Saturday, February 28, 2015

கடனில் தவிக்கும் விவசாயிகளின் கழுத்தை நெரிக்கும் தூக்குக்கயிறும், விஷக்குப்பிகளும்... (Farmer's Suicide ) (2)

கடனில் தவிக்கும் விவசாயிகளின் கழுத்தை நெரிக்கும் தூக்குக்கயிறும், விஷக்குப்பிகளும்... (Farmers Suicide )


காராஷ்ட்டிராவில் கடனில் சிக்கித்தவித்து தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளைப் பற்றிய விசாரணை தேசிய மனித உரிமை கமிசனில் நடந்துகொண்டிருக்கிறது என்பதையும், தமிழக விவசாயிகள் தற்கொலைகள் குறித்தும்  தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனுதாக்கல் செய்ய இருப்பதையும் கடந்த வாரப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன் .

கடந்த 2014டிசம்பர் மாதம் தேசிய மாதிரி கணக்கெடுப்பின் அறிக்கையின்படி, இந்திய விவசாயிகள் 52சதவிகிதம் பேர் கடன்வாங்கித் திக்குமுக்காடுகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில்  ஒரு சராசரி விவசாயிக்  குடும்பத்திற்கு ரூபாய் 47,000 கடனாக இருக்கிறது என்று இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. வேளாண்மை செய்வதின் மூலமாக  ஒரு விவசாயக் குடும்பத்திற்கு ஓராண்டுக்குக் கிடைக்கும் வருமானமோ வெறும் 36,922 ரூபாய் மட்டுமே.

விவசாயத்தின் இத்தகைய சீரழிவு பசுமைப்புரட்சி ஆரம்பித்த காலத்திலே துவங்கிவிட்டது. குறிப்பாக, ஆந்திரம், மகாராஷ்ட்டிரம், குஜராத், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் கடன் தொல்லையால் லட்சக்கணக்கில் விவசாயிகள் தற்கொலைகள் செய்துகொள்கின்றனர். தமிழகத்திலும் இந்த அவலநிலை 2012ல் ஏற்படத் துவங்கியது.

தமிழகத்தின் நெல்லைமாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள வரகனூரைச் சேர்ந்த ஜெகந்நாதன்,சங்கரன்கோவில்  மேலநீலிதநல்லூர் வெள்ளப்பனேரி செந்தூர்பாண்டியன், மயிலாடுதுறையைச் சேர்ந்த பூமிநாதன், கீவளூர் ராஜாங்கம், கீழையூரைச் சேந்த செல்வராஜ், பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி, ஏழை உழவன், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அப்துல் ரஹீம், சிவகாசி அருகே பாண்டி,  இப்படி பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன்சுமையால் தமிழ்நாட்டில் தற்கொலைச் செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள்.

கடன்சுமைகளால், ஆந்திரத்தில் 92சதவீதமும், தமிழகத்தில் 82.5சதவீதமும் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். கந்துவட்டிக்காரர்கள், விவசாயத் தரகுமண்டி தரகர்கள், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விற்பனையாளர்களிடம் விவசாயிகள்  கடன் வாங்குகின்றார்கள். 

இதுபோக, வங்கிகளிலும் வேளாண்கடன் வாங்குகின்றனர்.
இப்படி தனியாரிடம் வாங்கும் கடன்களைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போக, கடன் கொடுத்தவர்களுடைய ஏச்சுக்களுக்கும் , பேச்சுக்களுக்கும் பொறுக்கமுடியாமல் கடன்வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தமுடியவில்லையே என்ற சுயமரியாதையின் காரணமாக தங்களுடைய இன்னுயிரைத் துறந்த தியாக தீபங்களாக என்றும் மனதில் உள்ளனர். இதனால்தான் பலர் விவசாயத்தை விட்டுவிட்டு விளைநிலங்களை விற்பனை நிலங்களாக்கத்  துவங்குகின்றனர்.

இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சி விவசாய  நிலங்களைக் கபளீகரம் செய்யவும், விவசாயத் தொழிலை திண்டாடவும் வைத்துவிட்டது. சிறு மற்றும் மத்திய தரவிவசாயிகளை அப்புறப்படுத்திவிட்டு, பெரும் குழுமமாக கார்ப்பரேட் நிறுவனம் போன்று விவசாயத்தை நடத்த முயற்சிகள் தொடர்கின்றன. வரும் காலக்கட்டத்தில் விவசாயமே கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் சென்றுவிடுமோ என்ற நிலையில் செயல்பாடுகள் இருக்கின்றன.

