#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்!
———————————————————-
கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் இலங்கையை ஆண்ட போது 1921 வது வருட காலங்களிலேயே கச்சத்தீவு இந்தியாவிற்குச் சொந்தம் என்று சொல்லிவிட்டார்கள். அது குறிப்பாக ராமநாதபுர அரசருக்குச் சொந்தமானது என்பதில் ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்கான ரெக்கார்டுகள் இருக்கின்றன. அன்றைய இலங்கையின் வரைபடத்திலும் கட்சத்தீவு இந்தியாவின் பகுதியாகவே தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வரைபடத்திலும் கட்சத்தீவு சேர்க்கப்பட்டிருந்தது! கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே இவையெல்லாம் பேசி முடிவு செய்யப்பட்டவைதான்!
பிறகு ஒரு காலகட்டத்தில் அரசு குடியரசு தின விழாஒன்றை டெல்லியில் மத்திய அரசு ஶ்ரீமாவோ பண்டாரநாயக வை சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தார்கள். பண்டாரநாயக கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு திரும்ப இரண்டு மூன்று நாட்கள் தாமதமாகிவிட்டது! பிரதமர் இந்திராகாந்தி கூட அதிகாரிகளை அழைத்து என்ன ஶ்ரீமாவோ பண்டாரநாயக இந்தியாவைச் சுற்றிப் பார்க்கிறாரா சிங்களராக இருப்பதால் புத்தகயாவை சென்று பார்த்துவிட்டுத் திரும்புகிறாரா? இல்லை உடல்நிலை ஏதும் சரி இல்லையா?ஏன் இன்னும் இலங்கைக்கு திரும்பவில்லை என்றெல்லாம் கேட்டிருக்கிறார்!
இல்லை ஏதோ உங்களிடம் பேச வேண்டும் என்று காத்திருக்கிறார் ஆனால் தயக்கத்துடன் இருக்கிறார் என்பதாக அவரிடம் சொல்லப்பட்டது.
உடனே இந்திரா அம்மையார் அவரை தனது வீட்டிற்கு அழைத்து வீட்டின் பின் வாரண்டாவில் அமர வைத்துப் பேசுகிறார்.அவரது உடல்நிலை பற்றியும் இந்தியாவைச் சுற்றி பார்க்கிறீர்களா என்றெல்லாம் ஆதுரமாக விசாரிக்கிறார்! பண்டார நாயகா ஏதும் பேசாமல் மௌனமாய் இருக்கிறார்!
ஆனால் அவருடன் வந்த இலங்கை வெளி விவகாரத் துறை செயலார் விசயத்தைப் போட்டு உடைக்கிறார்! நாங்கள் கசசத் தீவை எங்களுக்குத் தருமாறு கேட்டு வந்திருக்கிறோம் என்று சொல்கிறார்!
உடனே இந்திரா அம்மையார் அதை எப்படிக் கொடுக்க முடியும்? அது தமிழ்நாட்டின் சொந்தமானது அதை உங்களுக்குக் கொடுப்பது மிகுந்த சிரமமானது என்று சொல்லுகிறார்!
பிறகு ஏதோ சமாதானமாக பேசி இருங்கள் பார்க்கலாம் என்றுவிட்ட பிறகு இந்த தகவல் சென்னையில் முதல்வர் கலைஞருக்கு உடனே தெரிவிக்கப்பட்டது! கலைஞர் அதற்குப் பதில் ஒன்றும் சொல்லவில்லை! பிறகு கேவல்சிங்கும் சட்ட நிபுணர் டி கே பாஸும் டெல்லியில் இருந்து வந்து கலைஞரைச் சென்னைக் கோட்டையில் சந்திக்கிறார்கள்.!
அவ்வாறு சந்திக்கும்போது இலங்கை கச்சத்தீவை தங்களுக்கு வேண்டும் என்று விரும்புகிறது! அதுக்கு பதிலாக இரண்டு வெற்று மணல் பரப்புள்ள சிறு கொடுப்பதாகச் சொல்லுகிறார்கள்! என்று சொல்ல….
