#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977-
ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங்கள் ஞாபகத்தில் இருக்கிறது! சொல்லின் செல்வர் ஈவேகிசம்பத் துவக்கத்தில் எளது Political mentor. எனவே பழ. நெடுமாறன் உடன் பயணித்தேன்.
1977ல் இல் அவர் சென்னை பொது மருத்துவமனையில் இறந்தபோது ஒரு நல்ல வழிகாட்டியை அரசியல்ச் சிந்தனையாளரை இழந்துவிட்டோம் என்று என் மனம் அதிகம் துக்கம் அடைந்தது. திருச்சி தேவர்ஹாலில் ஆலோசித்து முடிவெடுத்த பின்பு தான் காங்கிரஸில் இணைந்தார்கள்.
அவருடன் இருந்த ஞாபகங்கள் எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது..
சம்பத் அவர்களிடம் ஒரு நல்ல பழக்கம்! என்னவெனில் சாதாரணமாக யார் ஒருவர் அல்லது தொண்டர்கள் அல்லது அந்த நபர் தனக்கு அறிமுகமே இல்லாமல் இருந்தாலும் கூட அவரிடம் இருந்து கடிதம் வந்தால் அதற்குப் பதில்க் கடிதம் எழுதிப் பொறுப்பாக அனுப்பி வைப்பார்! அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் அது!
அதுபோல சம்பத் அவர்கள் வீட்டில் இல்லாத போதும் தொலைபேசி வந்தால் யார் யார் பேசினார்கள் என்று குறித்து வைத்துக் கொண்டு அதை அவர் வீட்டுக்கு வரும்போது அவர் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்கிற நடைமுறையும் இருந்தது!
பணிகளைஒரு அச்சிட்ட தாளில் குறிப்பெடுத்துக் கொள்வார். காலை 8 மணி அளவில் தொடங்கி இரவு 9 மணி வரையில் தனது நிகழ்ச்சி நிரல்களை அதில் குறித்து வைத்தும் கொள்வார்!
இப்படியான வாடிக்கை இன்றளவிலும் என்னில் தொடர்கிறது! பல நுட்பமான தன்மைகள் கொண்டவர் ஈ விகே சம்பத்! அவருடன் பழகி வந்த நாளில் தெரிந்து கொண்ட அறிந்து கொண்ட பழக்கங்கள் பலவும் இருக்கின்றன.
அதை நானும் நெடுமாறனும் கூட இன்றளவிலும் பாவிக்கிறோம்.அவர் யாரைச் சந்திக்க வேண்டும் என்ன பேச வேண்டும் என்பதை எல்லாம் அன்றைய நாளின் படி அந்த தினத் தாளில் குறித்து கொள்வார்.
நான் கல்லூரி காலத்தில் எப்பொழுதும் ஏதாவது ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டுதான் சட்டக் கல்லூரியில் திரிந்து கொண்டிருப்பேன். அது தமிழ்ப் புதினங்களாக இருக்கும் அல்லது ஆங்கிலப் புதினம் அல்லது கட்டுரைப் புத்தகங்களாக இருக்கும்!
நான் அவரைப் பார்க்க போகிறேன் என்றால் அவர் என்ன புத்தகங்கள் வைத்திருக்கிறீர்கள்? என்ன படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று ஆர்வமாகக் கேட்பார்! நான் எதையாவது வித்தியாசமாகப் படித்துக் கொண்டிருப்பேன் என்று அவருக்குத் தெரியும்! பலமுறை அவரோடு அண்ணா சாலையில் ஹிக்கின் பாதம்ஸ்க்கும் அன்றைக்கு இருந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸிற்கும் போய் இருவரும் புத்தகங்களைப் பார்த்து வாங்கி இருக்கிறோம். அதேபோல் ஓரியண்ட் லாங்மேன் ஆக்ஸ்போர்டு பதிப்புகள் விற்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் பில்டிங்கில் போய் நூல்களை வாங்கி உள்ளோம்! அவரே சில புத்தகங்களை வாங்கி இதைப் படி என்று என்னிடம் கொடுப்பார்..
அதேபோல் வேறு ஒன்றையும் அவர் முக்கியமாகச் சொல்லுவார்! அமெரிக்கத் தூதரகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஜெர்மன் தூதரகம் போன்றவற்றில் வரும் சஞ்சிகைகளையும் சோவியத் பதிப்புகளையும் சென்று வாங்கிப் படித்தால் தான் உலக அரசியல் தெரியும் என்று சொல்லுவார்!
