Tuesday, April 1, 2025

#வடக்கெல்லை மீட்பு #தமிழகத்தில் திருத்தணி இணைப்பு #இதே நாளில் ஏப்1,1960

#வடக்கெல்லை மீட்பு 
#தமிழகத்தில் திருத்தணி இணைப்பு #இதே நாளில் ஏப்1,1960
———————————————————
1956 வது வருடம் நவம்பர் ஒன்றாம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி-செங்கோட்டை கேரளாவில் இருந்து விடுபட்டு நம்முடன் இணைந்தது. திருத்தணி அப்போது ஆந்திராவை விட்டு நம்மோடு இணையவில்லை.

ம பொசி, மங்கலக்கிழார், விநாயகம் போன்ற பல்வேறு ஆளுமைகளும் அவ்விதமான அரசியல் நோக்காளர்களும்  தீவிரமாகப் போராடித்தான் திருத்தணியைப் பெற்று தந்தனர். அத்துடன் ஆந்திராவில் இருந்து நம்மோடு வரவேண்டிய சித்தூர் நெல்லூர் திருப்பதி காளகஸ்தி போன்ற இடங்களையும் இழந்தோம் என்பதையும் மறந்து விடக்கூடாது.. இதே ஏப்ரல் 1ஆம் தேதி தான் திருத்தணி 1960 இல் நம்முடன் இணைந்தது. இந்த வரலாற்றின் மேல் எந்த அக்கறையும் இல்லாதவர்கள் தான் இப்போது தெரியாமல் இருக்கிறார்கள்! மட்டுமல்ல அவற்றின் மீது ஒரு நாட்டமும் அவர்களுக்கு இல்லை! இந்த நாள் குறித்த எந்த மனப்பதிவும் இல்லாதவர்கள் தான் இப்போது அரசியலில் வாழ்கிறார்கள்! வரலாற்றைத் திரும்பப் பார்ப்பதன் மூலமாகத்தான் நிகழ்காலத்தை எதிர்காலத்தை சரி செய்ய முடியும் என்பதை உணர்ந்த எங்களைப் போன்றவர்கள் தான் இந்த விஷயங்களை மறுபடியும் நினைவு படுத்த வேண்டி இருக்கிறது!

 1956 இல்  இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு பார்த்தோமானால் நில அடிப்படையில் வட வேங்கடம் தொட்டுத் தென்பகுதி குமரி வரை ஆதித் தமிழகம் இருந்தது  என்ற கூற்றுக்கு இணங்க தமிழகத்தின் தமிழ் பேசும் தாயகப் பகுதியான  திருப்பதியையும் திருத்தணியையும்  மொழிவாரி மாநிலத்திட்டத்தால் ஆந்திராவிடம் இழந்து மக்கள் தவித்தனர். 1957ஆம் ஆண்டு எல்லை ஆணையராக இருந்த எச்வி படாஸ்கர் தமிழகப் பகுதிகளாக விளங்கிய திருத்தணி திருவாலங்காடு வள்ளி மலை போன்றவை தமிழகத்துடன் இணைக்கப்படும் என்று தன் ஆணையில் குறிப்பிட்டு இருந்தார். அது தமிழக மக்களுக்கு ஆறுதலாக இருந்த வேலையில் அன்றைய பிரதமர் நேரு அந்த இணைப்பைச் செய்ய விடாமல் தாமதப்படுத்தினார்! பல முட்டுக்கட்டைகளுக்கிடையே தமிழகத்தின் வடக்கு எல்லை பாதுகாவலராக இருந்த மபொ சி  மிக வன்மையாக அதைக் கண்டித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார்.
  அதன் அடிப்படையில் பின்வாங்காத பல போராட்டங்களையும் நடத்தினார்.

அதன் பிறகு 1960 நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்த போது எவ்விதத் திருத்தமும் இன்றி திருத்தணி தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. அதற்கான மசோதா சட்டமாகவும் ஆக்கப்பட்டது.

தமிழகத்துடன் திருத்தணி இணைந்த இந்த நாளில் (01-04-1960)
திருத்தணி மீட்புக்காக போராடிய
 ம பொ சி  மங்கலக்கிழார் விநாயகம் போன்ற தியாகிகளை தமிழ் மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்!

“திருத்தமிழ்க்கு உயர்திசைச் சிறப்புடைத் திருத்தணிகை” என்று -அருணகிரி நாதர்(திருப்புகழ்)

விசால ஆந்திரம் கேட்டு 1953ஆம் ஆண்டு தீவிரமாக போரடிய போது சித்தூர் மாவட்டத்தில் ஆறு பகுதிகளை  ஆந்திர மாநிலத்தில் சேர்ந்து விட்டது.அதில் மாலவன் குன்றமும், வேலவன் குன்றமும் அடங்கும்.

1946ஆம் ஆண்டிலிருந்து-

“வேங்கடத்தை விட மாட்டோம்,
வேங்கடமே தமிழகத்தின் எல்லை,
தணிகை தமிழருக்கே”
- தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி
அப்போது தமிழ்நாட்டில் திராவிடநாடு முழக்கத்தை பெரியார், அண்ணா போன்றவர்கள் எழுப்பினர்

ஆந்திரர்கள் தலைநகரான சென்னையைக் கூட உரிமை கொண்டாடி கேட்க முடிந்தது. ஆனால் ராஜாஜி, ம.பொ.சிவஞானம் கடுமையாக இதை எதிர்ப்பு தெரிவித்தனர்.

நல்ல வேளையாக சென்னை மீட்புப் போரிலும், “தலையிட்டு தலையைக் கொடுத்தேனும் தலை நகரை காப்பேன்” என்று ம.பொ.சி. முழக்கமிட்டார். அந்த முழக்கத்திற்கு நல்ல பலனும் கிடைத்தது.

