்கத்தை முதன் முதலாக உயிர்பெறச் செய்தன.

உலக கண்டங்களின் எல்லைகளும் மறுஅர்த்தம் பெற்றன. புவிஅரசியல் என்ற சொல்லாடல் முதன் முதலாக ஸ்வீடன் நாட்டு அறிஞரான ருடால்ப் கெஜ்லன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் தொடக்க கால அர்த்தம் என்பது குறிப்பிட்ட புவியியல் சூழலில் இருக்கும் அரசியல் அரசை குறிப்பதாகும். பிந்தைய கட்டத்தில் அரசுக்கும், பூமிக்கும் இடையேயான உறவை குறித்தது.

 ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை ஆளும் அரசு எவ்வாறு அதனோடு இயைந்த நலன்களை வெளிப்படுத்துகிறது என்பதும் புவி அரசியலின் முக்கிய கூறாக இருந்தது. மேலும் அரசியல் வெளியின் அதிகாரம் குறித்தும் புவி அரசியல் குறிப்பிடுகிறது. மேலும் ஒரு நிலப்பகுதியின் எதார்த்தம் சார்ந்த எல்லா சுதந்திர அரசியல் வளர்ச்சியையும் குறிப்பிடுகிறது.

புவி அரசியல் மண் சார்ந்த அரசின் முழு அதிகாரத்தை பிரதிபலிக்கிறது.  வெளிக்கும் அதன் கட்டமைப்புக்குமான அரசியல் அங்கதத்தைப் பற்றிய அறிவியல்.அரசு என்ற அங்கத்தின் வாழ்வு மற்றும் மரணம் ஆகியவற்றின் அரசியல் செயல்பாடு இப்படியான பல வியாக்கினங்கள் புவி அரசியலுக்கு அளிக்கப்படுகின்றன.

மேற்கண்ட எல்லா வியாக்யானங்களும் இரு நூற்றாண்டுகளின் வரலாற்று இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. விரிவான அர்த்தத்தில் புவி அரசியல் என்பது ஓர் அரசின் வெளியுறவுக்கொள்கை அடிப்படையிலான புவியியல் ஆய்வு முறை. இந்த அர்த்தத்தில் தான் உலக நாடுகளின் அரசுகள் புவி அரசியலை அணுகுகின்றன.

புவி அரசியல் 18 ஆம் நூற்றாண்டின் பிரிட்டன் மற்றும் பிரான்ஸின் காலனியாதிக்க நடவடிக்கைகளோடு தொடங்குகிறது எனலாம். காலனியாதிக்கம் தன் எல்லையை விரிவாக்கம் செய்து கொள்ள மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இது காலனிய அரசிற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளின் நிலப்பரப்பிற்கும் இடையே நேரடி உறவை ஏற்படுத்தியது.

பிரிட்டன் காலனியம் இந்தியா போன்ற நாடுகளில் உற்பத்திப்பொருட்களை கபளீகரம் செய்தது, ஏற்கனவே நடைமுறையில் இருந்த விவசாயத்தை மாற்றி தங்களின் விவசாய முறையை அறிமுகப்படுத்தியது  தேயிலை, காப்பி போன்ற பயிர்களும் இதில் அடங்கும். காலனிய அரசிற்கு புவியின் எல்லையை விரிவுபடுத்துவது அதன் பரந்துபட்ட நலன்களுக்கு உகந்ததாகும்.

புவி அரசியலை உள்வாங்கிய காலனிய சிந்தனை ஐரோப்பிய மறுமலர்ச்சி கால சிந்தனை முறையில் இருந்தே தொடக்கம் பெற்று விட்டது. இம்மானுவேல் கான்டின் உள் அவதானம் மற்றும் தன்னிறைவு கோட்பாடு, ஹெகலின் ஜெர்மானிய சேவை மற்றும் வெளிப்புற விரிவாக்கம் ஆகியவை ஐரோப்பிய காலனிய முறைகளுக்கு பெரும் தூண்டலாக இருந்தன.

