#*எதை நோக்கிச் செல்கிறது இன்றைய ஸ்டாலின் திமுக*?
————————————
கடந்த காலங்களில் அதாவது 2018 வரை தலைவர் கலைஞர் இருந்த போது திமுக சார்பில் ஒரு போராட்டம் நடந்தால் அதை ஏற்றுப் போராட்டத்தை நடத்த முயலும் மாவட்ட அனைத்து கிளை உறுப்பினர்களும் நிர்வாகிகளும் வருகிற தேதியில் கலைஞரின் வேண்டுகோளின்படி/அறிக்கைப்படி/அறிவுறுத்தலின்படி இந்தப் போராட்டம் நடக்கும் என்று தான் தொண்டர்களைக் கூட்டி நடத்துவார்கள்.
இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க அவரது உத்தரவுப்படி இந்தப் போராட்டம் நடக்கும் என்று ஒப்புதல் அளிக்கிறார்கள்.இம் மாதிரியான அவல முறை யார் காலத்தில் ஆரம்பித்தது என்றால் ஜெயலலிதா காலத்தில் ஆரம்பித்தது! அவர் ஏதாவது சொன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆணைப்படி உத்தரவுப்படி என்று தாள்பணிந்து அதிமுக காரர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இன்று திமுகவும் அதை பின் தொடர்கிறது என்றால் காரணம் வேறு எதுவும் இல்லை அண்ணா திமுகவிலிருந்து அனைவரும் திமுகவிற்குள் வந்துவிட்டார்கள் என்று அர்த்தம்!
அந்த வகையில் அண்ணாவும் கலைஞரும் தங்களது போராட்ட அறிக்கைகளை எவ்வளவு கண்ணியமாக மக்களுடன் இணைந்து எழுதிப் போராடிக் களம் கண்டார்களோ அப்படி அல்லாமல் இப்பொழுது எல்லாம் உத்தரவு /ஆணைக்கிணங்க என்று வருவது அவர்கள் கட்டிக்காத்த ஜனநாயக அரசியல் மாண்பைக் கேலிப் பொருள் ஆக்குகிறது. இந்த உத்தரவு ஆணை என்பதெல்லாம் அடிவருடிகள் அதிகாரத்திற்கு அடிபணிவதாகத் காட்டிக்கொண்டு தங்கள் பதவியை நாடி- நலன் கருதி செயல்படுவது அன்றி வேறென்ன.! பதவி கொடுத்து அழகு பார்த்து என்று ஜெயலலிதா காலத்தில் ஒரு சொற்றொடர் 'ஶ்ரீ ராமஜயம்' போல் எழுதுவார்கள். இப்போது இவர் காலத்திலும் அழகு பார்த்தல் தொடர்கிறது. இவையெல்லாம் மக்களாட்சி தத்துவத்தை கேலி செய்வது ஆகும்.
துதிபாடிகளின் வேடிக்கைகள் என்ன சொல்ல…
கலைஞர் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் உத்தரவுக்கு இணங்க ஆணைக்கிணங்க என்ற வார்த்தைகளை மனுவில் பார்த்தாலே கோபப்படுவார்! கலைஞர் தன் பேச்சுவாக்கில் சொல்லும் போது கூட “மகாபலிபுரம் என்று ஏன் சொல்கிறார்கள் மாமல்லபுரம் என்று தானய்யா சொல்ல வேண்டும்! சென்னை மவுண்ட் ரோட்டை எனது ஆட்சியில் அண்ணா சாலை என்றுபெயர் மாற்றினேன். பிறகு மகாபலிபுரம் மவுண்ட் ரோடு என்று இன்னமும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள் இவர்களைக் கட்டிக்கொண்டு ஏன் மாரடிக்க வேண்டும்” என்று கோபிப்பார்.
அப்படியெல்லாம் இருந்த நிலை மாறி ஸ்டாலின் கலாச்சாரம் இன்றைக்கு ஜெயலலிதாவின் கலாச்சாரமாக ஆகிவிட்டது.! இது அதிமுக பரிவாரம் திமுகவிற்குள் வந்துவிட்டது என்பதைத் தானே காட்டுகிறது!
இதுதான் திமுகவின் சுயமரியாதையா இதுதான் பகுத்தறிவா இல்லை இதுதான் திராவிட மாடலா? இப்படித்தான் ஸ்டாலின் திமுக இருக்கிறதே ஒழிய அது பழைய திமுக அல்ல! இப்படி எல்லாம் நல்லது சொல்ல வந்தால் அதை எடுத்துக்கொண்டு மரியாதை இல்லாமல் பேசிக்கொண்டு ஒரு நான்கு பேர் ஒன்றும் தெரியாமல் முட்டாள் தனமாக வந்து திமுகவிற்கு வேப்பிலை அடிக்கிறேன் என்று நிற்பார்கள்!
ஆணைக்கிணங்க என்று அதிகாரப் படிநிலைக்கு வந்து விட்டார்கள் எனில் மக்களாட்சி என்பதற்கு என்ன அர்த்தம்! இன்றைய திமுக எங்கே செல்கிறது? இப்படிச் சொல்வதை ஸ்டாலின் மகிழ்ந்து ஏற்றுக் கொள்கிறாரா? ஒரு காலத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் அண்ணா அவர்கள் அரசு பணித்துறைகளில் இருந்த காவல்துறை அதிகாரி மாவட்ட வருவாய் அதிகாரி என்பதையெல்லாம் காவல்துறை அலுவலர் மாவட்ட வருவாய் அலுவலர் என்று மாற்றவேண்டும் என்று முதல் கோப்பில் கையெழுத்து இட்டார்.
அந்தக் காலங்கள் நினைவில் வந்து போகிறது!
அரசியலில் கொள்கைப் பிடிப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு என்பது வேடிக்கை பொருளாகிப் போன இக்காலத்தில் கொள்கைக்காக ஒருவர் பெரிதாக என்ன செய்துவிட முடியும்?எனும் கேள்விக்கு, அதிசயப் பதிலாக ஒரு நாள் அமையும்
#தமிழகஅரசியல்
#திமுக
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
22-2-2025.
No comments:
Post a Comment