சென்னையை அரசியல் தளமாகக் கொண்டு இயங்கிய தமிழகக் கட்சிகள் எல்லாம் வேறு வழியின்றி சென்னை மீட்புக் கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டன. முதல்வர் இராஜாஜி துணையோடு சென்னை தமிழர் வசமானது. ஆனால், சென்னையை மீட்க ஒத்துழைத்த பேராய, பொதுவுடைமை, திராவிட இயக்கக் கட்சிகளெல்லாம் வட வேங்கட மீட்புக் கிளர்ச்சிக்கு ம.பொ.சி. அழைத்த போது ஒதுங்கியே நின்று வேடிக்கை பார்த்தன.
ம.பொ.சி. வடக்கெல்லைப் போராட்டக்குழுவை உருவாக்கி சித்தூர், புத்தூர்,திருத்தணி ஆகிய இடங்களில் அரசு அலுவலகங்கள் முன்பும், தொடர் வண்டி முன்பும் மறியல் போராட்டங்களை நடத்தி வந்தார். இவருக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்தது. அவர் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக 3.7.1953இல் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பகுதிகள் குறித்து ஆராய எல்லை ஆணையம் அமைக்க நேரு ஒப்புக் கொண்டார். இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் நேரு ஒப்புக் கொண்டபடி எல்லை ஆணையம் அமைக்க வில்லை.

ஒவ்வொரு ஆண்டும் சூலை 3ஆம் நாள் வடக்கெல்லை பாதுகாப்பு குழு சார்பாக எல்லை ஆணைய நாள் கொண்டாடப் பட்டது. நேரு அரசாங்கம் இதையெல்லாம் பொருட்படுத்த மறுத்தது.

இதற்கிடையில், 1.11.1954இல் தமிழில் கூட்ட நடவடிக்கைகளை நடத்தியதாகக் கூறி தமிழர்களால் ஆளப்பட்டு வந்த திருத்தணிகை பஞ்சாயத்து சபையை ஆந்திர அரசு கலைத்தது.

ம.பொ.சி. தலைமையில் வடக்கெல்லை பாதுகாப்புக் குழு மீண்டும் கூடியது. அது மீண்டும் வடக்கெல்லைப் போராட்டத்தின் இரண்டாம் கட்டப் போரை தொடங்கப் போவதாக அறிவித்தது. போராட்டத் தளபதியாக விநாயகம் அறிவிக்கப்பட்டார்.

15.10.1956இல் தமிழகமெங்கும் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். அதுபோல் ரயில் வண்டி சங்கிலியை இழுத்து தொடர்வண்டி நிறுத்தப் போராட்டம் நடத்தியதால் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பி.கோவிந்தசாமி இராஜ முந்திரி சிறையிலும், மாணிக்கம் பழனி சிறையிலும் மாண்டனர். போராட்டத்தைக் கண்டு அச்சமுற்ற தமிழக காங்கிரசு அரசும், ஆந்திர அரசும் தங்களுக்குள் பேச்சு வார்த்தை நடத்தி வந்தன.

இதனையே காரணமாக காட்டி எல்லை ஆணையம் அமைக்க முடியாது என்று நேரு அரசு கைவிரித்தது. பேச்சு வார்த்தை நாடகம் தோல்வியுற்ற நிலையில் 1956ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் படாஸ்கர் என்பவர் தலைமையில் எல்லை ஆணையம் அமைக்கப்படுவதாக நேரு அறிவித்தார்.

1957ஆம் ஆண்டு வெளிவந்த படாஸ்கர் ஆணையத் தீர்ப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டு திருத்தணிகையை தமிழகத்தோடு இணைப்பதற்கு நேரு அரசு வழக்கப் போல் காலம் கடத்தியது.

நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்கு/சட்டம் ஆக்குவதற்கு திருத்தணிகை அன்றைய சபாநாயகர் அனந்த சயனம் அய்யங்கார், வட நாட்டு  நாடாளுமன்ற  உறுப்பினர் பண்டிட் தாகூர்தாஸ் பார்கவா ஆகியோர் திருத்தணி இணைப்பு மசோதாவை தடுக்க முற்பட்டனர்.

1959ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டு வரப்பட்ட இணைப்பு மசோதா நவம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதைக் கண்டித்து திருத்தணிகை பஞ்சாயத்து சபை கண்டன தீர்மானம் நிறைவேற்றியது. ம.பொ.சி. மத்திய அரசை வன்மையாகக் கண்டித்து கடிதம் எழுதினார். அதன் பிறகு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 1.4.1960இல் நடைபெற்றது. அப்போது எவ்வித திருத்தமும் இன்றி திருத்தணி இணைப்பு மசோதா சட்டமாக்கப்பட்டது.

வடக்கெல்லை மீட்புக்காக போராடிய மங்கலகிழார், ம.பொ.சி., தளபதி விநாயகம், மேயர் செங்கல்வராயன், கோல்டன் ந.சுப்பிரமணியம், திருத்தணிகை பஞ்சாயத்து தலைவர் சரவணய்யா, என்.ஏ.ரசீது மற்றும் சிறை சென்ற போராளிகளை இன்று நினைவு கூறுவோம்!

#வடக்கெல்லைமீட்பு 
#தமிழகத்தில்திருத்தணிஇணைப்பு 

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
1-4-2025


No comments:

Post a Comment

Yes… brutal killings

  Yes… brutal killings Quote Rishi Bagree @rishibagree · Aug 20 ”India lost 15000 citizens in Sri Lanka because of Rajiv Gandhi.” Reveals h...