Friday, April 13, 2018

பிரபாகரனுடன் கே.எஸ்.ஆர் நினைவுகள்.

"சார்...விடுதலைப்புலிகள் இயக்கத்துடனும்,புலிகள் தலைவர் பிரபாகரனுடனும் ஆரம்ப காலத்தில் இருந்தே நெருக்கமாகப் பழகியவர் நீங்கள்....ஆமைக்கறிகள் எல்லாம் குதியாளம் போடும் போது,நீங்கள் அமைதியாக இருக்கீங்களே..."
--என்று வழக்கறிஞரும் திமுக செய்தித் தொடர்பாளருமான திரு.K S Radhakrishnan அவர்களிடம் கேட்டேன்.
"தம்பி மோகன்...இதே கேள்வியை தான் ஒரு முன்னாள் மத்திய அமைச்சரும்,முன்னாள் தமிழக அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கேட்டாங்க.அவங்களுக்கு சொன்ன அதே பதிலை உங்களுக்கும் சொல்றேன்..." என்றவாரே பேசத் தொடங்கினார்.
"82 காலகட்டங்கள்ல,இன்னும் சரியாச் சொல்லனும்ன்னா 19-5-1982 ல மெட்ராஸ் பாண்டிபஜார்ல கீதா கபே ங்கற ஓட்டல் பக்கத்துல பட்டப்பகல்ல துப்பாக்கி சத்தம் கேட்டது.இலங்கையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அவங்களுக்குள்ள சண்டை போட்டுகிட்டு துப்பாக்கியால சுட்டுகிட்டதா தகவல் பரவுச்சு.
தி இந்து ஆங்கில பத்திரிகையைச் சேர்ந்தவரும் என் நண்பருமான பார்த்தசாரதி,75159 ங்கற எண் கொண்ட என் வீட்டு லேன்ட்லைனுக்கு போன் பண்ணுனார்.அப்பல்லாம் இப்ப இருக்குற மாதிரி செல்போன்கள் கிடையாது.லேன் லைன் போன்கள் தான்.
"பாண்டிபஜார்ல சிலோன்காரங்க சிலர் துப்பாக்கியால சுட்டுகிட்டு சண்டை போட்டுகிட்டாங்களாம்.அதுல கைதான ஒருத்தர் உங்க வீட்ல,உங்க கூட தங்கியிருந்ததாகவும்,பழ.நெடுமாறன்ல்லாம் தெரியும்ன்னு சொல்றார்."ன்னு சொன்னாரு.
எனக்கு பகீர்ன்னது.உடனே ஒரு ஆட்டோ பிடிச்சி பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனேன்.உள்ளே போய் அவங்களை கைது பண்ணுன இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ங்கறவர்ட்ட போய் பேசுனேன்.
"ஆமா சார்...அரெஸ்ட் பண்ணிருக்கோம்.நக்சலைட்டுங்க போல.அதுல ஒருத்தர் தப்பிச்சுட்டாரு...." ன்னு சொன்னாரு.
"நகசலைட்டா..." ன்னு நான் திரும்ப கேட்க,
"ஆமாங்க... இலங்கைல கூட நக்சலைட்டுங்க இருக்காங்களா சார்?" ன்னு மறுபடியும் நக்சலைட்டா ன்னே கேட்டாரு.
"அவங்க நகசலைட்டுங்க இல்லை.."ன்னு சொல்லிகிட்டே,கைதான அந்த இளைஞர் பக்கத்துல வந்தேன்.
அங்க ஒரு பெஞ்ச்சுல அந்த இளைஞர் உக்காந்திருந்தார்.என்னைப் பார்த்ததும்,
"அண்ணே..." ன்னார்.என் கையைப் பிடிச்சுகிட்டார்.
நான் உடனே பக்கத்துல இருந்த கடைல இருந்து டீ வாங்கிட்டு வரச் சொன்னேன்.ரெண்டு பேரும் அந்த டீயை குடிச்சோம்.
அப்போ மறுபடியும் அந்த போலீஸ்காரர் வந்து...இவங்க நக்சலைட்டுங்க...ன்னு என்னைப் பார்த்து கேட்டுட்டு,அந்த இளைஞர்ட்ட ஸ்டேட்மென்ட் எழுதி வாங்க போனார்.
