Tuesday, February 17, 2015

இந்திய இலங்கை ஒப்பந்தம் –ஒரு ஏமாற்றம்.




நேற்றைக்கு (16-02-2015) பிரதமர் மோடி, இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா ஆகிய  இருவர் முன்னிலையில் இந்திய-இலங்கை ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. விவசாயம், பாதுகாப்பு, நாளந்தா பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் மிகமுக்கியமானது.

அணு ஒப்பந்தத்தால் இந்தியாவில் தயாரிக்கப்படும் கனநீர் அணு உலைகள் மூலம் இலங்கையின் தெற்குஎல்லைப்புற கடலோரத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்படும் என்று சில தகவல்கள் வருகின்றன. இதற்கான பயிற்சிகளை இலங்கை அதிகாரிகளுக்கு இந்தியா வழங்கும் என்று தெரிகிறது. ஆனால் இன்றைய நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் (17-02-2015) 7ம் பக்கத்தில் கொழும்பிலிருந்து நண்பர் பி.கே.பாலச்சந்திரன்,“N-pact Does Not Involve Power Plant”  இந்த அணுஒப்பந்தம் இலங்கையில்  அணுஉலையை அமைக்க முயலாது என்று கூறியுள்ளார். ஆரம்பத்திலே குழப்பமாக உள்ளது.

இந்தியாவில் 14க்கும் மேற்பட்ட அணுஉலைகள் உள்ளன. கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு சம்பந்தமான வினாக்களுக்கு மத்திய அரசிடமிருந்து எந்த பதிலுமில்லை. இந்தியாவே அணுஉலை தொழில்நுட்பத்தை ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளிடம் தான் பெறவேண்டியுள்ளது. ஆனால் இந்தியா இலங்கையோடும், தென்ஆப்ரிக்க நாடுகளோடும் அணு உலை சம்பந்தமான ஒப்பந்தங்கள் செய்துவருகின்றது. எல்லாம்சரி, பேசவேண்டியதை விட்டுவிட்டு மற்ற கதைகள் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே!

இலங்கையில் நடந்த இன அழிப்பைக்குறித்து, விசாரிக்க சர்வதேச நம்பகமான சுதந்திரமான விசாரணை பற்றி பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் சிரிசேனாவும் ஒன்றும் வாய்திறக்கவில்லையே!
ஈழத்தமிழர்களுடைய அரசியல் தீர்வுக்கு ஐ.நாமன்றத்தின் மேற்பார்வையில் ஈழத்தில்உள்ள தமிழ்மக்களிடமும், புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் பொதுவாக்கெடுப்பு நட்த்தவேண்டும் என்பதையும் ஏன் விவாதிக்கவில்லை..

தமிழகமீனவர் பிரச்சனையைக்கூட பட்டும்படாமலும் தானே பேசியுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல், ராஜபக்‌ஷே காலத்தில் சீனாவுடன் செய்துகொண்ட இராணுவம், பாதுகாப்பு, தொழில், துறைமுகவளர்ச்சி என நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்களை என்ன செய்யப்போகிறார் மைத்ரி என்பதையாவது மோடி கேட்டாரா? சீனா இலங்கை உறவுகள் பிரிக்கமுடியுமா?  இராஜபக்‌ஷே இந்தப்பிரச்சனையில் இடியாப்ப சிக்கலை உருவாக்கி வைத்திருக்கிறார். ஏற்கனவே சீனா எரிவாயு குழாய்களை இந்தியப் பெருங்கடல், வங்கக்கடல், மியான்மர் வழியாக சீனாவரை பதிக்கவும், சில்க் வியார வழிகளை அமைக்கவும் வேலைகள் நடக்கின்றனவே அதனைத் தடுக்கமுடியுமா?

அதுபோக, இந்தியா இதுவரைக்கும் இலங்கைக்கு வழங்கியுள்ள பலபில்லியன் உதவித்தொகை சரியாக தமிழர்களுக்குச் செலவு செய்யப்பட்டதா? அந்த தொகை முழுவதும் தமிழர்களுக்கு வீடுகட்டிக் கொடுக்கப்பட்டதா?

