Wednesday, April 4, 2018

செ.மாதவன் என்ற பெருந்தகை ...



அன்பிற்குரிய செ.மாதவன் அவர்கள் மறைவு செய்தியை கேட்ட உடன் இரங்கல் பதிவு செய்திருக்க வேண்டும் ஆனால் நான் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் பதிவு செய்ய வேண்டும் என கோப்புகளில் தேடினேன். இந்த நிமிடம் வரை கிடைக்கவில்லை..இனியும் தாமதித்தால் என் மனச்சான்றுக்கு பதில் அளிக்க முடியாது. 1979ஆம் ஆண்டில் சேதுசமுத்தித திட்டம் குறித்து தினமணி பத்திரிகையில் கட்டுரை ஒன்று எழுதினேன். அந்தக் கட்டுரையை வாசித்த அவர் எனது தொலைபேசி எண்ணை கேட்டறிந்து தொடர்பு கொண்டு பாராட்டி உற்சாகம் அளித்தார். இதுவே முதல் முறை நான் அவரிடம் பேசியது. அவரும் அவ்வப்போது தினமணியில் கட்டுரை எழுதுவார். தினமணியின் தற்போதய வைத்யநாதன் அவர்களுக்கும் செ.மாதவன் அவர்களுக்கும் நெருக்கம் .இந்த பழக்கவழக்கம் எங்கள் மூவரையும் தொடர்ந்து இணைத்தது. செ.மாதவன், இரா.செழியன்,க.ராஜாராம், நாஞ்சிலார்,முரசொலி மாறன் ஆகியோர் நல்ல ஆங்கில அறிவும் விவாதிக்கும் திறனும் படைத்தவர்கள். சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள். எளிதில் அண்ணாவை கவர்ந்தவர்கள் என்றால் மிகையல்ல. இதை சொல்வதனால் நான் யாருக்கும் பகையுமில்லை. செ.மாதவன் அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சமயம் கச்சத்தீவு பிரச்சனை குறித்துப் பேச வேண்டி இருந்ததால் என்னை தொடர்புகொண்டு அதுகுறித்த தரவுகளை கேட்டார். நான் கொண்டு வருகின்றேன் என சொன்ன போது, "இல்லையில்லை, நானே உங்களை சந்திக்க வருகின்றேன்" என மயிலாப்பூர் இல்லம் வந்து தரவுகளை வாங்கி சென்றார். அதுமுதல் அவ்வப்போது சில புத்தகங்கள் தேவையெனில் என் வீட்டில் உள்ள என் நூலகத்திற்கு வந்து எடுத்து செல்வார். நான் அடிக்கடி சொல்லும் தகுதியே தடை என்ற வாக்கியத்தை சிவகங்கை வட்டார மொழியில் slangல் பேசி சிலாகிப்பார். 1984 முதலே தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை சந்திக்க வேண்டும் என கேட்பார். அவரை அழைத்து சென்று பிரபாகரனை சந்திக்க வைத்தேன்.. 2002ஆம் ஆண்டு ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டிய பணிகளை அண்ணன் முரசொலி மாறன் அவர்கள் டெல்லி சம்பத்,என்னிடம் அடிப்படை பணிகளை ஆற்ற பொறுப்பை அளித்து இருந்தார். அப்பணிகளை செய்யும் போதும் செ.மாதவன் அவர்களை டெல்லி சம்பத், நானும் சந்தித்து சென்றோம். டெல்லி சம்பத் குறித்து வேறொரு பதிவில் சொல்லியிருக்கின்றேன். அவர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். அந்த வழக்கு தொடர்பாக அடிக்கடி என்னை அலைபேசி வழி தொடர்பு கொண்டு விசாரிப்பார். அப்போதும் அவர் தொலைபேசியை மட்டுமே பயண்படுத்தி வந்தார். அலைபேசியை பயன்படுத்தியது இல்லை. நான் 1998ல் புதியாக வந்த Ford icon கார் வாங்கிய போதும் , நானும் இப்படியாக ஒருக்கார் வாங்க வேண்டும் என்றார். அவரது வெள்ளுடை என்பது விளம்பரங்களில் காட்டப்படுவதை போன்று மிகவும் பளிச்சென்ற வெண்மை நிறமாக இருக்கும். அவரது இருப்பிடத்தை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வார்.