"என் பெயர் கரிகாலன் என்கிற வேலுப்பிள்ளை பிரபாகரன்.தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை சேர்ந்தவன்.நாங்கள் எங்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடும் விடுதலை வீரர்கள்..." ன்னு ஆரம்பிச்சு,என்ன நடந்தது,எதற்காக துப்பாக்கிச் சூடு நடந்ததுன்னு தம்பி விளக்கமா சொன்னார்.சொல்லிட்டு,
"நான் இப்ப இந்தியாவுல தான் இருக்கேன்.இந்த நாட்டோட சட்ட திட்டங்களை மதிக்க வேண்டியது என் கடமை.அதான் துப்பாக்கி சண்டை முடிஞ்சதுக்கு அப்புறம் நானே போலீஸ்ட்ட அரெஸ்ட்டாகிட்டேன்" ன்னு தம்பி சொல்லி முடிச்சார்.
இப்ப மாதிரி அப்ப புலிகள் இயக்கம் தமிழ்நாட்டில் பெயர் பெறாத காலம் அது.அதனால ஸ்டேட்மென்ட் எழுதி வாங்குன போலீஸ்காரருக்கு பிரபாகரன் ங்கற அந்த போராளியோட மகத்துவம் தெரியலை.
தப்பிச்சு ஓடுன அந்த இன்னொருத்தரை 21-5-1982 ல கும்மிடிப்பூண்டி ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல போலீஸ் கைது பண்ணிட்டாங்க.இரண்டு நாள் கழிச்சு போலீஸ் கைது பண்ணுன இளைஞரோட பேரு முகுந்தன்.முகுந்தன்ங்கறது உமா மகேஸ்வரன்.
கைதுக்கு அப்புறம் மறுநாளே தம்பியை ரிமான்ட் செஞ்சு மெட்ராஸ் சென்ட்ரல் ஜெயில்ல போட்டுட்டாங்க.நான் தினமும் ஜெயில்ல போயி தம்பியை பாத்து பேசுவேன்.அப்படி போறப்ப,
"அண்ணே அடுத்த தடவை வர்றப்ப படிக்க புத்தகங்கள் கொண்டாங்கோ" ன்னு தம்பி கேட்டாரு.
மறுநாளே நான் கொஞ்சம் புத்தகங்களைக் கொண்டு போனேன்.நேதாஜியோட வாழ்க்கை வரலாறு,காஸ்ட்ரோ வரலாறுன்னு பல கலவையான புத்தகங்களோட சேர்த்து,
கி. ரா எழுதுன கோபல்ல கிராமம் புத்தகத்தையும் தந்தேன்.அந்தப் புத்தகம்,

"அன்பான எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு..." ன்னு கி. ரா வே தன் கைப்பட எனக்கு எழுதித் தந்த புத்தகம்.
தம்பி புத்தகங்களை வாங்கிக்கிட்டாரு.
புத்தகங்களை தந்துட்டு வந்த மறுநாளே,அதாவது 22-5-1982 ல,39 சாலைத் தெரு,மைலாப்பூர் ங்கற முகவரில இருந்த என் வீட்டை வெள்ளியங்கிரி என்ற அதிகாரி தலைமையிலான சிபிசிஐடி போலீஸ் ரெய்டு பண்ணாங்க.டெல்லில முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி,மொராஜி தேசாய், ஜெயப்பிரகாஷ் நாராயணன்,தாரகேஷ்வரி சின்ஹா,தமிழ்நாட்ல முன்னாள் முதல்வர் காமராஜர்,கவிஞர் கண்ணதாசன் போன்றோர்களோட நான் இருந்த பல கருப்பு வெள்ளைப் போட்டோக்களை,பொக்கிசமா நான் சேர்த்து வைத்திருந்த ஏகப்பட்ட ஆவணங்களை எடுத்துட்டுப் போயிட்டாங்க.காரணம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நான் இருக்கேன்னு.தமிழ்நாட்லயே புலிகளுக்கு ஆதரவா இருந்ததால,முதன் முதலா சிபிசிஐடி போலீஸ் ரெய்டுகளுக்கு உள்ளானது, என்னோட வீடு தான்.அதே மாதிரி பழ. நெடுமாறன் வீடும்,அவருக்கு சம்பந்தப்பட்ட அலுவலகங்களும் ரெய்டுகளுக்கு உள்ளானது.
புலிகளுக்கு ஆதரவாக இருந்தார்ன்னு தடா சட்டத்துல அண்ணாச்சி வைகோ தம்பி ரவியை கைது பண்ணுனாங்க.வைகோ பொடாவுல ஒன்றரை வருசம் ஜெயில்ல இருந்தாரு.அவரோட வீடுகள்லயும் ரெய்டுங்க நடந்துச்சு....
ரெய்டு முடிஞ்சு இரண்டு நாட்கள்ல மறுபடியும் தம்பிய பாக்க ஜெயிலுக்கு போனப்ப,
"என்ன அண்ணே உங்க வீட்டை ரெய்டு பண்ணிட்டாங்க போல.பேப்பர்ல செய்தி போட்ருந்தாங்க...என்னால தான உங்களுக்கு இந்த சிரமம்" ன்னு தம்பி கலங்குனாரு.
