நேற்றைய (27/04/2018) மின்னம்பலம் இணைய இதழில் சென்னை மாநகரத்தோடு காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களின் பகுதிகளை இணைத்து மகா சென்னையாக (Greater Chennai) உருவெடுப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பான எனது பத்தி வெளிவந்துள்ளது.
http://www.minnambalam.com/k/2018/04/27/32
சிறப்புக் கட்டுரை: விரிவாகும் சென்னையில் உருவாகும் சிக்கல்கள்!
சென்னை மாநகர விரிவாக்கம் - விவாதத்துக்கான புள்ளிகள்
சென்னை மாநகரோடு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தின் பகுதிகளை இணைத்துச் சென்னைப் பெருநகரின் எல்லைகளை விரிவுபடுத்தத் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
சென்னை ராஜதானியின் தலைநகராக ஒரு காலத்தில் சென்னை மாநகரம் விளங்கியது. ஆனால், மாநகர அந்தஸ்து பெற்றாலும் சென்னை மாநகரின் அடிப்படை திட்டங்களையும் அதன் நிர்வாகத்தையும், சட்ட விதிகளையும் 1957ஆம் ஆண்டு முறையாக சென்னை மாகாண அரசு இறுதிப்படுத்தியது. தமிழ்நாடு அரசின் நகரத் திட்ட இயக்குநகரத்தால் வடிவமைக்கப்பட்ட மெட்ராஸ் இடைக்காலத் திட்டம், 1971ஆம் ஆண்டு பன்முக நிறுவனக் குழுவால் தயார் செய்யப்பட்டு, 1974ஆம் ஆண்டு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) உருவாக்கப்பட்டது. பெருகிவரும் மக்கள்தொகையையும், நகரமயமாதல் மற்றும் தொழில் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு 2012இல் முதல்கட்டமாக புறநகர்ப் பகுதிகள் சென்னைப் பெருநகருடன் இணைக்கப்பட்டன. இப்போது இரண்டாவது கட்டமாக அரக்கோணம் வரை, இன்னொரு பக்கம் மீஞ்சூர் வரை சென்னைப் பெருநகர் என்று விரிவாக்கம் செய்ய சிஎம்டிஏ தயாராகிவிட்டது.
1987இல் சென்னை மண்டல வளர்ச்சி நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது. எம்ஜிஆர் இறந்துவிட்டதால் அது மேற்கொள்ளப்படவில்லை. சென்னை நகரப் பெருக்கத்தினால் தமிழகத்தின் தலைநகரைத் திருச்சிக்கு மாற்ற வேண்டுமென்று எம்ஜிஆர் சொன்னதும் உண்டு. 2009இல் திமுக ஆட்சியில் பெருநகர வளர்ச்சிக்காக முறையான ஆய்வு நடத்தித் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
சென்னையின் உள்கட்டமைப்பு
கோயம்பேடில் ஒருங்கிணைந்த புறநகர் பேருந்து நிலையம், மக்கள் கூடும் தியாகராய நகர், பாண்டி பஜார், கோயம்பேடு போன்ற இடங்களில் பல அடுக்கு வாகன நிறுத்த வளாகங்கள், கோயம்பேடு காய்கறி மொத்த அங்காடி, உணவு தானியங்களுக்கான மொத்த விற்பனை அங்காடிகள், காய்கறிக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம், சாத்தாங்காடு இரும்பு மற்றும் எஃகு அங்காடி, ஒருங்கிணைந்த திடக்கழிவு மேம்பாட்டுத் திட்டம், மேம்பாலங்கள் போன்ற பல பணிகளைச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில், உயர்மட்ட மேம்பாலங்கள், வானுயர்ந்த கட்டடங்கள் எனச் சென்னை மாநகரின் இன்றைய வளர்ச்சியில் இதன் பங்கு அதிகம்.
அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்த நேரத்தில் சிஎம்டிஏ அந்தக் கட்டடங்களை நெறிப்படுத்தியது. 1979இல் முதலில் வில்லிவாக்கம், வேளச்சேரி, திருமங்கலம் போன்ற புறநகர்ப் பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. அந்தக் காலகட்டத்தில்தான் சென்னையைச் சுற்றியிருந்த பல கிராமப் பகுதிகள் சிஎம்டிஏ எல்லையுடன் இணைக்கப்பட்டன. ஐந்தாண்டுகளுக்கொரு முறை நகரமயமாக்கல் திட்டம் மற்றும் விதிகளை மாற்றியிருக்க வேண்டும். ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2008இல் இரண்டாவது மாஸ்டர் பிளான் போடப்பட்டது. 2026 வரை சிஎம்டிஏ எல்லை எவ்வளவு இருக்க வேண்டும், அந்தப் பகுதிகளில் என்ன வசதிகள் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை வரையறுக்கப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலில் பிளான் போடும்போது ஐடி மையம் கிடையாது.