ஒரு முறை அவருடன் திருநெல்வேலி சென்றபோது அங்கு பிரசித்தி பெற்ற எஸ்.ஆர. சுப்பிரமணிய பிள்ளை புத்தகக் கடைக்குச் சென்று
அங்கு திருப்பதி வேங்டேஸ்வர பல்கலைகழக பேராசிரியர் சுப்புரெட்டியார் எழுதிய வைணவம் குறித்த ஒரு நூலை அவர் வாங்கியதெல்லாம் உண்டு. எங்கள் கிராமத்திற்கு வந்து திருவேங்கடத்தில் போலீஸ நிலைய திடலில் பேசினார்.
இன்று சம்பத் சாலை பெயர் சூட்டப்பட்ட அன்றைய நாள் சாலையில் இருந்த அவரது இல்லத்தில் நான் அவரைச் சந்திக்கப் போகும் போது பெல் பாட்டம் அணிந்து முழுக்கை சட்டையை அதில் டக் பண்ணிக் கொண்டு ஹிப்பி முடிவைத்து வித்தியாசமான style கண்ணாடி சகிதம் சம்பத் அவர்களின் மகன் ஈவேகேஎஸ்.இளங்கோவன் இளமையாகக் காட்சி அளிப்பார்! சுலோச்சனா சம்பத் அவர்கள் இனிமையான வரவேற்பு கொடுத்து உபசரிப்பார். இளங்கோவன் எங்கு போனாலும் சைக்கிளில்தான் போவார்.1980 களில் டிஸ்கோ டான்ஸ் மிகப் பிரபலமாக இருந்தது. இளங்கோ அந்த நடனத்தை நன்றாக ஆடுவார். நினைத்துப் பார்க்கும்போது அவரும் இப்போது இல்லை!. காலங்கள் கண் முன்னே மாறிக்கொண்டே வந்து விட்டது!இன்னொரு புதல்வர் கொளதமன் அங்கே இருந்த அச்சகத்தை கவனித்து கொண்டார். புதல்வியின் பெயர் மிரண்ட என நினைவு.
நணபர் இனியன் சம்பத் கடைசி புதல்வர்.
ஒரு உத்தமமான அருமையான தலைவரின் நினைவு நாளில் அவருடன் நான் பயணித்து அறிந்தது நிறைய என்பதாலும் இந்த நாளில் அவரது நினைவுகளுக்கு என் மனப்பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! ஈரோடில், வெங்கட நாயக்கர் கிருஷ்ணசாமியின் மகனாக பிறந்தவர், ஈ.வெ.கி.சம்பத். நீதிக்கட்சியிலும் பின்னர் திராவிடர் கழகத்திலும் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 1949ல் பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து அண்ணாதுரை பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தொடங்கிய போது அவருடன் சென்ற முக்கிய தலைவர்களுள் ஒருவர். சம்பத் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். 1961ல் திராவிட நாடு கொள்கை தொடர்பாக அண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திமுகவிலிருந்து பிரிந்து சென்று தமிழ் தேசியக் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார்.. அதில் அவரது நண்பர்களான கண்ணதாசன், சிவாஜி கணேசன், பழ. நெடுமாறன் ஆகியோர் அக்கட்சியில் மற்ற முக்கிய தலைவர்கள் ஆவார். 1962 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இக்கட்சி படுதோல்வியடைந்தது -1964ல் சம்பத் தன் கட்சியை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைத்து விட்டார். இவர் மகன் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் முன்னாள் இந்திய மத்திய அரசு அமைச்சர் மற்றும் காங்கிரசின் தமிழ்நாடு மாநிலத் தலைவர்களுள் ஒருவர், இவர் தி.மு.க.விலிருந்தபொழுது "Sunday Times" என்னும் ஆங்கில வார இதழுக்கு ஆசிரியராகவும் உரிமையாளராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தார்.மேலும் ஜெயபேரிகை, தமிழ்ச் செய்தி ஆகிய இதழ்களை சொந்தமாக நடத்தியுள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசன் கவிஞர் கண்ணதாசனுக்கு மனத்தாங்கல் ஏற்பட்டு போது சிவாஜி இல்லம் சென்று சமதானம் செய்தார் சம்பத். கடந்த 1977
தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சிக்கு சம்பத்தையும் நெடுமாறனும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று இந்திரா காந்தி அறிவித்த நிலையில் சம்பத் மறைந்தார். அன்று தமிழக காங்கிரஸ் கட்சியில்
நெடுமாறன் அணி ஜிகே மூப்பனார் அணி
என இரு துருவங்களாக இருந்தது.
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
23-2-2025.
No comments:
Post a Comment