அன்பிற்குரிய தம்பி இரவி அவர்களுக்கு,
கண்னீருடன் ஓர் கடிதம். இக்கடிதத்தை உங்களால் படிக்கவோ பதில் எழுதவோ முடியாது. காரணம் தியாக வாழ்வை தேடி உலக வாழ்வை உதறிவிட்டு சென்று விட்டாய். வைகோ பாசறையிலிருந்த இளம் போர் கருவி இழந்து விட்டது.எங்கள் மனம் முழுதும் நிரந்தரமாக நின்று விட்டாய்.
விருதுநகர் மதிமுக மாவட்ட செயலாளர்ஆர்.எம.எஸ் அவர்கள் உன்னை என்னிடம் சிவகாசியில வைத்து அறிமுகம் செய்து வைத்தார். 1999 ஆண்டாக அல்லது 2000களில் இருக்க வேண்டும்.
அன்று முதல் ராதாண்ணே என அன்பொழுக அழைத்தும் அடுத்தவரிடம் கே.எஸ்.ஆர் என விளித்தும் அன்பு பாராட்டினாய். சென்னை வரும்போது வீட்டுக்கு வந்து என்னை அரவணைக்க மறந்ததில்லை.
வை.கோ அவர்களின் பேச்சுக்களை அச்சு வடிவில் நூலாக வெளியிட்டு தலைவரின் மீதுள்ள அன்பை புரியவைத்தவன் இன்று தனலாகி போனாயே? உன் மறைவு செய்தி கிட்டியதும் நெஞ்செல்லாம் பழைய நினைவுகள் நெருஞ்சி முள்ளாக குத்தியது.
பாசத்திற்குரிய தம்பியே உன் குடும்பத்தை தவிக்க விட்டு சென்றாயே. உன்னைப் போன்ற தீரமிக்கவர்கள் போர்க்குணத்துடன் வைகோ உடன் துணையாக, தூணாக நின்று இருக்க வேண்டுமல்லவா?
தற்கொலையில் உடன்பாடு இல்லை. பொதுவாழ்வில் உன்போன்ற ஆளுமைகள் அருகி வருகின்றனர். நேர்மையான அரசியல், களப்பணிகள், தியாகத் தழும்புகள் சுமந்தவர்கள் என்பதெல்லாம் இக்கால அரசியலுக்கு அவசியமற்று போனதை அறியாமலேயே போய்விட்டாயே? விசுவாசம் என்ற பெயரில் எடுபிடிகள் எல்லாம் மத்திய அமைச்சராகி விட்டார்கள். துரித உணவுகளை விரும்பி உண்ணும் உலகம். திடீர் அரசியல்வாதிகளை விரும்பி ஏற்கின்றது. தியாகங்கள் செய்தவரைக் காட்டிலும் யாகங்கள் மேற்கொண்டோர் உயர்பதவி வகிக்கின்றனர். மேகத்து விண்மீன்களாக மின்னுகின்றனர்.
உலக இயல்பு இப்படியிருக்க உன் இழப்பை யாறிவர்? உன் போர்க்குணத்தின் பெருமை சொல்லி யார் அழுவர்? தேக்குமர தேகத்திற்கு தீயிட்டுக் கொண்டாயே?
எத்தனை எத்தனை வழக்குகளை என் வாழ்வில் நடத்தியிருப்பேன். எத்தனை நீதிமன்றங்களை நோக்கி நடந்து இருப்பேன்.
*புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாக வழக்கு
*கூடங்குளம் அணு உலையை அகற்றக் கோரி வழக்கு.
*நூற்றுக் கணக்கான நச்சு ஆலைகளுக்கு எதிராக வழக்கு.
*தூக்கு தண்டனையை நீக்கக் கோரி வழக்கு.
*தேசிய நதிகளை இணைக்க கோரி வழக்கு.
*வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து வழக்கு.
*கண்ணகிக் கோட்டம் வழக்கு.
*சிமெண்ட் ஆலையை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து வழக்கு.
*மனித உரிமை கமிஷனில் எண்ணற்ற வழக்குகள்
என பட்டியல் நீளம்... ஆனால் வகித்த பதவிகள் ஒன்றுமில்லை. களப்பணியும், தியாகமும் தேவையற்றுப் போன தேர்தல் அரசியலின் சூட்சுமம் புரியாமல தீயை சுமந்து போனாயே? உன் மரணம் சொல்லும் துயர செய்தி ஒன்று தான். விஞ்சி இருக்கும் அரசியலில் நேர்மையானவர்களும் எஞ்சியுள்ளனர் என்பது தான்..
வீர வணக்கம்! பூத உடலை சுற்றம் சில நிமிடங்கள் மட்டுமே சுமக்கும்
ஆனால் உன் பெயரை வரலாறு உள்ளவரை சுமக்கும் . சென்று வா. நீ வென்ற செய்தியை உன் குடும்பம் கேட்கும். வீரவணக்கம்.
ஆழ்ந்த இரங்கல்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02-04-2018
No comments:
Post a Comment