Monday, April 23, 2018

கி.ரா.வுடன் சந்திப்பு

*



.*
————————————-
கி.ரா அவர்களை நேற்றைக்கு (20/04/2018) அன்று புதுவையில் சந்தித்து அவருடன் நீண்ட நேரம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. 

பல விடயங்களைக் குறித்து விவாதித்தோம். திராவிட புவி அரசியல், தமிழ் தேசியம், நதிநீர் சிக்கல்கள் போன்ற பல பிரச்சனைகளைக் குறித்து பேசும்போது அவர் பாணியில் பேசினார். 

திராவிடம் என்ற நிலையில்  தென் மாநிலங்கள் ஒன்றாக சேர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். ஆனால் கர்நாடகமும், கேரளமும், ஆந்திரமும் நதிநீர் சிக்கல்கள் போன்ற பல பிரச்சனைகளில் தமிழகத்தை வாட்டி வதைக்கின்றன. இந்த பிரச்சனைகளை மத்திய அரசும் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட திராவிட மாநிலங்களிடையே ஒத்துழைப்பு வேண்டும். திராவிட இன்றைய நிலைக்கு கேற்ப சித்தாந்தத்தை சில மாற்றங்களோடு சீர்தூக்கி பார்க்க வேண்டிய நிலையில் நாம் தற்போது இருக்கின்றோம். 

தமிழ் தேசியம் என்பது தமிழர்களுடைய நாகரிகம், தொன்மை, பண்பாடு, கலாச்சாரத்திற்கு ஒட்டியது என்றாலும், தொழில் மற்றும் பொருளாதார ரீதியிலும் பல ஏற்றங்கள் பெறவும்  அண்டை மாநிலங்களோடு கூட்டுறவான ஒரு போக்கு இருந்தால் தான் சிக்கல் இல்லாமல் இருக்குமென்று கருத்தையும் தெரிவித்தார்.

ஒவ்வொரு வீட்டிற்கும் திருவள்ளுவரும், அவருடைய போதனைகளும் சென்றடைந்து இருக்க வேண்டும். திருவள்ளுவரால் மற்றவர்கள் புகழடைந்தார்கள். 

பிறருக்கு விளம்பர வெளிச்சம் கிடைத்தது. வள்ளுவத்தின் செய்திகள் முழுமையாக சென்றடையவில்லை என்று தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்தார். கீதையை, குரான்னை, விவிலியத்தை படிக்கிறார்கள். அதை போல வள்ளுவத்தை போற்றியிருக்க வேண்டும் என்றார் கிரா.

சிறு பத்திரிக்கைகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. அதன் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் எதுவும் அரசுகள் எடுத்ததில்லை. சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கும் சில பத்திரிக்கைகள் சில பொருளாதார சூழ்நிலைகளால் ரணப்பட்டு தொடர்ந்து நடத்த முடியாமல் போய்விடுகிறது. மத்திய மாநில அரசுகள் இதை கவனிக்க வேண்டும். தேவையில்லாத பலவற்றிற்கு மானிய உதவிகள் வழங்கும் போது நல்ல சிறு பத்திரிக்கைகளை கண்டறிந்து அதற்கான உதவிகளை அரசுகள் செய்ய வேண்டும். 

தமிழகத்தில் தங்களது இருப்பை தக்கவைத்துக் கொள்ள நாங்களும் இருக்கிறோம் என்று அடையாளப்படுத்திக் கொள்ள முக்கியமான பிரச்சனைகளில் புதுப்புது பெயர்களில் சிறு கட்சிகள், அமைப்புகளும் வீதிக்கு வருகின்றன. இந்த சுயநல போராட்டங்களால் போராடும் நோக்கமும் சிதையும், அதன் வீரியமும் குறைந்துவிடும்.

