#மாநிலசுயாட்சித்தீர்மானம் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதை மீண்டும் மீண்டும் நிறைவேற வேண்டியதுதான்!
தொடர்ச்சியான திமுகவின் செயல்பாடுகளைக் கவனித்துப் பார்க்கும் பொழுது தங்களுக்குத் தேவையான சாதகமான நேரத்தில் மட்டுமே தொகுதி மறு வரையறை, இந்தி எதிர்ப்பு,காவிரி பிரச்சனை,முல்லை ஆறு ,கச்சத்தீவு பிரச்சினை போன்றவற்றை முன்வைத்து பிரச்சாரம் செய்ய ஸ்டாலின் திமுகவினர் தொடங்கி விடுகிறார்கள் !
அதாவது, தங்களிடம் உள்ள பிரச்சனைகளை இப்படியாகத் திசை திருப்பி விடுவதே திமுகவிற்கு வாடிக்கையாக இருக்கிறது.!
நான் ஏற்கனவே கூறியது போல கடந்த 18 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று பல்வேறு கூட்டணிகளில் நட்புடன் தொடர்ந்து இயங்கி வந்த நீங்கள் ஏன் இத்தனை ஆண்டு காலமாக இந்த மாநில சுயாட்சி வரையிலான பிரச்சனைகளை அங்கேயே பேசி நல்லதொரு முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை?
சரி மாநில சுயாட்சி என்றால் என்ன? தமிழகத்தில் முதன் முதலாக மாநில சுயாட்சி பற்றிப் பேசியவர்கள் வலியுறுத்தியவர்கள் தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமன் மற்றும் மபொசி இருவரும் தான்!
அதன் பிறகு அண்ணா காஞ்சி இதழ் பத்திரிக்கையில் மாநில சுயாட்சி மக்களுக்கான உரிமை என்று எழுதினார். 1969இல் டெல்லியில் இருந்து கலைஞர் மாநில சுயாட்சி பற்றிய கலந்தாய்வுக்குச் சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பி. வி.ராஜமன்னார் தலைமையில் மற்றும் ஆந்திராவில் தலைமை நீதிபதியாக இருந்த சந்திரா ரெட்டி, சென்னைப் பல்கலைக்கழக வேந்தராக இருந்த
டாக்டர் ஏ லட்சுமண சாமி முதலியார் போன்றவர்களின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்!
அதற்கு முன்பாகவே 1966 இல் இந்திரா காந்தி ஆட்சியில் மொரார்ஜி தேசாய் தலைமையில் எதிர்க்கட்சி முதல்வர்கள் மாநாட்டில் நிர்வாகச் சீர்திருத்த குழு என்று ஒன்று அமைக்கப்பட்டு மத்திய மாநில கூட்டாட்சி உறவுகள் மற்றும் அவர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய விஷயங்கள் முன்வைக்கப்பட்டன. அதன் பிறகு மொரார்ஜி தேசாய் நிதி அமைச்சர் ஆன பிறகு அந்தக் குழுவிற்கு கர்நாடக கெங்கல் ஹனுமந்தையா தலைமை தாங்கினார். அவர்தான் கர்நாடகாவின் சட்டசபையான விதான் சவுதாவை இறுதியாக 1952 இல் கட்டியவர்!
அது ஒருபுறம் இருக்க அன்றைக்கு இந்திரா தலைமையில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் மாநில சுயாட்சி போக தமிழ்நாட்டிற்கு என்று ஒரு தனிக் கொடி வேண்டும் என்றும் கலைஞர் கேட்டார்! உண்மையைச் சொன்னால் அன்றைக்குத் திமுகவின் தயவால் தான் இந்திரா காந்தி ஆட்சி மத்தியில் அமைந்தது! ஏனெனில் ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்து இந்திரா காங்கிரஸ் ஸ்தாபன காங்கிரஸ் என்று முறிவு ஏற்பட்டிருந்தது. அந்த நேரத்தில் கலைஞர் சொல்லியிருக்கலாமே! எங்கள் தயவில் தானே ஆட்சியில் இருக்கிறீர்கள்! எங்களுக்கு மாநில சுயாட்சியைக் கொடுங்கள் என்று வலியுறுத்தி இருக்கலாமே! ஏன் கேட்கவில்லை!
அதன் பிறகு என்ன நடந்தது? இந்திராகாந்தி அம்மையார் நீதிபதி சர்க்காரியா அவர்களின் தலைமையில் மத்திய-மாநில உறவுகள் குறித்த ஒரு குழுவை அமைத்தார்.
கலைஞர் அமைத்த குழுவும் 1971இல் இந்திரா காந்தி அமைத்த குழுவும் இரண்டு போக்கில் தங்களது அறிக்கையை அளித்தன! அதன் பிறகு என்டி ராமராவ் விஜயவாடாவில் கூட்டிய எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மாநில சுயாட்சியின் படி மாநிலங்களை கலைக்க உரிமை உள்ள 386 வது பிரிவை நீக்க வேண்டும். அனைத்து மாநில உரிமைகளும் காக்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன் பிறகு பாரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீரில் நடந்த மாநாட்டில் வெளி விவகாரத்துறை ராணுவம் மற்றும் தகவல் தொழில் தொடர்புத் துறைகள் போன்றவற்றை மட்டும் மத்திய அரசு வைத்துக் கொண்டு மற்ற உரிமைகளை மாநிலங்களே முடிவு செய்து கொள்ளும்படி விட்டுக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன . மேற்ச்சொன்ன விஜயவாடா கூட்டத்திலும் பாரூக் அப்துல்லா கூட்டத்திலும் கலைஞர் கலந்து கொண்டார்.