ஐரோப்பிய நாகரீகம் குறித்த மேன்மையும் இந்த காலனிய ஆட்சியாளர்களின் உட்கிடங்காக இருந்தன. இதன் தொடர்ச்சியில் பிஸ்மார்க் முன்னெடுத்த ஜெர்மானிய முழுமை கோட்பாடு அன்றைய அரசியல் தத்துவத்தின் இயங்கியலாக இருந்தது. மேலும் ரிட்டல், ஹும்போல்ட் மற்றும் பிரடரிக் ரட்ஸல் போன்றோர் புவி அரசியலுக்கான குறிப்பிட்ட சில அம்சங்களை உருவாக்கினர். அதன் படி வெளியும், நிலைமையும் புவியின் மதிப்பையும் மக்களின் முடிவான விதியையும் நிர்ணயம் செய்கின்றன. இது அறிவியல் நிர்ணயவாத விதிகளின் அடிப்படையிலானது.

நிலைமையை பொறுத்தவரை குறிப்பிட்ட பகுதியில் அதன் இடம் மாறாத நிலையில் அது எப்போதும் அரசுகளுக்கும், தேசத்திற்கும் அதே மாதிரியான உந்துவிசையை அளித்துக்கொண்டே இருக்கிறது. வெளியை பொறுத்தவரை மக்களின் லட்சியத்தை அடைவதற்கான முக்கிய கூறு. எல்லா போர்களும் இந்த வெளியை வெற்றிக் கொள்வதற்கான போர்களே. இன்றைய நவீன காலகட்டத்தில் பிரதேசங்களை வெற்றிக்கொள்ளுவதே சிறந்த அரசியல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

18 ஆம் நூற்றாண்டில் காலனியம் உலகின் மூன்றில் இரண்டு பகுதியை தன் வயப்படுத்திக் கொண்டது. பெரும்பாலும் கீழைநாடுகள் தான் அதன் காலனிகளாக இருந்தன. ஆசியா மற்றும் ஆப்ரிக்காவின் பெரும்பாலான நாடுகள் பிரிட்டன் மற்றும் பிரான்சின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. இந்த நாடுபிடிக்கும் கொள்கை என்பது முந்தைய நிலபிரபுத்துவ அரசுகளின் எச்ச மனோபாவம்.19 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்து பல்வேறு விதமான மூலப்பொருட்களை பிரிட்டனுக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டதால் பிரிட்டனுக்கு புதிய காலனிகளை கண்டுபிடிக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

புவி அரசியலின் நீட்சி இங்கிருந்து தொடங்கியது. விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் மனோபாவத்தோடு இந்த காலனிய அரசுகளின் நடவடிக்கைகளும் ஒத்துபோயின. தன் நிலத்தோடு தொடர்பில்லாத, அந்த பிரதேச பண்பாட்டோடு சம்பந்தமே இல்லாத ஒன்றின் கட்டுப்பாட்டிற்குள் பெரும்பாலான ஆசிய ஆப்ரிக்க நாடுகள் வந்த போது அங்குள்ள மக்கள் தாங்கள் ஒரு நவீன ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறோம் என்பதாக உணர்ந்தனர்.

அதுவரையிலும் தாங்கள் கட்டுண்டிருந்த நிலபிரபுத்துவ அரசுகளின் அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் அரச கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆசிய கண்டத்தை பொறுத்தவரை மத்திய கிழக்கு முழுவதும் துருக்கிய உதுமானிய பேரரசும், ஈரான் மற்றும் மத்திய ஆசியாவின் பெரும்பகுதியை ஸபாவித் பேரரசும், தெற்காசியாவை முகலாய பேரரசும் ஆட்சியமைத்துக்கொண்டிருந்தன.

இந்த மூன்றுவகை பேரரசுகளையும் வென்றெடுத்து தன் புவி அரசியலை பிரிட்டன் வலுவாக நிறுவிக்கொண்டது. காலனிய அரசுகள் வரலாற்று அரசுகளாக இப்போது தான் மாற்றம் பெற்றன. புவி அரசியல் தேசங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரும் நிலப்பரப்பு பற்றியும் வெளிப்படுத்துகிறது. அந்த அடிப்படையில் ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களின் பெரும் நிலப்பரப்புகள் உலக தீவுகள் (World Island) என்றழைக்கப்படுகின்றன. மற்றவை துணை தீவுகள்.