இன்றைக்கு போராட்டம் நடத்தி, தங்களை பெரிய ஆளாக காட்டினால், நாளை பதவி மூலம் நன்கு வளம் பெறலாம் என்ற எண்ணத்தில் தான் இன்றைக்கு பலர் செய்யும் போராட்டங்கள் இருக்கின்றன. இது போன்றவர்களை அங்கீகரிக்கூடாது. நேர்மையாக, உயர் நோக்கத்துடன் போராட்டங்களுக்கு மத்தியில் இது போன்ற போராட்டங்களால் தாங்கள் படும் அவதியை நிச்சயம் மறக்க மக்கள் மாட்டார்கள். இப்போது ஜனநாயகப் போர்வையில் நடக்கும் கூத்துக்களை நாட்டுக்காக போராடும்  தலைவர்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 
நடத்துவது என்பது மக்களின் உரிமை. அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அப்படியான போராட்டங்களை யாரும் தடுக்கமுடியாது.ஆனால் போராடுபவர்களுக்கு பிரச்சனையின் தன்மை கூட தெரியவில்லை. 

காவிரி எங்கே உற்பத்தியாகிறது. தமிழகத்தில் எத்தனை மைல் தூரம் செல்கிறது என்பதெல்லாம் அறிந்துகொள்ளாமலே போராடுகிறார்கள். போராளி என்பவர் ஒரு பிரச்சனையில் முழு வீச்சோடு அதன் காரண காரியங்களை தெரிந்து போராட வேண்டும் .அது தான் அடிப்படை. அப்படி இல்லையென்றால் போராட்டத்தின் தூய நோக்கமும், உண்மையாகவே போராடுகின்ற போராளிகளுக்கும், போராட்டத்தை தீர்க்கக் கூடிய நடைமுறைக்கும் பின்னடைவு ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். யாரையும் குறை சொல்லவில்லை. இருக்கின்ற நிதர்சன நிலைமையைத் தான் சொல்ல வேண்டியுள்ளது-

உங்களின் நதிநீர் இணைப்பு வழக்குகள் செயல்பாடுகள் குறித்து 1983லேயே நான் பாராட்டி எழுதியதுண்டு. அந்த செய்திகள் ஊடகங்களிலும் வந்தது. பாரதி சொன்னதைப் போன்று நதிநீர் இணைப்பில் கவனம் காட்டியிருந்தால் தமிழகத்திற்கு இப்போது தண்ணீர் சிக்கல் வந்திருக்காது. என்ன செய்வது? ஆட்சியாளர்கள் சரியில்லையே. நீங்கள் சொல்வதை போல தகுதியே தடை தான்

உங்களுக்காக 1989 தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் நானும் வேலை பார்த்தேன் என்றார். என்ன செய்ய? உங்களைப் போன்ற தகுதியானவர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டவில்லை. ஜாதி, புஜபலம், பணத்தை கொடுத்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று தகுதியில்லாத கிரிமினல்கள் எல்லாம் வணிக அரசியலில் இருக்கும் போது என்ன நலன் கிடைக்கும்.

அவருடைய பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கோபல்ல கிராமம் நூலை எனக்கு அன்புடன் அளித்தார்.

இப்படியாக பல விசயங்களை பேசிவிட்டு மன நிறைவு..............

*பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா*
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் 
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. 
அதில் அர்த்தம் உள்ளது.. 

*உயர்ந்த இடத்தில் இருக்கும் போது, உலகம் உன்னை மதிக்கும், உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்*
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது.
----
*அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு...*
----
* வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,
இல்லாமல் மாறும் பொருள் தேடி,
அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ, 
இந்நாட்டில் மலரும் சமநீதி. 
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் ,
இருந்திடும் என்னும் கதை மாறும்,
ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க,
இயற்கை தந்த பரிசாகும்,
இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க,
நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்.
நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்,
அல்லதை நினைப்பது அழிவாற்றல் *

இது போன்ற பாடல்கள் இரம்மியமான இசிஆர் சாலையில் இரவில் திரும்பி வருகையில் காரில் ஒலித்துக்
கொண்டிருந்தது கி.ரா.வின் பேச்சை நினைவுப்படுத்துவதாக அமைந்தது.. 
#நதிநீர்இணைப்பு
#காவிரி
#போராட்டம்
#வள்ளுவம்
#திராவிடம்
#தமிழ்தேசியம்
#சிறுபத்திரிக்கைகள்
#கி_ரா
#ki_ra
#ksrposting
#ksradhakrishnanposting
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-04-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...