அதே பாரூக் அப்துல்லா 1998 -99 வாக்கில் மாநில சுயாட்சி கோரி ஜம்மு காஷ்மீரில் ஒரு குழுவை அமைத்தார். அறிக்கையை பெற்றார்.
அதேபோல் மேற்கு வங்காளத்தில் ஜோதிபாசு தலைமையில் அமைந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கான நிதிப் பங்கீடுகளில் மாநிலங்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் அதன் பரிவர்த்தனைகள் நியாயமாக இருக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது. அதற்கான வெள்ளை அறிக்கை ஒன்றையும் ஜோதி பாசு வெளியிட்டார்!
இப்படி மாநில சுயாட்சி என்பது எல்லா மாநிலங்களிலும் இருந்தும் பல்வேறு காலகட்ட முதல்வர்களால் முன்வைக்கப்பட்ட ஒன்றுதான்! ஏதோ திமுக மட்டுமே முன்மொழிந்தது போல அதற்குப் பிறகு தான் மாநில உரிமைகள் பேசப்பட்டது போல இன்றைய திமுக சொல்வதெல்லாம் வரலாற்றை மறைப்பது தான்!
மாநில சுயாட்சி பற்றி எல்லாருடைய பங்கும் அந்தந்த காலகட்டத்தில் இருந்திருக்கிறது. ஆனால் அந்தந்தக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெறும் அறிக்கைகளாக தான் மீந்து போயின! உதாரணமாகச் சொன்னால் ராஜமன்னார் அறிக்கைகளைப் போல எதையும் நிறைவேற்ற இயலாமல் போனதுதான் மிச்சம்!.
இதற்கு அப்பாலும் மத்திய அரசு நீதிபதி பூஞ்சிக் குழு என்று ஒன்றை அமைத்தது. அதில் மாநிலங்களின் அனுமதி தேவையின்றியே மத்திய அரசு அப்பகுதிகளுக்கு ராணுவத்தை அனுப்பலாம் என்று ஒரு முடிவு செய்யப்பட்டது. அப்போது மன்மோகன் சிங் அரசுதான் ஆட்சி செய்து கொண்டிருந்தது கூட்டணியில் இருந்த திமுக அது எப்படி மாநிலங்களின் அனுமதி இன்றி நீங்கள் ராணுவத்தை அனுப்ப முடியும் என்று ஒரு கேள்வியைக் கூட கேட்கவில்லை!
இப்படி தேவைக்கேற்றார் போல் நேரத்திற்கு ஏற்றார் போல் மாநில சுயாட்சி அது இது என்று பேசிக்கொள்வது! மத்தியில் கூட்டணி சேர்ந்து விட்டால் அங்கு எது நடந்தாலும் வாய் மூடி மௌனமாக அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பது! இவர்கள் உளப்பூர்வமாகவா மாநில சுயாட்சிக்கான தீர்மானத்தைக் கேட்கிறார்கள்! அப்படி எல்லாம் இல்லை! சீசனுக்கு ஏற்றார் போல முல்லையாற்றுக்கு ஒரு தீர்மானம் கச்சச் தீவிற்கு ஒரு தீர்மானம் மாநில சுயாட்சிக்கு ஒரு தீர்மானம் என்று சும்மா சும்மா கொண்டு வந்து என்ன பிரயோஜனம்! அனைத்தையும் குப்பையில் போடவா! ஆட்சியிலும் பதவியிலும் கூட்டணியிலும் இருக்கும் போது எதையும் சாதிக்காமல் இப்பொழுது வந்து கூச்சலிட்டு என்ன செய்வது!
எத்தனை வருட காலங்கள் போய்விட்டது! நேரத்திற்கு ஏற்றார் போல் தீர்மானங்களைப் போட்டுக் கொள்வது என்பது தங்களுக்கான சுயநலமும் சந்தர்ப்பவாதமும் தலையெடுக்கும் போதுதான் எனில் இந்தக் கண்துடைப்பு நாடகம் எத்தனை நாளைக்கு!?
திரும்பவும் இன்று 15-4-2025 முதல்வர் மீண்டும் மாநில சுயாட்சி முதல்வர் தீர்மான முன்மொழிவில்;
‘’இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும்,ஒன்றிய-மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகளைமேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோசப் அவர்களைத் தலைவராகக் கொண்டகுழுஅமைக்கப்படுகிறது."என சொல்லியுள்ளார்.
#மாநிலசுயாட்சித்தீர்மானம்
#நீதிபதிசர்க்காரியா_மத்தியமாநிலஉறவுகள்
#ராஜமன்னார்குழு
#பூஞ்சிக்குழு
#StateAutonomy
#pvrajamannarcommissin
#centrestaterelations
#sarakiyacommission
#poonchicommission
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
15-4-2025
No comments:
Post a Comment