மத்திய, மாநில அரசுகளும் விவசாயிகளின் இந்த அவலநிலையை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் தட்டிக்கழிக்கின்றது. வேடிக்கை என்னவென்றால் விவசாயம் நம்  நாட்டின் முக்கியத்தொழில் என்றும், இந்தியநாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்றும், ஏரின்றி அமையாது உலகு என்றும் விவசாயத்தோடான நம் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகின்றோம். ஆனால், விவசாயியின் வாழ்க்கைநிலை என்ன நிலையில் உள்ளதென்று பார்த்தால் வேதனை தருகின்ற செய்திகளே கிடைக்கின்றன.

2014ம் ஆண்டில்,  உத்தமர் காந்தி பெயரிலுள்ள ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூபாய் 34,000கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் நாட்டின் வளர்ச்சிக்கும், உள்நாட்டு உற்பத்திக்கும் முக்கிய தொழிலான விவசாயத்தொழிலுக்கு வெறும் 31கோடிகள் தான் மத்திய அரசு ஒதுக்கியது.

1950லிருந்து 1965வரை இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண்மையின் பங்கே அதிகமாக இருந்தது. கிட்டத்தட்ட 56சதவீதம் உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு இருந்தது. ஆனால் இன்றைக்கு 2011ம் ஆண்டில் வெறும் 15சதவீதத்திற்கு உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தினுடைய பங்கு தள்ளப்பட்டுவிட்டது.

இதற்கு யார் பொறுப்பு? நம்மை ஆளுகின்ற அரசுகளும், வொயிட் காலர் அதிகார வர்க்கமும் தான். வெறும் வெற்று வார்த்தைகள் விவசாயிகளின் வளர்ச்சித் திட்டங்கள் என்று சொல்லிக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது.
விவசாயிகள் போராட்டம் நாடுதழுவி நடைபெற்றது. குறிப்பாக, தமிழகத்தில் விவசாயிகள் சங்கத்தலைவர் நாராயணசாமி நாயுடு, கிருஷ்ணசாமி கவுண்டர் போன்றோர் நடத்திய போராட்டங்களும் வடபுலத்தில் திக்காயத் போன்றவர்கள் எல்லாம் விவசாயிகள் உரிமைக்குழுக்களை எழுப்பியதை மறக்கமுடியுமா?

விடுதலைப் போராட்டத்திலும் அவுரி விவசாயிகள் போராடினார்கள்,  ஏன் தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முதல்முதலாக நெல்லைமாவட்டத்தில் கடம்பூரில் விவசாயிகளின் உரிமைகேட்டு துப்பாக்கி ரவைக்குப் பலியான விவசாயி பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்.

தி இந்து தமிழ் நாளேட்டில், விவசாயிகளுடைய அவலநிலையை சாய்நாத்துடைய பத்திகளிலும், அவர் எழுதிய நூல்களிலும் வறட்சிப்பிடியில் விவசாயி எவ்வளவு அல்லல்படுகின்றான் என்பதைப் படிக்கப்படிக்க போர்க்க்குணம் தான் மேலோங்குகிறது.

1991ல் கோவில்பட்டியில் நடந்த ஒரு விவசாயிகள் போராட்டத்தின் போது, ஒரு காவல்துறை அதிகாரி பச்சைத்துண்டு போராடுறாங்க, வண்டிப் பைதாக்களைவச்சு விளையாடுறாங்கஎன்று கிண்டலாகச் சொல்லும் போது நான் பதிலுக்கு “மிஸ்டர், நீங்கள் அரசு அதிகாரியாக இருக்கலாம். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் விவசாயிகளின் பலம் பற்றி, நீங்கள் பேசும்பேச்சுக்கு விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும். பேசின வார்த்தைக்கு மன்னிப்புக் கேளுங்கள் என்று அவரை ஒரு பிடிபிடித்தவுடன் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இப்படித்தான் விவசாயிகளைப் பற்றி துச்சமாக பேசுவது, அரசுப்பரிபாலங்களின் வாடிக்கையாக இருக்கின்றது.

டெல்லியில் உள்ள கிரிஷி பவனில் அமர்ந்துகொண்டு விவசாயிகளின் நலனைப்பற்றி கமிட்டிகள் அமைத்துள்ளோம், அறிக்கைகளை வாங்கியுள்ளோம், ஆய்வு செய்கின்றோம் என்பதும் வாடிக்கை. மாநில தலைமைச் செயலகங்களிலும் இதே பதில் தான்.
இதே நிலைமை நீடித்தால், நாட்டில் விவசாயமும் இருக்காது; அரிசி-பருப்பு பால்  வரை அத்தனையும் இறக்குமதி செய்ய வேண்டியதுதான்.
 
வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும் குடி உயரக் கோல் உயரும் கோல் உயரக் கோன் உயர்வான்  ..

நாடு வளர்ச்சி பெற வேண்டுமென்றால் இந்த மணிவாசகங்கள் ஆளவந்தார்களினுடைய கவனத்தில் எப்போதும் இருக்கவேண்டும்.

-கே. எஸ். இராதாகிருஷ்ணன்.





No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...