அந்த தொகையில் தானே சிங்களர்கள் வாழும்  “காலியில்” (Galle) சகலவசதிகள் அடங்கிய இரயிலடி கட்டப்பட்டு முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா திறந்துவைத்தாரே? அந்தப்பணம் இந்திய அரசு கொடுத்த பணம் தானே? அதை எப்படி சிங்களர்கள் பகுதியில் பயன்படுத்தலாம்?

மோடி அவர்களே, தமிழர்களாகிய எங்களுடைய கோரிக்கையான லைபீரியா அதிபராக இருந்த  சார்லஸ்டெய்லர் சர்வதேச புலனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு எப்படி லண்டன்சிறையில் இருக்கின்றாரோ அப்படி இராஜபக்‌ஷே-வை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தவேண்டாமா!
தமிழர்கள் மீனவர்கள் பிரச்சனை, கச்சத்தீவு இது குறித்தெல்லாம் தெளிவான முடிவுகள் மேற்கொண்டதாக செய்திகள் வரவே இல்லையே?

இலங்கையில், தமிழர்கள்பகுதியில் வடக்கு கிழக்கு மாநிலங்களில் இராணுவத்தைத் திரும்பப் பெறுவதும், தமிழர் நிலங்களை தமிழர்களிடம் ஒப்படைப்பதும், மீள்குடியேற்றம்குறித்தும், மாகாண கவுன்சிலுக்கு அதிகாரங்கள் குறித்தும் எதுவும் மோடியும், சிரிசேனாவும் தெளிவாக பேசவில்லை என்றுதான் தெரிகிறது.

இந்தப்பிரச்சனைகள் தானே முக்கியம். இதையெல்லாம் விட்டுவிட்டு, ஒப்பந்தங்கள் கையொப்பமானதென்று திசைதிருப்புவதும், 2300ஆண்டுகள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்று மோடி கூறுவதும், நாளந்தா பல்கலைக்கழக பணிகளில் இலங்கை அரசு உணர்வுப்பூர்வமாக ஈடுபடுமென்று சிரிசேனா சொல்வதும் வேடிக்கையாக இருக்கிறது.

பேசவேண்டியதைப் பேசாமல், தீர்க்கவேண்டியதைத் தீர்க்காமல், மோடியும் சிரிசேனாவும் ஹைதராபாத்பவனில் கூடி கலைந்தார்கள்.  இவ்வாறான நிலையில் மைத்ரி சிரிசேனா அதிபரான முதல்முறை இந்தியாவுக்கு வந்தார் என்று பெருமையாக மார்தட்டிக் கொள்வதும், உருப்படியான நடவடிக்கைகள் இல்லாமல் வெத்து படோபடங்கள் செய்து தமிழர்களை ஏமாற்றமுடியாது.

தில்லி பாதுஷாக்கள் செய்யவேண்டியது, ஈழத்தில் வாழும் தமிழ்மக்கள் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் அவர்கள் விரும்புகின்ற அரசியல் தீர்வு, ஈடுசெய்யமுடியாத இனஅழிப்பைக் குறித்து
சர்வதேச  நம்பகமான சுதந்திரவிசாரணை, தமிழர் நிலங்களை மீட்டுக்கொடுப்பது, இராணுவத்தைத் தமிழர் பகுதிகளிலிருந்து திரும்பப் பெறுவது, தமிழக மீனவர் பிரச்சனை  இப்படியான முக்கிய பிரச்சனைகளை தீர்த்துவிட்டு உங்களுடைய பராக்கிரமங்களைப் பேசுங்கள். வாய்ச்சொல்வீரர்களாக இருக்கவேண்டாம்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

*Life is all about living in peace*.

*Life is all about living in peace*.Life is not about  ups and down, right and wrong, success and failure. Know that failure simply states t...