வல்லரசு உருவாக்கத்தின் முக்கிய அடிப்படையே இது தான். முந்தைய இரு நூற்றாண்டுகளில் ஆசியாவில் இரஷ்யாவும், ஐரோப்பாவில் ஜெர்மனியும் இந்த தீவுகளின் மைய நிலப்பரப்பாக இருந்தன. அதாவது இதயப்பகுதி என்றழைக்கப்பட்டன. ஸ்டாலினும், ஹிட்லரும் இரண்டாம் உலகப்போரில் நடத்திய போர் நடவடிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவை இந்த மைய நிலப்பரப்பு சார்ந்த அரசியல் தான்.




இரஷ்யாவை கைப்பற்றினால் ஜெர்மன் உலகின் மிகப்பெரும் வல்லரசு ஆகிவிடும் என்ற கனவில் ஹிட்லர் மிதந்து கொண்டிருந்தார். காரணம் ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்கள் ஒன்றிணையும் எல்லையாக இரஷ்ய நிலப்பரப்பு இருந்தது. மையப்பகுதிகளை கைப்பற்றுவது என்பது உலக அதிகாரத்தின் முக்கிய கூறாக இருந்தது. இன்றைய போர்முறை ஒரு நாட்டின் தலைநகர் கைப்பற்றப்பட்டால் அந்நாட்டை பிடித்து விட்டதாக பொருள் கொள்கிறது. அதன் மூலம் அது தன்னை பேரரசாக காட்டிக்கொள்கிறது.

மேலும் மேற்கத்திய புவி அரசியல் சிந்தனையாளரான மெகிந்தர் இவ்வாறு குறிப்பிட்டார். " யார் கிழக்கு ஐரோப்பாவை ஆள்கிறார்களோ அவர்கள் முக்கிய நிலப்பகுதிக்கு கட்டளை இடுகின்றனர். யார் முக்கிய நிலப்பகுதியை ஆள்கிறார்களோ அவர்கள் உலக தீவிற்கு கட்டளை இடுகின்றனர். யார் உலகை தீவை ஆள்கிறார்களோ அவர்கள் உலகிற்கு கட்டளை இடுகின்றனர்.”  வரலாற்றின் நகர்வில் இது நிதர்சனமாகி இருக்கிறது.

ஆசியாவும் ஐரோப்பாவும் இணைந்த யுரேசியா, யுரோ-சைபீரியா, ஆசியா மைனர் , ஆசியா பசிபிக் போன்ற பிராந்தியங்கள் மேற்கண்ட கோட்பாட்டிற்கு சரியாக பொருந்தி வருகின்றன. முதல் உலகப்போரில் பிரிட்டனும், இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியும், மூன்றாம் உலகத்தில் அமெரிக்காவும் முக்கிய பிராந்தியங்களை தங்கள் ஆளுகைக்கு உட்படுத்தின. மேலும் ஆளுகைக்கு உட்படுத்த பல எத்தனிப்புகளை செய்தன. வல்லரசு கோட்பாட்டின் இலக்கணமே இது தான்.

இன்றைய உலக வல்லரசான அமெரிக்காவை எடுத்துக்கொள்வோம். அதன் மிகப்பெரும் பலமே அது அட்லாண்டிக் மற்றும் பசிபிக் மகா சமுத்திரங்களை தன் இருபக்க அரணாகக்கொண்டிருப்பது தான். இதன் காரணமாக எந்த நாடும் அதனுள் நுழைவது எளிதான காரியமல்ல. புவி அரசியலில் சமுத்திர அரண்களும் மிக முக்கியமானவை. சமுத்திரங்களை, கடல்களை நீட்டிக்கொண்டு அதனுள் நீண்ட தூரம் பயணம் செய்து தன் எல்லையை கண்டறிதலும் ஒரு புவி அரசியல் நடவடிக்கை தான்.

