Monday, April 16, 2018

சில லட்ச ரூபாய்க்கு தண்ணீர் வாங்க வேண்டிய நிலையா......?

காவிரிப் பிரச்சனைக்கு தீக்குளித்துக் கொண்ட சரவணன் சுரேஷின் கிராமம் பெருமாள்பட்டிக்கு சென்றுவிட்டு கோவில்பட்டியில் ஒரு தொழிலதிபர் நண்பரின் வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டிருந்தேன். என்னுடன் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளரும், கோவில்பட்டி நகர செயலாளருமான ப.மு. பாண்டியன் மற்றும் எம்.டி.ஏ.காளியப்பன் ஆகியோரும் உடனிருந்தனர். கோவில்பட்டியில் வழக்கமாக சித்திரைத் திருவிழா ஒரு வார காலம் நடைபெறும். சுற்றுப்பக்கத்திலுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொள்வது நீண்டகால வாடிக்கை. அந்த நண்பர் சொன்னார், இன்று தெப்பத் திருவிழா நடக்கவிருக்கிறது. இந்த திருவிழாவிற்காக சில லட்ச ரூபாய்க்கு தண்ணீர் வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்று வருத்தத்துடன் சொன்னார். நான் அதிர்ச்சியுடன் என்ன சில லட்ச ரூபாய்க்கு தண்ணீர் வாங்குகிறீர்களா? என்று கேட்டேன். தெப்பத் திருவிழாவிற்காக இவ்வளவு பெருந்தொகையான லட்ச ரூபாய் வரை செலவழித்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியெல்லாம் நடந்தது இல்லை என்று வருத்தத்தோடு கூறினார். நான் சொன்னேன்.

தென்னாப்பிரிக்காவில் கேப்டவுன் நகரில் தண்ணீருக்காக மக்கள் அதிகாலையிலேயே எழுந்து வரிசையில் நின்று ரேசனில் தண்ணீரை மானிய விலையில்தான் பெற்றுக் கொண்டு பயன்படுத்தி வருகிறார்கள் என்று சொன்னேன். என்ன செய்வது *தண்ணீர்.. தண்ணீர்..* என்று பாலச்சந்தர் படம் எடுத்தது இந்த பகுதியில் தானே என்றேன்.
அந்த நண்பர் சொன்னார் நதிநீர் இணைப்பிற்காக போராடி வழக்குகள் போட்டும் எதுவும் நடக்கவில்லையே என்று சொன்னார். நான் நதிநீர் இணைப்பிற்காக வழக்கு தொடுப்பதற்கு உந்துதலாக இருந்ததே இந்த பகுதியில் நிலவிய தண்ணீர் பிரச்சனை தான் என்று சொன்னேன்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-04-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...