Sunday, April 8, 2018

’நிழல் ஆடும் உலகிலே நிஜம் யாரு நம் வாழ்கை #தகுதியே_தடை

‘’நிழல் ஆடும் உலகிலே நிஜம் யாரு
நம் வாழ்கை...’’
——————————————————
சந்திரபாபு நாயுடு ஆந்திரத் தலைநகர் அமராவதியில் நடந்த ஓர் ஆலோசனை கூட்டத்தில் மோடி அரசியல் களத்தில் என்னை விட இளையவர் என்றதால் சார் என்று அழைத்தேன் என பேசியுள்ளார் .சந்திரபாபு நாயுடுவின் களப்பணிக்கும், மோடியின் களப்பணிக்கும் காலநிலைகளை பார்த்தால் மோடி இளையவர்தான். என்ன செய்ய? மக்களும் அரசியலில் நேர்மை, களப்பணி, நீண்டகால அரசியல் அனுபவம், ஆளுமை போன்றவை இன்றைய அரசியலில் அவசியமில்லை என்று கருதுகின்றனர். 

இன்றைய வணிக அரசியலில் காசு கொடுத்து வாக்குகளைப் பெற்று யார் வேண்டுமானாலும் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நிலையில் அனுபவமிக்கவர், இளையவர் என்று பேசுவது அர்த்தமற்று போய்விட்டது. 
இதற்கெல்லாம் காரணம் யார்? மக்கள் தான்.

நல்லவர்களை மக்கள் கவனத்தில் கொள்வதில்லை. துரித உணவுகள் போல திடீரென்று அரசியலுக்கு வந்தவுடன்  நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகின்றனர். ஏன் அத்வானியை புறந்தள்ளிவிட்டு மோடி பிரதமர் ஆகவில்லையா? 

இந்த கேடு கெட்ட அரசியல் நிலை கடந்த 20 ஆண்டுகளில் அதிகமாக புரையோடிப் போய்விட்டது. இனி பேசிப் பயனில்லை. அவரவர்களுக்கு எவ்வளவு முடியுமோ பொது தளத்தில் அமைதியாக பணியாற்றி தங்களது கடமைகளை செய்து வந்தால் மனதிற்கு திருப்தி மட்டுமல்ல எந்த ஆதங்கமும் ஏற்படாது.

தகுதியற்ற தறுதலைகள் எல்லாம் அமர்ந்த பதவி பொறுப்புகளில் நாம் அமரவேண்டிய அவசியம் இல்லை. 
ஏனெனில் தகுதியே தடை. 
திறமைசாலிகளை உருவாக்க மாட்டார்கள். அவர்களை புறந்தள்ளி அவமானப்படுத்துவார்கள். 
சந்திரபாபு நாயுடு சொன்ன கூற்று உண்மையானால் இன்றைக்கு அத்வானி தான் பிரதமராக இருக்க வேண்டும்.

தமிழகத்தின்  நேர்மையான தலைவர்கள் யாரையும் இன்றைய இளைஞர்கள் அறிந்திருக்கவில்லை. 
முதல்வராக இருந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், பி.எஸ்.குமாரசாமி ராஜா, சேலம் வரதராஜீலு நாயுடு, கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா, காயிதே மில்லத், கக்கன், கே.டி.கே. தங்கமணி போன்ற பல மறைந்த நேர்மையான தலைவர்களை எத்தனை பேர் அறிவார்கள். 

ஓமாந்தூரார் ஆட்சிக்கு வந்தவுடன் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கினார், சமூகநீதியை நிலைநாட்டினார், தமிழ் மொழியை பயிற்று மொழியாக்கினார், பல தொகுதிகளில் தமிழ் கலைக் களஞ்சியத்தை அவினாசிலிங்க செட்டியார், பெரியசாமி தூரன் பொறுப்பில் உருவாக்கினார். விவசாய -சமூக நீதி முதல்வராக தமிழகத்தை வளமாக்கினார். இன்றைக்குள்ள இளைஞர்களுக்கு இவர்களைப் போன்ற மகத்தானவர்களை தெரியவில்லை. இன்றைக்கு காசு, பணம், புஜபலம், ஜாதி, கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தான் அரசியலில் அங்கீகரிக்கப்படுகிறார்கள்.
வாழ்க ஜனநாயகம். 

உத்தமர் காந்தியார் காலத்தில் தலைவர்களாக இருந்த கிருபளானி, ஆச்சார்யா நரேந்திர தேவ், அச்சுத பட்டவர்த்தன்,ஜெய பிரகாஷ் நாராயணன், மோகன் தாரியா போன்றோர்கள் எல்லாம் அப்போதே இந்த நிலையை உணர்ந்து அதிகார அரசியலுக்கு வராமல், நேரு அமைச்சரவையில் பங்கு பெறாமல் ஒதுங்கி கொண்டு பணிகளை செய்து வந்தனர். ஆனால் இவர்களின் பெயரைச் சொன்னால் யாருக்கும் தெரியாது. எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்களை தெரிந்து கொண்டாடுவோம். இவர்களை போன்றவர்கள் எல்லாம் நமக்கு பரிச்சயமில்லை. என்ன செய்ய? இது தான் இந்திய அரசியல்.

சந்திரபாபு நாயுடு சொன்னதை போல பல புதியவர்கள், அரசியல் அனுபவமில்லாமல் உயர்ந்த பொறுப்புகளில் எளிதாக வந்துவிடுகின்றனர். பிறகெப்படி அரசியல், பொது வாழ்வு கட்டமைப்பு சரியாக இருக்கும்.

#சந்திரபாபு_நாயுடு
#தகுதியே_தடை
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
08-04-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...