புவியியல் உண்மைகள் பல முறை உலகை மாற்றி இருக்கின்றன. பல நூற்றாண்டுகளின் வரலாற்றை நாம் கடந்து வந்தால் இதை உணர முடியும். உலகப்போர்களும் அதன் பிந்தைய விளைவுகளும் ஜனநாயக சமூகத்தில் புவி அரசியல் குறித்த பிரக்ஞையை ஏற்படுத்தி இருக்கின்றன. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் புவி அரசியல் நலன்கள் இந்தியா மீது அதிகரித்தன. அந்த தருணம் இந்திய பிரிவினை குறித்து அதிக விவாதங்கள் நடைபெற்ற தருணம். மத அடிப்படையில் இந்தியா -பாகிஸ்தான் என்று பிரிக்கப்பட வேண்டும் என்பது முஸ்லிம் லீக்கின் கோரிக்கை. ஆனால் அதற்கு எதிராக இந்தியாவில் பலர் குரல் கொடுத்தனர். இந்த பிரிவினை சாத்தியமற்றது என்றனர்.

இந்நிலையில் பிரிவினையின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் புவி அரசியல் அடிப்படையில் பிரிந்து கிடந்தார்கள். தேசிய வாதிகள் இந்த பிரிவினை இந்தியாவை பலவீனப்படுத்தும் என்றார்கள். மேலும் சில ஏகாதிபத்திய எழுத்தாளர்கள் பாகிஸ்தான் பிரிவினை என்பது வருங்காலத்தில் சோவியத் யூனியனுடன் போர் செய்வதற்கு வசதியாக இருக்கும் என்றனர். மேலும் புவி அரசியல் என்பது ஓர் அரசின் அல்லது பிரதேசத்தின் பொருளாதார, இராணுவ, இராணுவ உதவி மற்றும் ஆயுத தளவாடங்கள் ஆகியவற்றின் நீண்ட கால நலன்களை உள்ளடக்கி இருக்கிறது.

ஒரு நாட்டின் வெளியுறவுக்கொள்கை தயாரிப்பில் இந்த புவி அரசியல் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போதைய உலகம் ஏகாதிபத்தியமாக மாறி இருக்கும் நிலையில் புவி அரசியல் இந்த ஏகாதிபத்திய உருவாக்கத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அதன் ராஜ தந்திர நடவடிக்கையின் முக்கிய பகுதியாக பேரரசு கருத்தாக்கம் இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் உருவான பாசிசம் , நாசிசம், ஜப்பானியம் ஆகிய சொல்லாடல்கள் இந்த பேரரசு உருவாக்கத்திற்கு துணையாக இருந்தன.

பெரும் காலனிய அதிகார மையங்களின் எண்ணம் என்பது பேரரசை அதன் இயல்பான பகுதியாக நிலைகொள்ள செய்வது தான். இதற்கெதிரான போராட்டங்கள் காலனிய எதிர்ப்பாக, தேசியமாக உலகின் பல பகுதிகளில் நடைபெற்றன. இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்கா தூரக்கிழக்கு நாடுகளுக்கு சுதந்திரமளித்தது, பிலிப்பைன் மக்கள் ஜப்பானின் தென் கடல் பிரதேசம் மீதான ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடினர்.

இந்நிலையில் ஏகாதிபத்தியத்தின் நோக்கங்கள் பலவாறாக இருந்தன. மூலப்பொருட்கள் மீதான ஆசை, உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை, மிதமிஞ்சிய மக்கள் தொகையை கவரும் சிறு நிறுவனங்கள், உலகை ஆள்வதற்கான உத்திகள் , மனித சமூகத்தின் கண்கள் மீதான கௌரவம் மற்றும் பொருளாதார தன்னிறைவு போன்றவை இதனுள் அடங்கும்.

இருபதாம் நூற்றாண்டு உலக வரைபடத்தை எடுத்துக்கொண்டால் அதன் தொடக்க காலங்களில் பிரிட்டன் 140 நாடுகளை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. நெதர்லாந்து 60 நாடுகளை வைத்திருந்தது. முதல் உலகப்போருக்கு பின்னர் பிரான்சு 20 நாடுகளை அபகரித்தது. இத்தாலி எதியோப்பியா மற்றும் ஆப்ரிக்காவின் சில நாடுகளை தன்வசப்படுத்தியது. இதன் தொடர்ச்சியில் இருபதாம் நூற்றாண்டு காலனிய உலகம் முந்தைய நூற்றாண்டை விட தன் பரப்பை குறைத்துக்கொண்டது.

