பேராசிரியர் நா.வா. என்ற
நா . வானமாமலை
45 ஆவது நினைவு நாள் இன்று.
(02.02.2025). அவர் நூற்றாண்டு நினைவைப் போற்றுவோம்.
பேராசிரியர் நா.வா.நினைவு நாளில் [ 02.02.1980 - 02.02.2025] அவர் குறித்த பல அறிஞர்களின் கருத்துகள் :
கா. சிவத்தம்பி ( தாமரை)
•••
~ சோழப் பேரரசின் உத்தியோகபூர்வமான சன்னது பெற்ற கவிச்சக்கரவர்த்திகளான ஒட்டக்கூத்தர் ஜெயங்கொண்டார் ஆகியோரது பெயர்களுடனல்லாது அப்பட்டத்தை உத்தியோகபூர்வமாகப் பெறாத கம்பனுடைய பெயருடனே கவிச்சக்கரவர்த்தி என்னும் விருது நாமம் சேர்த்துப் பேசப்படுவது போன்று நான் வானமா மாலை அவர்களும் உத்தியோக ரீதியில் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக விளங்காவிட்டாலும் பேராசிரியர் என்ற அடைமொழி அவருடைய பெயருடன் மதிப்பர்த்தத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
~ செ.யோகநாதன் ( மல்லிகை )
•••
தற்கால படைப்பிலக்கியத் துறையில் பேராசிரியர் நா.வா. விற்கு உள்ள ஈடுபாடு மிகவும் வியத்திற்குரியது. சிறுகதை கவிதை நாவல் ஆகிய துறைகளில் முற்போக்குச் சிந்தை யோடு ஈடுபட்டு வருகின்றவர்களுக்கு இவர் பிரியமான தோழனும் ஆசானும் விமர்சகனும் ஆவார். புதிய சிந்தனைகளை புகுத்தி மக்கள் இயக்கத்திற்கு வலுவூட்ட எழுதுபவர்களை அவர் தட்டிக் கொடுப்பதில் முன் நிற்பவர் அவரது சிந்தனையால் சக்திமிக்க எழுத்துக்களால் அவருக்கு மாணவரானோர் தமிழ் வழங்கும் இடமெல்லாம் வாழ்கிறார்கள். இவ்வளவுக்கும் நடுவே அவர் மிகவும் அமைதியாக, அடக்கமாகப் பணிபுரிகிறார். தமிழ் உலகின் பல துறைகளும் மேன்மை பெற உழைக்கின்றார்.
~ க.நா. சுப்பிரமணியம்
•••
நா.வா.வின் *தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் * என்ற தொகுப்பு குறித்து தம்முடைய இலக்கிய வட்டம் இதழில் க. நா.சுப்பிரமணியன் எழுதுகிறார் :
பட்டணத்து நெய் ரக நாடோடிப் பாடல்களுக்கு பழகிப்போன காதுகளுக்கு நா. வானமாமலை தொகுத்தளித்துள்ள தமிழ்நாட்டுப் பாமரர் பாட்டு அவ்வளவாகச் சுவைக்காமல் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.கலப்படமில்லாத அயன் சரக்கு இது என்று ஓடிக்கொண்டே வாசிப்பவன் கூடத் தெரிந்து கொள்ளும்படியாகத் தொகுத்திருக்கிறார். குறிப்புகள் சேர்த்து இருக்கிறார். இப்பாடல்கள் அனைத்தும் ஒரு மாவட்டத்தின் ஒரு சிறு பகுதியில் பாடப்படுவன என்று முகவுரையிலேயே தொகுப்பாசிரியர் குறிப்பிடுகிறார். இருந்தும் கூட இதைச் சேகரிப்பதில் காட்டப்பட்டுள்ள சிரத்தையும், எடுத்துக் கொண்டுள்ள சிரமமும் பாராட்டப்பட வேண்டியதாகும்.
இவையெல்லாம் அவரது படைப்புகள் குறித்த கருத்துகளாகும்.அவர் மகள் கலாவதி வீட்டில்( கோர்பா, மத்திய பிரதேசம் ) தனது சிந்தனையை நிறுத்திக் கொண்ட நேரத்தில் - அதனை ஒட்டி எழுத்தாளர் சுஜாதா, பேராசிரியர் நா வானமா மலையின் திடீர் மறைவு என்னை கலக்கி விட்டது. அவருடன் ஓரிருமுறை கடிதத் தொடர்பு கொண்டிருக்கிறேன். நேரில் சந்தித்ததில்லை. பல புத்தகங்களில் இலக்கியம், வரலாறு, மானுடவியல் சொல்லாக்கம்,நாட்டுப் பாடல் ஆய்வுக்காக அவர் நடத்திய காலாண்டு இதழ் மூலமாகவும் அவருடன் நிறையப் பரிச்சயம் எனக்கு உண்டு. நாட்டுப்புறப் பாடல்களிலும்,அறிவியல் முறை ஆராய்ச்சியிலும் அவருக்கு இருந்த ஈடுபாடு எனக்குப் பலப்பட்டு அவர் புத்தகங்களை எல்லாம் தேடி படித்தேன்.தமிழர் நாட்டு பாடல்களில் அவர் தொகுப்பு இன்றைக்குச் சிறந்தது. பெர்க்லி பல்கலைக்கழக இளம் ஆய்வாளர் ஒருவர் தமிழ்நாட்டுப் பாடல்களில் ஈடுபட்டு ஆய்வு முறைகளை அறிந்து கொள்ள வானமா மலையை வந்து சந்தித்திருக்கிறார். பாரீஸின் யார் பாங் பல்கலைக்கழக இந்திய இயல் பிரிவில் ஒரு துறையில் பேராசிரியராக இருந்த பெண்மணி தமிழ்நாட்டு ஆசாரி இனங்களின் பழக்கவழக்கங்களை ஆராய நெல்லை மாவட்டத்திற்கு வந்து வானமா மலையை நாடி இருக்கிறார். ரஷ்யாவிலும் அவர் புத்தகம் பரவி இருக்கிறது. வானமா மலை அவர்கள் சாகித்திய அகாடமியின் பார்வையில் சிக்காதது எனக்கு மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது. அதற்கு அவருடைய இடதுசாரிச் சிந்தனைகள் காரணமாக இருக்கலாம் என்றால் அந்த ஆச்சரியம் வெறுப்பாக மாறுகிறது கணையாழியில் எழுதுகிறார்.
No comments:
Post a Comment