இப்போது மக்கள் தேவைக்கேற்பவும் சூழ்நிலைக்கேற்பவும், மாஸ்டர் பிளான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரிவாக்கப்பட்ட பகுதிகளில் பல இடங்கள் கிராம, நகர, பேரூராட்சிப் பகுதிகளாக உள்ளன.
தற்போதைய பெருநகர விரிவாக்கத் திட்டத்தால், 1,189 சதுர கிலோமீட்டராக இருந்த சென்னையின் பரப்பு 4,459 சதுர கிமீ கூடுதலாகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர் போன்ற பகுதிகளில் உள்ள 11 நகராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், 22 பேரூராட்சிகள் இணைகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதிகளில் உள்ள 5 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் இணையவுள்ளன. வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் நகராட்சியில் 36 வார்டுகளையும் நெமிலிச்சேரி பேரூராட்சியின் கீழ் உள்ள 52 ஊராட்சி மன்றங்களையும் இணைத்து 8,878 சதுர கிமீ விரிவாக்கம் செய்யப் பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. இதில், இரண்டாவது பரிந்துரைக்கு அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
இதன் மூலம் நகர்ப்புற வளர்ச்சிகள், வசதிகள் மேம்படுவதால் அதிகளவில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் என அமையும். நிலங்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு அதன் வழிகாட்டி மதிப்பும் உயரும். புதிய சிறு நகரங்கள் உருவாக்கப்படும்.
பெருநகர எல்லைகளை விரிவுபடுத்தும்போது பல பிரச்சினைகளை ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும். சென்னை நகரத்தில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடும், வெள்ளம் பெருக்கெடுத்துப் பேரழிவுகளும் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டிருந்த நகரில் இன்றைக்குள்ள மக்கள்தொகைக்கு ஏற்ற திட்டங்களை அறிவியல் ரீதியாக நாம் முன்னெடுக்க வேண்டும்.
சாமானிய மக்களின் துயரம்
சென்னையின் விரிவாக்கப்படும் பகுதிகளில் இனி சென்னைப் பெருநகருக்கு ஈடாக தண்ணீர் வரி, சொத்து வரி, வடிகால் வரி என்று புறநகராகப்போகும் அரக்கோணம் போன்ற வருமானம் பெருகாத பகுதிகளிலும் சென்னையின் மையப் பகுதியில் எந்த வரியோ, அந்த வரிகள் அனைத்தும் போடப்படும். சொத்து மதிப்பு தாறுமாறாக உயரும். வீட்டு வாடகை மதிப்பும் உயரும். இதன் விளைவாக சாமானிய மக்கள் பெரிதும் துன்பப்படுவர். முதல்கட்டமாக சென்னைப் பெருநகர் விரிவாக்கப்பட்ட சமயத்தில் பலர் நகர வாழ்வை விடுத்துப் புறநகருக்கு இடம்பெயர்ந்தனர். இப்போது புறநகர் பகுதிகள் மீண்டும் விரிவாக்கப்படுவதால், அரக்கோணத்தைக் கடந்தும் வாடகைக்கு வீடு தேட வேண்டிய நிலை ஏற்படும். ஏற்கெனவே கைக்கும் வாய்க்கும் போதாமல் தவிக்கும் சாமானிய மக்களை அரசு எந்த வகையிலும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
கிராமங்களிலிருந்து வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரங்களையும் தேடி மக்கள் நகரங்களுக்கு நகர்கின்றனர். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நகரத்து மக்கள்தொகை மொத்த மக்கள்தொகையில் 5%. இன்றைக்கு அது 50% முதல் 60% என ஆகிவிட்டது. உலகெங்கும் உள்ள பெருநகரங்களின் நிலைமையும் இதுதான். மக்கள் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கும் நிலைதான் இன்றைக்கு நிலவுகிறது.