ஏகாதிபத்தியத்தின் இந்த ஒட்டுமொத்த விளைவானது அரசியல், பொருளாதார மற்றும் கலாசார அடிமைகளாக காலனிய நாடுகளை மாற்றியது. அவர்களின் நாகரீகங்கள் எதுவானாலும் அதனை முழுமுற்றாக மாற்றத்தொடங்கியது.
வரலாற்றோடு புவி அரசியல் அதிகம் தொடர்பு கொண்டது. சில புவி அரசியலாளர்கள் செயல்பாட்டில் வரலாற்றை புவியியலாக பார்க்கின்றனர். காலத்தின் ஒவ்வொரு நிகழ்வும் புவியோடு நகர்கிறது.

பூகம்பம், புயல்மழை, சூறாவளி, சுனாமி போன்ற இயற்கை பேரிடர் என்பது பூமியோடும், இயற்கையோடும் தொடர்பு கொண்டது. மாறிவரும் பருவகாலங்களும் பூமியோடும் தொடர்புடையது தான். ஆக ஒவ்வொரு காலநிகழ்வும் பூமியிலிருந்து பிரித்து பார்க்க இயலாத ஒன்று தான்.

கிழக்கின் வரலாற்றில் புகழ்பெற்ற நதிகளான நைல், யூப்ரடீஸ் மற்றும் டைகிரீஸ் நதிக்கரைகள் நாகரீகங்களின் பிறப்பிடமாகி ஒவ்வொரு இன அரசுகளும் அதனை வெவ்வேறு காலகட்டங்களில் படையெடுத்து வென்றிருக்கின்றன.

அவ்வகையில் அசிரியர்கள், சுமேரியர்கள், மெசிடோனியர்கள் மற்றும் மங்கோலியர்கள் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். அமெரிக்காவை பொறுத்தவரை அதன் கால நகர்வில் ஏராளமான இராணுவ செயல்திட்டங்கள் எல்லாம் புவியியலுக்கும், வரலாற்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டன.

வரலாற்றின் கூறுகள் என்பவை மனிதன், இடம் மற்றும் காலம். அதே நேரத்தில் புவி அரசியல் கூறுகள் பூமி மற்றும் அரசு. இந்நிலையில் தற்போதைய புவி அரசியல் விளக்கம் என்பது கடந்த கால வரலாறு அடிப்படையிலானது. அதே நேரத்தில் புவி அரசியலின் எதிர்கால விளக்கம் என்பது தற்போதைய நிலைமைகள் அடிப்படையிலானது.

தற்போதைய உலகம் சந்தித்து வரும் நெருக்கடிகள் அதன் முரண்கள், பல்வேறு நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகள், தேசிய இனப்போராட்டங்கள், பிறமோதல்கள், தொடரும் வறுமை இவை எதிர்கால புவி அரசியலின் விளக்கத்தை மாற்ற வாய்ப்பிருக்கிறது. மேலும் அரசு (state)என்ற சொல்லாடல் புவி அரசியலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த கருதுகோள் என்பது சுயாட்சி கொண்ட தேசங்கள் அதனை ஆள்வதற்கான இறையாண்மையை பெற்று விளங்குவது.

சர்வதேச உறவுகள் என்பவை பூமியின் இறையாண்மையை அடிப்படையாக வைத்து அதனடிப்படையில் எழும் தொடர்புகளின் தொடர்ச்சி தான். ஆக மிகப்பெரும் உலக அதிகாரம் என்பது அரசுகள் அதன் தேசியக்கொள்கையை தன் வல்லமையால் உலகம் முழுவதும் விரிவுபடுத்தும் திறனே. அதனடிப்படையில் தான் தற்போது அமெரிக்கா செயல்படுகிறது.

புவி அரசியல் இந்தியாவில் தற்போதைய காலகட்டத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காஷ்மீர், பாகிஸ்தான், வங்கதேசம், சீனா மற்றும் இலங்கை ஆகியவை அதன் புவி அரசியல் கோட்பாட்டிற்குள் வருகின்றன. பன்முக சமூக கட்டமைப்பை கொண்ட இந்தியாவில் சிறுபான்மை - பெரும்பான்மை மோதல்கள், சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் வடகிழக்கு மாகாணங்களின் சுயநிர்ணய போராட்டங்கள் போன்றவை முக்கிய இடத்தை வகிக்கின்றன.