முதலில் அது எப்படி முடியும்? என்று கேட்ட கலைஞர் கவனமாக யோசித்து இந்த பிரச்சனையை ஒரு இரண்டு வருடம் தள்ளிப் போடுங்கள் என்று சொல்லுகிறார்! சட்டபூர்வமாக இப்பொழுது முடியாது வேண்டுமானால் அமைதியாக அதை வைத்துக் கொண்டிருங்கள் என்றும் சொல்கிறார்.
அதன் பிறகு கலைஞர் இது குறித்துக் கட்சி கூட்டங்களையும் செயற்குழுவையும் கூட்டி ஆலோசிக்கிறார்! அது பெரும்பாலும் கச்சத்தீவை கொடுக்க கூடாது என்கிற முடிவை எட்டி இருந்தாலும் கலைஞருக்கு அது சொல்லப்பட்டு விட்டது என்பதனால் அதன் நிர்பந்தம் தெரிந்தே இருக்கிறது.
பிறகு 1974 இல் கச்சதீவை இலங்கைக்கு கொடுப்பதற்கான ஒப்பந்தம் கலைஞரின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது ஒப்பந்தம் 1976-ல் போடப்பட்ட போது கலைஞர் ஆட்சியைக் கலைத்து விட்டார்கள். ஆக இரண்டாவது ஒப்பந்தமும் முடிந்தது !இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த ஒப்பந்தமானது இரண்டு நாட்டு பிரதமர்களும் அருகருகே அமர்ந்து கையெழுத்து போட்டு நடக்கவில்லை.
இந்திரா காந்தி அம்மையார் டெல்லியில் கையெழுத்துப் போட்டு அனுப்புகிறார்! அந்த ஒப்பந்தத்தில் பண்டாரநாயக இலங்கையில் இருந்து கையெழுத்துப் போடுகிறார். இந்த ஏற்பாடுகள் எல்லாம் இருநாட்டு வெளி விவகாரத் துறை செயலாளர்கள் கடினமூலமாகவே நடந்தது!
எம்ஜிஆர் எப்படி சட்ட மேலவை தீர்மானம் இல்லாமல் சட்டமேல் சபையைக் மத்திய அரசுக்கு கடிதங்கள் மூலம் கலைத்தாரோ அது போலவும் இதுவும் நடந்தது!
அன்றைய ஜன சங்கத்தின் தமிழ்நாடு தலைவராக இருந்த மதுரை ஜனா கிருஷ்ணமூர்த்தி இதை எதிர்த்து வழக்கு போட வேண்டும் என்று சொன்னார். இது சம்பந்தமாக நானும் நெடுமாறனும் கூட தீவிரமாக இதை மறுக்க வேண்டும் என்றெல்லாம் பேசினோம். குறிப்பாகச் சொன்னால் அந்த வழக்கிறாக நான் ஜனா கிருஷ்ணமூர்த்திக்கு அதிகம் உதவிகள் செய்தேன்! உயர் நீதிமன்றத்தில் இந்த எதிர் வழக்கு ரிட் பெட்டிஷன் ஒரு எண்ணாகக் கூடப் பதிவு செய்ய மறுக்கப்பட்டது. ரிஜிஸ்டாரைக் கேட்டு தலைமை நீதிபதி பேசிய பிறகுதான் அது வழக்கு எண்ணாகப் பதியப்பட்டது அப்போது எங்கள் பகுதியைச் சேர்ந்த வீராச்சாமி அவர்கள் தான் தலைமை நீதிபதியாக இருந்தார்! அவர் நம்பர் பண்ணுங்கள் என்று சொல்லி ஒத்துக் கொண்டார். அதன் பிறகு தான் வழக்கு பதிவானது! எப்படி வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட போது அதற்கு வாதாடிய அவர் வாரிசான குருசாமி நாயக்கரை ஒரு தந்தியடித்து நாங்கள் காப்பாற்றினோமோ அதுபோலத்தான் இந்த கட்சி விவகாரத்தில் இந்த வழக்கைப் பதிவதற்கு அவ்வளவு சிரமப்பட்டோம். இப்படிக் கச்சத்தீவு விவகாரத்தில் பல நுணுக்கமான இன்றைக்கு உள்ள சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர் யாருக்குமே தெரியாத பல விஷயங்கள் அடங்கியுள்ளன. இவற்றையெல்லாம் இன்று யாரும் இந்த வரலாற்று செய்திகளை பேச மாட்டார்கள்.