சென்னையின் முக்கிய வியாபாரப் பகுதிகளான கொத்தவால்சாவடி காய்கறி மார்க்கெட்டைக் கோயம்பேடுக்குக் கொண்டுசெல்லும் திட்டத்தை சிஎம்டிஏ கொண்டுவந்தது. அதே போன்று பிராட்வேயிலிருந்து பஸ் நிலையத்தை கோயம்பேடுக்கு மாற்றியது. இப்போது தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கான நிறுத்தம் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்படுகிறது. சென்னையில் உள்ள இடநெருக்கடியைக் குறைக்கவே இவை மாற்றப்படுகின்றன. சிஎம்டிஏ எல்லை விரிவாக்கப் பகுதியில் குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். இந்தப் பகுதிகள் முழுமை பெற்ற நிறைவான நகரமைப்பாக உருவாக வாய்ப்பு கிடைக்கும். இனிமேல் சிஎம்டிஏவுக்குக் கூடுதல் பணியாளர்கள் தேவைப்படும். நிதியும் அதிகளவில் தேவைப்படும்.
‘பில்டிங் ஸ்டிராங், பேஸ்மென்ட் வீக்’
அதிகமான வாகனப் பெருக்கத்தினால் காற்று மாசு ஏற்படுவது மட்டுமல்லாமல், வாகனங்களின் ஒலிப்பான் எழுப்பும் ஒலிகள் உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் மட்டும்தான் இத்தகைய நிலை. சிங்கப்பூர், லண்டன் போன்ற நகரங்களில் ஒலி எழுப்பினால் கடுமையான தண்டனைகள் உண்டு. இங்கு மட்டும் பெரிய வாகனங்களை வைத்துக்கொண்டு கொடியைக் கட்டிக்கொண்டு ஒலிப்பான்களின் ஒலி அளவை அதிகரித்தால் ஏதோ பெரிய அந்தஸ்து என்று கருதுகின்ற போலியான போக்கு உள்ளது. இந்த வாடிக்கை சென்னையில் அதிகம்.
மாசுபட்ட காற்று, திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் தட்டுப்பாடு, வெள்ளத் தடுப்பு மேலாண்மை, வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை மேம்பாடு மற்றும் பாதுகாப்பு, மின்சார வளங்கள், ரேஷன் பொருள் தட்டுப்பாடுகள், நடைபாதை வாசம் போன்றவற்றைச் சரிசெய்யாமல் சென்னை நகரின் எல்லைகளை விரிவுபடுத்துவது மேலும் சிக்கலைத்தான் உருவாக்கும்.
சென்னை நகரம் தன்னுடைய அண்டை மாவட்டங்களை நம்பி இருக்க வேண்டியுள்ளது. அப்படியான நிலையில், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் போன்ற ஏரிகளும் மாசுபடுவதோடு சிறிது சிறிதாக அழிந்துவிடும். ஏற்கெனவே நீர்நிலைகளை வீட்டு மனைகளாக மாற்றிச் சமூக விரோதிகள் கொழுத்துவருகின்றனர்.
சாதாரண மழையையே எதிர்கொள்ள சக்தியற்ற நிலையில், ஒரு மாநகர விரிவாக்கத்தின்போது பெருவெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர்களை எதிர்கொள்ளத் தொலைநோக்குப் பார்வை தேவை. அது அரசிடம் இல்லை. இந்த விரிவாக்கம் சென்னையின் சீரான வளர்ச்சிக்கு உதவுமா என்பது கேள்விக்குறி.
ஏற்கெனவே வளி மண்டலம், நீர், நிலம், ஒலி மாசடைந்து சென்னை நகரம் நாளுக்கு நாள் சீரழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற நோய்களும் மக்களை வாட்டுகின்றன. நம்மிடம் அடிப்படை கட்டமைப்பே மோசமாக இருக்கிறது. ‘பில்டிங் ஸ்டிராங், பேஸ்மென்ட் வீக்’ என்பது போலத்தான் நமது நிலைமை. முகலிவாக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக்கூட சரியாகக் கட்டத் திராணியின்றி நாம் பார்த்த காட்சிகளின் வேதனையில் இருந்து இன்னமும் மீளவில்லை.
சென்னை மற்றும் கல்பாக்கம் பகுதி, நிலநடுக்க மண்டலப் பிரிவு 3இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் நகரங்களின் பட்டியல் என்ற பெரும் அபாயத்தின் கீழ் சென்னை நகரமும் உள்ளது. கோடைக்காலங்களில் அனல் காற்றின் அளவு கூடும்.
சென்னை மாநகரில் நாளொன்றுக்கு 5000 முதல் 7000 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அதை முறைப்படுத்திக் கையாளவே முறையான அரசு இயந்திரம் இல்லை.
