Sunday, February 16, 2025

#*திராவிடம்* #*Drvida*

#*திராவிடம்* #*Drvida* 
————————————
திராவிடம் அல்லது இன்று நிலவும் திராவிடியம் என்கிற சொல் வரலாற்றுப் பூர்வமாக எப்படி வந்தது என்பதை அதன் மூலத்திலிருந்து அறியாமல் அவர்ரவர் மனம் போன போக்கில்  திராவிடத்தை வகை பிரிக்கின்றனர்! 

பொதுவாக இனங்களின் யாப்பு என்கிற வகையில் திராவிடம் வந்ததா? இல்லை அது சிறு சிறு  குழுக்களின் பகுதியாக இந்தியாவில் நிலவி வந்ததா? என்பதை ஆராய வேண்டும்! 

வடக்கு  தெற்கு எனும் இரட்டை   நிலையில்   மட்டும் திராவிடம் இருந்ததில்லை!  சில நேரம் சில சொற்கள் திசை சொற்கள் ஆகவே இருக்கின்றன!அத்தகைய குறிப்புகள்  இந்தியாவின் வடக்கிலும் நிலவி வந்திருக்கிறது! 

ஏற்கனவே புழங்கி வந்த திராவிடம் என்ற சொல்லை பெரியார் எப்படி அரசியல் யாப்பாக மாற்றினார் என்பது ஒருபுறம் இருக்க இந்தியாவில் வாழ்ந்த பல்வேறு மக்கள் குழுக்களுக்கு இடையே திராவிடம் இருந்திருக்கிறது. ராகுல் டிராவிட் போன்ற கிரிக்கெட் வீரருக்கு பின்னொட்டுப் பெயராக இருக்கிறது திராவிடம். நாட்டின் தேசிய பாடலில் திராவிட உத்கல வங்கா என்று குறிப்பிடப்படுகிறது.

திரமிள திராவிட என வரலாற்றில்  காஷ்மீர பண்டிட்கள், ஆதி சங்கரர், இராமானுஜர்,தாகூர், மனோன்மணியம் சுந்தரனார்,கால்டுவெல், மாக்ஸ்முல்லர் சொன்னது போல திராவிடத்தை மறுக்க முடியாது.திராவிட சிசு திருஞானசம்பந்தரை, திரவிட வேதம் நாலாயிர திவ்விய பிரபந்தத்தை என சொல்லாடல்கள் வழக்கில் நீண்ட காலமாக உள்ளன.

பி.டி. சீனிவாச அய்யங்கார், நீலகண்ட சாஸ்திரி, சத்தியநாத அய்யர், கே. கே. பிள்ளை போன்ற வரலாற்று அறிஞர்கள் மற்றும் மறைமலை அடிகள், திருவிக, நாவலர்  சோமசுந்தர பாரதி போன்றவர்களின் பார்வையை இந்த விடயத்தில் கவனிக்க வேண்டும்.

வட மாநிலங்கள் முழுவதையும் எப்படி ஆரிய வகைப்பாட்டில் அடக்கமுடியாதோ அதேபோல் தெற்குப் பகுதி முழுமையும் திராவிடம் என்கிற வகைப்பாட்டில் அடக்க என்பதுதான் நிதர்சனம் .

ஆக ஆரிய திராவிட பேதம் என்பது ஒரு அரசியல் யாப்பாக வகைப்படுத்தி கொள்ள வேண்டி வந்தது.
அதாவது இது மாதிரியான குறிப்பான சொற்கள் வழியாக அரசியலைக் கட்டமைக்கும் போது அது எல்லா தரப்பு மக்களுக்குமான குறிப்பாக இந்தியாவின் தென்பகுதி முழுமைக்கும் ஏற்ற ஒன்றாக இருக்கும்! ஆனால் தமிழ் தேசியம் திராவிடம் என்று மறுபடியும் தமிழ்நாட்டுக்குள்ளேயே அவை கருத்தில் ஒற்றை நிலை அடைந்திருப்பதை என்ன செய்வது! இந்த இடத்தில் அண்ணா பெரியார் பேசிய திராவிடத்தை முன்னேற்றக் கழகமாக மாற்றியதை மறந்து விடக்கூடாது!

எல்லாச் சொல்லும் அதிகாரத்திற்கும் வர்க்கத்திற்கும் அதன் நலன்களுக்கும் ஏற்றவாறு தான் கட்டமைக்கப்படும் என்பது உண்மையானால் எல்லா தேசியங்களும் தனித்தன்மையோடு நில எல்லைகளையும் கொண்டிருக்க வேண்டுமேயானால்   அதற்கான நடைமுறை சாத்தியங்கள் என்ன என்பதை விட்டுவிட்டு யாரேனும் ஒருவரை எதிரியாக பாவித்து கொண்டு ஒருவருகொருவர் சுயலாபங்களை அடைந்து கொண்டிருக்கும் இந்த அரசியல் நிலைக்கு எதற்கு இவ்வளவு உதாரணங்கள். இடைநிலையில் தான் மிக மோசமாக எந்தத் தகுதியும் அற்று வெறும் வீர முழக்கங்களை வைத்துக்கொண்டு ஆபத்தாக உள்ளே நுழைகிறார்கள்!

இப்படி எந்தப் பார்வையும் இல்லாமல் இன்றைக்கு திமுகவில் இருக்கக்கூடிய பலருக்கும் புதிதாக வந்த பலருக்கும் திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாமல் பதவியைக் கேட்டு வாங்கிக் கொடுத்துப் பெற்றுக்கொண்டு பிறகு சாதிகள் இல்லை என்று பேசிக்கொண்டு அதே சாதியை வாக்கு வங்கிக்காகப் பயன்படுத்திக் கொண்டு இறுதியில் அந்தப் பலன்கள் எங்கே சென்று குவிகின்றன என்பதைப் பார்க்க வேண்டி இருக்கிறது!

ஒரு நல்லாட்சிக்குத் தேவை திராவிடமா? ஆரியமா? தனித்தமிழா? எது வேண்டுமானாலும் யாப்பாக இருக்கட்டும். பல்வேறு நாடுகளில் எப்படி தேசிய இனங்கள் இணைந்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறதோ வளர்ச்சி அடைகின்றனவோ அதை நோக்கி தான் நகர வேண்டும்!

இதையெல்லாம் மக்கள் மன்றத்தில் விளக்கமாகச் சொல்லி எடுத்துரைக்க தகுதியான ஆட்களை எல்லாம் இன்றைய ஸ்டாலின் தலைமையிலான திமுக வெளியே தள்ளி வைத்துவிட்டு தங்கள் குடும்பப் போக்கில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய திமுக ஆட்சி பலவற்றையும் கவனத்தில் எடுக்க தவறி பல்வேறு குற்றங்கள் நடக்கும் மாநிலமாக  தமிழ்நாட்டைமாற்றி இருக்கிறது! . எது எப்படி இருந்தாலும் ஒரு ஆட்சிக்கு அது எந்த வகையான ஆட்சியாக இருக்கட்டும் அதற்கான அறிவு ஜீவிகள் குறைந்து வருவது அல்லது இல்லாமல் போவது அதன் எதிர் காலத்திற்கு ஆபத்து! மற்றபடி எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கிவிட முடியாது அவ்வளவுதான்! 

#திராவிடம் #Drvida 
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
16-2-2025.
.


No comments:

Post a Comment

Stress, anxiety and depression are caused when you are living to please others*.

*Stress, anxiety and depression are caused when you are living to please others*. Stop worrying about other people understanding you. Believ...