Wednesday, April 4, 2018

தமிழகம் அறியப்படாத நதிநீர் பிரச்சனைகள்; எப்படி போனால் என்ன?


மத்தியில் ஆட்சி புரிந்த அரசானாலும் ஆட்சி புரியும் அரசானாலும் மாறிமாறி கபட நாடகமாடி தமிழகத்திற்கு தண்ணீர் துரோகம் செய்துவிட்டன. இதுதான் இன்றைய கண்ணீருக்கான காரணம். மத்தியில் ஆட்சி மாறினாலும் நதிநீர் விசயத்தில் மட்டும் காட்சி மாறவில்லை. கட்சிகள் தேர்தல் அறிக்கையை மறந்து பேச்சு மாறினார்கள். இன்று உச்சநீதி மன்றமே பேச்சு மாறுகின்றது. சோழநாட்டில் சோறுடைத்து கவளம் கவளமாக யானைக்கட்டி சோறு போட்ட பூமியின் அவலநிலையை உலக அறிவியல் பேசும் யாரும் கவலைப்படுவதில்லை. மத்தியில் ஆட்சி புரிபவர்கள் தான் இப்படி என்றால் மாநிலத்தில் மானம் கெட்ட மடையர்கள் கேள்விக் கேட்க திராணியற்று, திறனற்று உண்ணாவிரத நாடகம் போடுகின்றார்கள். ஆண்டுக்கு ஒருமுறை வரும் தீபாவளி பொங்கல் விழாக்களை போல முல்லைப் பெரியாறு போராட்டங்களும், காவிரி ஆர்ப்பாட்டங்களும் கண்திரையில் வருவது இயல்பு. இம்முறையும் அப்படி ஆகிவிடக் கூடாது. இயற்கையில் நீர்வளம் அல்லாத தமிழகத்தில் , அமைந்துள்ள நிலவளம் குன்றும். விவசாயத்திற்கு மட்டுமல்ல குடிநீருக்கும் அல்லல் பட வேண்டியிருக்கும். இதை நான் சொல்லவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஐநாவின் அறிக்கை சொல்லி இருக்கின்றது. இன்று தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் குடிநீருக்காக ரேசன் கடைகளில் காத்திருக்கின்றார்கள். டிஜிட்டல் இந்தியாவில் ரேசன் கடைகளே இல்லாமல் போகுமாம். தண்ணீருக்கு நாம் எங்கே போய் நிற்க முடியும். தமிழகத்தில் அறியப்படாத நதிநீர் சிக்கல்கள் ஏறத்தாழ 50ஐ தாண்டும். அதைப் பற்றி யாரும் அறிந்து பேசக்கூடிய நிலையில் இல்லை. அதை பற்றிய அக்கறையும், ஆர்வமும் இல்லை. இப்படியே போனால் காவிரி, முல்லை – பெரியாறு போன்ற போராட்டங்களைப் போல இந்த பிரச்சனைகளிலும் எதிர்காலத்தில் போராடுகின்ற நிலைக்கு தமிழகம் தள்ளப்படும். கீழே குறிப்பிட்டுள்ள பிரச்சனைகள் கடந்த 10, 20 வருடங்களாக அரசும் கண்டு கொள்ளவில்லை, யாரும் பேசவில்லை என்ற வருத்தத்தில் பதிவிடுகிறேன். தமிழக நதிநீர் பிரச்சனைகளை பார்த்தால் தெற்கே குமரி மாவட்டம் நெய்யாறு அணையில் துவங்கி, வடக்கே பழவேற்காடு வரை பிரச்சனைகள் உள்ளது. நெய்யாறு, கொடுமுடியாறு, அடவிநாயினார், கோதையாறு, கீரியாறு, அச்சன்கோவில் - பம்பை – தமிழகத்தின் வைப்பாறோடு இணைப்பு, செண்பகவல்லி ஆறு, மஞ்சளாறு, மாம்பழ ஆறு, பரம்பிக்குளம் ஆழியாறு, பாண்டியாறு புன்னம்புழா, சிறுவாணி, பம்பாறு, பவாணி, அமராவதி, மேயாறு, கருமேணியாறு, நம்பியாறு, குண்டாறு, பொன்னியாறு, தாமிரபரணி, காவிரி, முல்லைப் பெரியாறு, தென்பெண்ணை, பாலாறு, கடலூரின் கெடிலம் ஆறு, சேலத்தை சேர்ந்த திருமணிமுத்தாறு மற்றும் வசிஷ்டா நதி போன்றவற்றோடு கிருஷ்ணா குடிநீர் மற்றும் பழவேற்காடு ஏரி குறித்தான பல பிரச்சனைகள் உண்டு. 1947ல் கணக்கெடுப்பின்படி 50,000 நீர்நிலைகள் இருந்தது தற்போது 20,000 ஆக குறைந்துவிட்டது. 19789 ஏரிகள், 29,484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் தற்போது மீதமுள்ளன. இதையாவது பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளோம். கங்கை, மகாநதி, காவிரி, வைகை, தாமிரபரணி, நெய்யாறோடு குமரி முனையோடு இணைக்க வேண்டும். அதாவது கங்கை குமரியை தொடவேண்டும் என உச்ச நீதிமன்றத்தால் எனது 30 ஆண்டு வழக்கில் தீர்ப்பு கிடைத்தது. இவையெல்லாம் இப்போது சிக்கலில் உள்ள நதிநீர்ப் பிரச்சனைகள். இவற்றை அறிந்த அரசியல் களப்பணியாளர்கள் எத்தனை பேர் என விரல் விட்டு எண்ணிவிட முடியும். பிறகு எப்படி தமிழகத்தில் மக்கள் நல அரசு அமையும். ஏனெனில், மக்கள் நல அரசியல் X தேர்தல் அரசியல் என்பது தான் இன்றைய அரசியல் சூத்திரம். தமிழகம் அறியப்படாத நதிநீர் பிரச்சனைகள்; எப்படி போனால் என்ன? கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 04-04-2018

No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...