சென்னை மாநகரில் 1992இல் இருந்த 6 லட்சம் வாகனங்கள் 2001இல் 13 லட்சம் எனப் பெருகின. 2012இன் கணக்கின்படி சென்னையில் 36 லட்சம் வாகனங்கள் இருந்தன. விரைவில் ஒரு கோடியை எட்டிவிடும் அளவுக்குச் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நகரம் மேலும் மாசுபடும். வாகன ஒலிப்பான்களுடைய சத்தங்கள் பொறுக்க முடியாமலிருக்கும். இதன் பின்விளைவுகள் மிகவும் அபாயகரமாக அமையும்.
தினமும் 1500 புது வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுப் பயன்பாட்டுக்கு வருகின்றன. நூறாண்டுகளுக்கு முன் இருந்த சென்னையின் பெரும்பாலான சாலைகள் அதே அளவில்தான் இன்றும் உள்ளன. வாகனங்கள் மட்டும் பெருக்கப்படுகின்றன. ஒரு வீட்டுக்கு 4 அல்லது 5 நான்கு வாகனங்கள் வாங்கிவிட்டுத் தெருவில் நிறுத்த வேண்டிய நிலைமை. வெளிநாடுகளில் வாகனங்கள் வாங்குவதில் நகரத்தின் சுற்றுச்சூழல் நன்மையைக் கருதிச் சில கட்டுப்பாடுகள் உண்டு.
பெரிய வாகனங்கள் இருந்தால்தான் கௌரவம் என்ற மடத்தனமான எண்ணங்களும் இதற்காகவே கோடிக்கணக்கில் கடன் வாங்கி வாகனங்களை வாங்கும் பாசாங்குத்தனமான போக்குகளும் நம்மிடையே உள்ளன. அரசாங்கமும் இதைக் கட்டுப்படுத்தாமல் புதுப்புது விதமாக ஷேர் ஆட்டோக்கள், வாடகை ஊர்திகள் எனப் போக்குவரத்து உரிமங்களை தாராளமாக அள்ளி வழங்குகிறது. இதன் மூலம், போக்குவரத்து நெரிசல்களை அரசே உருவாக்கி சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடுகிறது.
மக்கள்தொகைப் பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, வேலையிழப்புகள், உள்கட்டமைப்புப் போதாமை, வாகனப் பெருக்கம், குடிநீர்ப் பற்றாக்குறை, வெள்ளத் தடுப்புக்கான ஏற்பாடுகள் இன்மை, பெருகும் குப்பைகள் எனக் கடுமையான நெருக்கடிகள் சென்னையைச் சூழ்கின்றன.
நகர வளர்ச்சிக்குத் தேவையான பொருளாதார வசதியும் கொள்கைகளும் நம்மிடம் இல்லை. பழைமையின் அடையாளங்களான நாகரிகங்கள் உதித்த நகரங்கள்கூட திட்டமிட்டு அந்தந்த காலத்துக்கேற்ப அமைக்கப்பட்டன. எத்தனையோ பழைய நகரங்கள் வளர்ச்சியின் அலையில் காணாமல் போயின.
சென்னை மாநகர விரிவாக்கத்தைவிட மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் போன்ற நகரங்களின் கட்டமைப்பை சீராக்கி விரிவாக்கினால், தமிழகத்தின் பொருளாதாரம் மண்டல ரீதியாக வளர்ச்சி அடையும். அதுபோல, கிராமங்களிலிருந்து மக்களின் வெளியேற்றமும் கட்டுப்படுத்தப்படும்.
இப்படியான சூழலில் சென்னை பெருநகர் விரிவாக்கம் மேலும் புதிய சிக்கல்களை உருவாக்கும், சுற்றுச்சூழலும் பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து விவாதம் நடத்தி அதன் பிறகு இத்திட்டத்தை நிறைவேற்றுவது நல்லது. இயற்கையின் அருட்கொடையான பல வளங்களை நகரமயமாக்கலால் இழந்து நாம் வஞ்சிக்கப்படுகிறோம்.
நகர்ப்புற வளர்ச்சி ஒரு பக்கம் அவசியம் என்றாலும், அதனால் ஏற்படும் பாதகங்களையும் கணக்கில் எடுத்து முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் திமுக செய்தித் தொடர்பாளர், கதைசொல்லி இதழின் இணையாசிரியர், பொதிகை - பொருநை கரிசல் பதிப்பகத்தின் நிறுவனர். இவரைத் தொடர்புகொள்ள: rkkurunji@gmail.com)
#சென்னை_பெருநகரம்
#காஞ்சிபுரம்
#வேலூர்
#திருவள்ளூர்
#Greater_Chennai
#Kanchipuram
#Vellore
#Tiruvallur
#KSRpostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-04-2018