வெறுமனே கட்சத்தீவை மீட்போம் மீட்போம் என்று இப்போது வாய்ச்சவடால் அடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது!
நிரந்தரத் தீர்வு தேவை!
கடலில் அத்துமீறி தங்கள் எல்லைக்குள் புகுவதாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த பல பத்தாண்டுகளாகத் தொடர்கிறது. இலங்கையிலும் இந்தியாவிலும் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மீனவர்கள் கைது பிரச்னைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை.
கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்தபோது இரண்டு விசைப்படகுகளுடன் ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் கடந்த 2024,அக். 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த அக். 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
நிகழாண்டில் மட்டும் இதுபோன்று மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் 30-ஆக அதிகரித்துள்ளது எனவும், 140 மீனவர்களுடன் 200 மீன்பிடிப் படகுகளும் இலங்கை அரசு வசம் உள்ளது எனவும் அந்தக் கடிதத்தில் முதல்வர் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை ( 2024-நவ.10) கைது செய்துள்ளனர். நிகழாண்டில் மட்டும் 350-க்கும் அதிகமான மீனவர்களை இலங்கை அரசு சிறைபிடித்துள்ளது. இவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண இரு நாடுகளின் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று கூட்டுப் பணிக்குழுவின் 6-ஆவது கூட்டம் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் கொழும்பில் கடந்த 2024,அக். 29-ஆம் தேதி நடைபெற்றது. இதில், தமிழக மீனவர்களுக்கு எதிராக படை பலத்தை தவிர்க்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.
இதற்கு முன்பு, கைது செய்யப்படும் மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்; இந்திய அரசின் தலையீட்டால் விடுவிக்கப்படுவார்கள். இப்போது இந்த நடைமுறை தொடர்ந்தாலும் தமிழக மீனவர்கள் புதுவிதமான பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். கைது செய்யப்படும் மீனவர்களுக்கு பல மாதங்கள் சிறைத் தண்டனையும் கடுமையான அபராதமும் விதிக்கப்படுகின்றன.
கடந்த ஜூலையில் மீன்பிடிக்கச் சென்ற தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 12 பேருக்கு இலங்கை பண மதிப்பில் தலா ரூ. 42 லட்சமும், 10 பேருக்கு தலா ரூ. 35 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போன்று, கடந்த ஆகஸ்டில் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ. 35 லட்சமும், 23 பேருக்கு தலா ரூ. 10 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அந்த நாட்டு சட்டச் சிக்கல்கள் காரணமாக இந்தப் படகுகளை மீட்பது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. படகுகள் பல மாதங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதால் தொழில் ரீதியாக மீனவர்கள் கடும் நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள படகுகள் இலங்கை கடற்படையினரால் சேதப்படுத்தப்படுகின்றன.
இது ஒருபுறம் இருக்க, தமிழக மீனவர்கள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் மீன்வளம் குறைந்து தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இலங்கை வடக்குப் பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்ற போக்கை போக்கி இரு தரப்பில் பேசி தீர்வு ஏற்படவேண்டும். கச்சத்தீவு அருகில் சீனா காரர்கள் இருப்பு வேறு இருக்கிறது . சீனா காற்றாடி மின உற்பத்தி செய்ய இந்த தீவுகளை இரமேஸ்வரம் 14 கிமீ தொலைவில் குத்தகைக்கு எடுத்துள்ளன. இலங்கையை சுற்றி இந்து மகாசமுத்திரம், வங்க கடலில் சீனாவின் நடமாட்டம் இந்திய பாதுகாப்புக்கு நல்லது அல்ல.
#கச்சத்தீவு
#kathatheevu
#ChinaSriLanka
#இலங்கை_சீனா
#இந்துமகாசமுத்திரம்
#indianocean
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
4-4-2025.
Great Service to Tamil World with Great Courage Dedication Enthusiasm Happiness Knowledge Talent Hardwork Truth Dialogue etc!I saw Indira Gandhi agreed to Mrs Srimavo Bandaranayake!
ReplyDelete