உலகின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் இருக்கிறது. மேலும் புவி அரசியல் அமைப்பில் பெரும் அடர்த்தியான மக்களை கொண்ட பிரதேசமாக இருக்கிறது. இந்தியா என்பது முழு இறையாண்மை மிக்க பிரதேசமா? தேசம் என்ற அரசியல் சொல்லாடலை கொண்ட ஒன்றா? அல்லது துணைக்கண்டமா என்பது போன்ற விவாதங்கள் நடந்து வருகின்றன.

 மேற்கத்திய ஊடகங்கள் பல இந்தியாவை துணைக்கண்டம் என்றே குறிப்பிடுகின்றன. இந்நிலையில் துணைக்கண்டம் (Sub continent) என்பது குறிப்பிட்ட பகுதிகள் அடங்கிய சுயமான நிலத்தொகுதியை குறிப்பதாகும். இந்நிலையில் இந்தியா ஆசியா கண்டத்திலிருந்து வேறுபட்ட நில அமைப்பு மற்றும் அரசியல் சுதந்திரத்தை பெற்றிருக்கிறது.

இதில் தெற்காசியா என்ற சொல்லாடல் துணைக்கண்டம் என்பதற்கு பதிலாக சில சமயங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது தனித்த புவி அரசியல் பிரதேசமாக பனிப்போர் காலகட்டத்தில் நடுநிலை வகித்த ஒன்றாக இருக்கிறது. இதன் சுயமான பொருளாதாரம், கலாசாரம், திரளான மக்கள் போன்றவை இதற்கான பலமாக இருக்கின்றன. இந்நிலையில் இந்திய பெருங்கடலும் இதன் அரணே.

இவ்வாறான அரண்கள் உலகில் பல பிரதேசங்களில் இருக்கின்றன. ஆப்ரிக்காவின் சஹாரா பாலைவனம், எகிப்தின் சூயஸ் கால்வாய், ஆங்கில கால்வாய் போன்றவை இதில் அடங்கும். இந்நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பல நாடுகள் போட்டி இடுகின்றன. சீனாவும் அவற்றில் ஒன்று. இந்திய பெருங்கடல் இந்திய புவி அரசியலின் முக்கிய பகுதியாக இருக்கும் நிலையில் இலங்கையை இந்தியா கண்டிப்பாக கட்டுப்படுத்த முடியும்.

இந்தியாவை மீறி இலங்கையால் எதுவும் செய்ய இயலாது. மேலும் இந்த அரணில் இந்தியாவை தாண்டி வேறு எந்த ஆசிய நாடுகளும் வந்து விட முடியாது. ஆக தமிழக மீனவர் பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு காத்திரமான பங்கை ஆற்ற முடியும். புவி அரசியல் என்பதை மறைத்து விட்டு சீனாவை இலங்கையில் அதனால் முன்னிறுத்த முடியாது. சீனா என்பது இலங்கையின் புவி அரசியலோடு சம்பந்தப்படாதது.


ஆக தன் நிலவியலால், வலிமைமிக்க அரசால் இந்தியா இலங்கையை கட்டுப்படுத்த முடியும். இலங்கையின் அரசியல் நகர்வில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்ற முடியும். அவ்வகையில் இலங்கையை கூறாக்குவதற்கும் இந்தியாவால் முடியும். நவீன புவி அரசியல் என்பது இவ்வாறு தான் நாடுகளை அளந்து வைத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியில் புவி அரசியல் என்பது ஒரு இயங்கியல் ஆய்வு முறை. உலகை தொடர்ந்து அவதானித்தலில் உருவாகும் கோட்பாடு. இதனிலிருந்தே சர்வதேச உறவுகளும், தேசங்களும், சுய நிர்ணயமும் உருவாகின்றது.

- ஈழத்து நிலவன் -

No comments:

Post a Comment

*Life is all about living in peace*.

*Life is all about living in peace*.Life is not about  ups and down, right and wrong, success and failure. Know that failure simply states t...