குறிப்பாக புத்தகங்களை எடுத்த இடத்தில் திரும்ப வைக்கும் பழக்கத்தை சரியாக செய்து வந்தார். இப்பழக்கம் பலரிடம் இருக்காது என்பதால் அதனை குறிப்பிட வேண்டியதாகி உள்ளது. சிங்கம்புணரி கிராம மக்கள் தரமான கல்வி கற்க ஏதுவாக தரமான பள்ளி ஒன்றை நிறுவினார். மிக எளிமையானவர். ஒருங்கினைந்த ஒன்றுபட்ட இராமனாதபுரம் மாவட்டத்தில் செ.மாதவன், எஸ்.எஸ்.தென்னரசு, தா.கிருட்டிணன் , பெ.சீனிவாசன், சத்யேந்திரன் ஆகியோர் திமுகவை தலைமையேற்று நடத்தியவர்கள். அமைச்சரவையில் சட்டம், கூட்டுறவு, தொழில் ஆகிய துறைகளில் பணியாற்றினார். இவரது காலத்தில் தான் கூட்டுறவுத் துறை புணரமைக்கப்பட்டது. தலைவர் கலைஞர் இவரது ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார். இதனால் இவரை கலைஞரின் காதுகளில் குடிகொண்டவர் என கேலி செய்வார்கள். இவரது தலையீடு இல்லையென்றால் ஜெயலலிதாவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. என தமிழகத்தில் ஆளுமைகள் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஆகியோருடன் நெருக்கமாக முக்கிய பணிகளை செய்தவர். 1962லிருந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி சிறப்பாக செயல்பட்டு அண்ணாவின் அன்பை பெற்றவர். ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் என் பெயர் இல்லாத வேட்பாளர் பட்டியலை பார்த்துவிட்டு என்ன இப்படியாகி விட்டதே என ஏமாற்றத்தை வெளிப்படுத்துவார். என் மனைவி இறந்த அன்றைய தினம் அவரால் வர இயலவில்லை. மறுநாள் வந்தவர் மூன்று மணி நேரம் என்னுடன் பேசி ஆறுதல் தெரிவித்து சென்றார். தலைவர் கலைஞர் தலைமையில் அறிவாலயத்தில் கூட்டங்கள் நடந்தால் காபி, வடை வழங்குவது உண்டு. அப்படியிருக்க அந்த வடை, காப்பியை இவரும் ஆற்காட்டாரும் திரும்பி பார்க்க மாட்டார்கள். ஒருமுறை நானே கேட்டுவிட்டேன். அதற்கு பதில் அளித்த அவர்," இந்த எண்ணெய் பலகாரத்தை சாப்பிட்டு விட்டு போய் சேர வேன்டிதான என்பார்.என்ன இவ்வளவு பெரிய வார்த்தையா என்பேன். இளநீர் இருந்தால் நல்லது என்பார். ஆரோக்கியத்தை அப்படி பேணிக்காத்தவர். இவரது மகள் வெற்றிச் செல்வி, அமெரிக்காவில்குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் தன் ஆர்வ பணியில் ஈடுபட்டுள்ளார். சட்ட அறிவு, சட்டமன்ற பணி, ஆங்கில பேச்சாற்றல், அமைச்சக பணி என பன்முகத்தன்மை கொண்டவர். செ.மாதவன் என்றால் அறிவு , நேர்மை, எளிமை, நுண்மாண் நுழைபுலம். ஆழ்ந்த இரங்கல்கள்.. #செ_மாதவன்மறைவு #KSRadhakrishnanpostings #KSRpostings கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 04-04-2018

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...