Wednesday, February 19, 2025

#கதைசொல்லி(காலண்டிதழ்) இதழ் 38. நல்ல அர்த்தமுள்ள சில தமிழ் #பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு...

#கதைசொல்லி(காலண்டிதழ்) இதழ் 38.
தயாராகி வருகிறது. அடுத்த வாரம் வெளி வரும்.
கிரா, நிறுவன ஆசிரியர்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன், 
ஆசிரியர்.
••••
நல்ல அர்த்தமுள்ள சில தமிழ் #பழமொழிகள்  சிந்தித்து  ரசிப்பதற்கு...

1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.
4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.
5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.

6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
7. கரந்தப் பால் காம்பில் ஏறாது.
8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயை தாண்ட கால் இல்லை.
9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.
10. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். 
மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான்.

11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.
12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?
13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல, கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல, சில்லரைக் கடன் சீரழிக்கும்.
14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. (எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்).

16. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?
(இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?)
17. ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது.. (எல்லாம் காலத்தின் கோலம்.)
18. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).
19. உள்ளப் பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு மனம் ஏங்குதாம்.
20. இறுகினால் களி. இளகினால் கூழ்.

21. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.
(யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்)
22. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.
(பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது)
23. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
(எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது).
24. விசாரம் முற்றினால் வியாதி. (கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்).
25. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
(நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.)

26. காற்றில்லாமல் தூசி பறக்காது.
(நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி)
27. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.
(நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்).
28. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.
(துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?)
29. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.
(பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி)
30. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.

31. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.
(தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது.
32. வாங்குகிற கை அலுக்காது.
(வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது.)
33. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும்.
(என்ன சாமர்த்தியம் பாருங்கள்!)
34. உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?
35. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.

36. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.
37. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.
38. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். 
ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.
39. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான், 
அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.
40. ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?

41. இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்?
42. இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்?
43. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
44. இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?
45. உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
19-2-2025.


No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...