Wednesday, April 25, 2018

இன்றைய மின்னம்பலம் இணைய இதழில் 15வது நிதிக்குழு தொடர்பான எனது பத்தி வெளிவந்துள்ளது.

இன்றைய மின்னம்பலம் இணைய இதழில் 15வது நிதிக்குழு தொடர்பான எனது பத்தி வெளிவந்துள்ளது.
சிறப்புக் கட்டுரை: நிதிக்குழுவின் மாற்றாந்தாய் போக்கு புதிதல்ல!
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15ஆவது நிதிக்குழு பாரபட்சத்தோடு செயல்படுவது கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணானது என்று சொல்லப்படுகிறது. இது இன்றைக்கு அல்ல; கடந்த 20 ஆண்டுகளாக இந்தக் கோளாறுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
மத்திய அரசின் 15ஆவது நிதி ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள், முந்தைய ஆணையத்தின் நெறிமுறைகளிலிருந்து மாறுபட்டுள்ளது. இந்த மாற்றங்களால் தென்னிந்திய மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று வர்ணிக்கிறார்கள். நிதிப் பங்கீட்டுக்கான முன்னுரிமை அம்சங்களை நிதி ஆணையம் வகுக்கிறது. இது இன்றைக்கு வந்ததாகச் சிலர் சொல்வது அர்த்தமல்ல.
இந்தப் பிரச்சினை இன்றைக்கு ஏற்பட்டதல்ல, 1998ஆம் ஆண்டில் குஸ்ரு தலைமையில் அமைந்த 11ஆவது நிதிக்குழு வகுத்த முன்னுரிமைகளிலேயே இந்த அளவுகோல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் மக்கள்தொகை, தேசிய தனிநபர் வருமானத்துக்கும் மாநில தனிநபர் வருமானத்துக்கும் இடையில் உள்ள வித்தியாசம், மாநிலத்தின் பரப்பளவு, வனங்களின் பரப்பளவு, மாநில அரசின் நிதிநிலை ஒழுக்கம் ஆகியவற்றை அளவுகோலாகக் கொண்டிருந்தது.
எந்த அடிப்படையில் நிதி ஒதுக்கப்படுகிறது?
நிதிக்குழு மூலமாக மக்கள்தொகை மாற்றீடு விகிதம் என்னும் சூத்திரத்தின் அடிப்படையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது. அதாவது ஒரு மாநிலத்தின் மக்கள்தொகைக்கேற்ப நிதி ஒதுக்கீடு. கடந்த 20 ஆண்டுகளாகவே இப்படித்தான் நடக்கிறது. இதனால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குக் குறைவான நிதி ஒதுக்கீடு கிடைக்கிறது. மக்கள்தொகைப் பெருக்கம் உத்தரப் பிரதேசத்தில் 2.7 சதவிகிதமாக உள்ளது. பீகாரில் 3.4, ராஜஸ்தானில் 2.4.
தென்மாநிலங்களில் இது மிகவும் குறைவாக உள்ளது. ஆந்திரம், கர்நாடகாவில் 1.8 சதவிகிதமாக உள்ளது. கேரளத்தில் 1.6, தமிழகத்தில் 1.7.
1998இல் அமைந்த 11ஆவது நிதிக்குழுவின் முடிவுகள் 1971இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அந்தக் காலகட்டத்தில் சன் டிவியில் மாலன் நெறியாளராக நடந்த விவாதத்தில் நானும், கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜனும் அதை எதிர்த்து அதற்கான வாதங்களை முன்வைத்தோம். அப்போது அதற்கு பாஜகவின் இல.கணேசன் அதை மறுத்துப் பதிலளித்தார். அப்போது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகம், ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து உத்தரப் பிரதேசம் போன்ற மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாத வடமாநிலங்களுக்கு அதிகமான நிதியை அன்றைய வாஜ்பாய் அரசு ஒதுக்கியது. கலைஞர், சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இதைக் கண்டித்து, அன்றைக்கு அது பெரும் சிக்கலாகவும் விவாதிக்கப்பட்டது. அன்றைக்குத் தொடங்கிய சிக்கல் இன்றும் தொடர்ந்து, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் மாநிலங்களை மாற்றாந்தாய் போக்கில் அணுகுகிறது. நிதி ஒதுக்கீடு எப்படிக் கணக்கிடப்படுகிறது என்று பாருங்கள்:
14ஆவது நிதி ஆணையம் பங்கீடு செய்த முறை:
மக்கள்தொகை – 1971: 17.5 புள்ளிகள்
மக்கள்தொகை – 2011: 10 புள்ளிகள்
தனிநபர் வருவாய் இடைவெளி: 50 புள்ளிகள்
பரப்பளவு: 5 புள்ளிகள்
வனங்களின் பரப்பளவு: 0 புள்ளிகள்
நிதிநிலை ஒழுங்கு முறை: 17.5 புள்ளிகள்
மொத்தம்: 100 புள்ளிகள்
15ஆவது நிதி ஆணையம் சில சர்ச்சைக்குரிய மாற்றங்களையும் கொண்டுவந்துள்ளது.
1. மக்கள்தொகையைப் பொறுத்தவரை 1971ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிவரம் கைவிடப்படுகிறது. அதற்குப் பதிலாக 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகைப் புள்ளிவிவரம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. ஆனாலும் இதற்கான நிதிப் பகிர்வுகளில் மத்திய அரசு தங்கள் விருப்பம்போல் நடந்துகொள்கிறது. சில மாநில அரசுகள் மத்திய அரசின் திட்டங்களைக் கிடப்பில் போடுவதும் உண்டு.
3. இலவசங்களும், மானியங்களும் மாநில அரசுகளுக்குத் தவிர்க்க முடியாதவை. முடிந்தளவு விவசாயம், கல்வி, நல்வாழ்வுகளுக்கு மட்டும் மானியங்களும், இலவசங்களும் வழங்குவது நல்லது. முடிந்தளவு இலவசங்களைத் தவிர்ப்பது நல்லது.
பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்துவிட்டன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதைக் கவனத்தோடு சகல ஏற்பாடுகளோடு செய்யாமல் இந்த நடவடிக்கையானது பெரும் சேதாரத்தை ஏற்படுத்திவிட்டது.
எனவே, 15ஆவது நிதிக்குழு மட்டும் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வுகளைக் குறைக்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக இதே நிலைமைதான். இது தொடர் நிகழ்வாக இன்றுவரை நீடித்து மாநில அரசுகள் வஞ்சிக்கப்படுகின்றன.
தருவதும் பெறுவதும்
கர்நாடகத்திலிருந்து மத்திய அரசு ஒரு ரூபாயை வரியாக வசூலித்தால், அதில் 47 காசுகள் மட்டுமே கர்நாடகத்துக்குத் திரும்ப கிடைக்கிறது. அதே சமயம் உத்தரப் பிரதேசத்தில் வசூலிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஒரு ரூபாய் 79 காசுகளாகத் திரும்பக் கிடைக்கிறது. பீகார் மாநிலம் ஒரு ரூபாய்க்கு 4 ரூபாய் 20 காசுகளைத் திரும்பப் பெறுகிறது. ஆனால் தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு இதைக் கவனத்தில் கொள்ளவோ, புரிந்துகொள்ளவோ பக்குவமும் இல்லை, நேரமும் இல்லை. அவர்களுக்குத் திட்டங்களின் கமிஷன்கள்தான் முக்கியமாகக் கண்ணில்படுகின்றன. ஏனென்றால் ஏதோ மக்களை ஏமாற்றி, ஆட்சிக் கட்டிலில் இருக்கின்ற ஜென்மங்களாகத் தமிழகத்தில் காட்சி தருகின்றனர்.
சமீபத்தில் தென்மாநில நிதியமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகம், தெலங்கானா தவிர்த்து அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
15ஆவது நிதிக்குழு பாரபட்சத்தோடு நடந்துகொள்வது கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணானது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் கோளாறுதான் இது.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் திமுக செய்தித் தொடர்பாளர், கதைசொல்லி இதழின் இணையாசிரியர், பொதிகை - பொருநை கரிசல் பதிப்பகத்தின் நிறுவனர். இவரைத் தொடர்புகொள்ள: rkkurunji@gmail.com)

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...