"அட விடுங்க தம்பி...அத பத்தி எனக்கு கவலையேயில்லை ன்னு சொல்லிட்டு,புத்தகங்களை படிச்சீங்களா" ன்னு கேட்டேன்.
"அண்ணே,கோபல்ல கிராமம் ங்கற அந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சேன்.படிக்க ஆரம்பிச்சதுலருந்து கீழ வைக்க மனசே வரலை.ஒரேடியா படிச்சு முடிச்சுட்டேன்.அவ்வளவு அருமையா அய்யா கி.ரா எழுதிருக்காரு.இது வெறும் நாவல் இல்லண்ணே..பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று ஆவணம்.இதே மாதிரி ஒரு சுவையான ஆவணத்தை ஈழத்துக்கும் உருவாக்கனும்" ன்னு தம்பி சொன்னாரு....என்று தொடர்ந்த கேஎஸ்ஆரிடம்,
"சார்,ஜெயில்ல பிரபாகரனை-வைகோ சந்திப்பு எப்ப நடந்தது..?" என்று கேட்டேன்.
"அதுவா....24 ஜூன் 1982 ல இராமநாதபுரத்துல திமுக ஈழத்தமிழர் உரிமை மாநாடு நடத்துச்சு.அதுல பேசுறதுக்கு முன்னாடி வைகோ,தம்பியை சந்திச்சு பேசனும்னு சொல்லி சென்னை சென்ட்ரல் ஜெயிலுக்கு வந்தாரு.வர்றப்பவே நிறைய பழங்களை வாங்கிகிட்டு வந்தாரு.அண்ணாச்சி வைகோ,நான்,செவல்குளம் ஆச்சா குருசாமி ஜெயிலுக்கு போனோம்.தம்பிட்ட வைகோ அரை மணிநேரம் பேசிட்டு இருந்தாரு.உங்க கருத்துக்களைச் சொல்லுங்க,அத அப்படியே மாநாட்டுல பேசுறேன்னு சொல்லி கேட்டுகிட்டாரு..." என்று சொல்லிவிட்டு ஒரிரு நிமிடங்கள் மெளனமாக இருந்தார்.
அதன் பின், "5-8-1982 ல தம்பி பிரபாகரனுக்கு பெயில் அப்ளை பண்ணோம்.என்.டி.வானமாமலை ங்கற வக்கீல் தான் நம்பிக்கைக் ஆஜராகி வாதாடுனாரு.6-8-1982 ல மதுரைல தங்கியிருந்து தினமும் கையெழுத்துப் போடனும்ங்கற கன்டிசனோட தம்பிக்கு பெயில் கிடைச்சது...."
---என்று சொல்லிக் கொண்டே வந்தவர்,தன் பேச்சை இடைநிறுத்தினார்.சில நொடி மெளனத்திற்குப் பின் மீண்டும் தொடர்ந்தார்...
"இப்படி பல சம்பவங்கள்... ஒண்ணா ரெண்டா.எல்லாமே என் ஞாபகத் தொகுப்புல மெளனமா இருக்குது.இப்ப புலிகள்...ஈழம்...பிரபாகரன் ன்னு அவங்க பேரை வச்சு பணம் சம்பாதிக்குற தற்குறி கூட்டம் அதிகமாகிருச்சு.இந்தக் கூட்டங்களுக்கு எல்லாம் ஆரம்பகாலத்ததுல இருந்தே புலிகளுக்கு ஆதரவா இருக்குற அண்ணாச்சி வைகோ படுற கஷ்டங்கள் எதுவுமே தெரியாது.ஈழப்போராட்டம்,புலிகள் ஆதரவு ங்கறதுல அவரோட உறுதிமிக்க நிலைப்பாடுகளால அரசியல் வாழ்க்கைல அவரு சந்தித்த நெருக்கடிகள் ஏராளம்...ஏராளம்...இது எதுவுமே தெரியாம ரெம்ப லேசா அவரை பேசிடுறாங்க....
நீர் உயர வரப்பு உயரும்...வரப்பு உயர நிலம் உயரும் ங்கற நிலையில,தகுதியே தடை ங்கற நெலமைல அரசியல்ல புறக்கணிக்கப்பட்ட என் பேச்சு எப்படி அம்பலம் ஏறும்....மக்களே ஜோடிக்கப்பட்ட பொய்களைத் தானே நம்புறாங்க....அதான் தற்குறிகள்ல்லாம் ஆட்டம் போடேறாங்க.....
--- என்றவாரே தன் பேச்சை முடித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...