Friday, February 27, 2015

14வது நிதிக்குழு - தமிழகத்திற்கு பாதிப்பு.




த்திய அரசின் வருவாயில் மாநிலங்களுக்கு நிதி ஆதாரங்களைப் பகிர்ந்து அளிப்பது எப்படி என பரிந்துரைகள் வழங்குவதுதான் நிதிக்குழுவின் முக்கியப் பொறுப்பு. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்தக்குழு ஒருவர் தலைமையில் சில உறுப்பினர்களைக்கொண்டு மத்திய அரசால் நியமிக்கப்படும். பொருளாதாரம் மற்றும் நாட்டின் பிரச்சனைகளைத் தெரிந்த நிபுணர்களை உறுப்பினர்களாக்க் கொண்டு இக்குழு நியமிக்கப்படுவதுண்டு.

கலைக்கப்பட்ட திட்டக்குழுவைப் பற்றியோ, தற்போது அமைக்கப்பட்டுள்ள  “நிதிஆயோக் பற்றியோ  அரசியல் அமைப்புச்சட்டத்தில் குறிப்பிடப் பட்டவில்லை. ஆனால் நிதிக்குழு மட்டும் அரசியலமைப்புச் சட்ட்த்தின்  அதிகார வரம்புக்குள் அடங்கியுள்ளது

14வது நிதிக்குழு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஒய்.வி.ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்டது, இதன் அறிக்கையை  கடந்த 24-02-2015ல் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டு, நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டுவிட்டது.


14வது நிதிக்குழு தன் அறிக்கையில், மத்தியஅரசு வசூலிக்கும் வரிமூலமான வருமானத்தில் 42சதவீத்த்தை மாநில அரசுகளுக்குப் பிரித்துக் கொடுக்கவேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது. கடந்த 13வது நிதிக்குழு,  மத்தியஅரசின் வரிவருமானத்தை மாநிலங்களுக்கு 32சதவீதமாகப் பிரித்துக் கொடுக்க வேண்டுமென்று பரிந்துரைத்திருந்தது.
இதனால், மாநில அரசுகளுக்கு குறைந்தபட்சம் 2015-2016 நிதி ஆண்டில் ரூபாய் 5.26லட்சம் கோடி நிதிஒதுக்கீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த 2014-2015நிதி ஆண்டில் மத்திய அரசு மூலமாகக் கிடைத்த பங்கு 3.48லட்சம் கோடி ஆகும்.

மத்திய அரசின் மொத்த வரிவருமானத்தில் 30மாநிலங்களுக்கு எப்படி நிதியைப் பிரித்தளிப்பது என்றும் 14வது நிதிக்குழு அறிக்கையில் பரிந்துரைகள் உள்ளன. இந்த அறிக்கையின் மூலமாக மாநிலங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வருமானம் அதிகரிக்கும். இதை மத்தியஅரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

முன்னேறிய மாநிலம் தனிநபர் வருமானம் போன்றவையெல்லாம் கணக்கில் கொண்டு நிதி ஆதாரங்களை இந்தக்குழு பிரிக்கப் பரிந்துரைத்துள்ளது. மேலும் இவ்வறிக்கையின்படி, மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு கூடுதலாக்கப் பட்டுள்ளது. அதனடிப்படையில், மக்கள்தொகை பெருக்கம் அதிகமுள்ள மாநிலங்களான பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், உத்திரப்பிரதேசம், உத்ராஞ்சல் போன்ற மாநிலங்களுக்கு நிதிக்குழு பரிந்துரையால் கூடுதல்நிதி கிடைக்க இருக்கின்றது.

இந்த கூடுதல்நிதி ஒதுக்கீடு பிரச்சனை 11வது நிதிக்குழுவிலிருந்தே கிளம்பி இருந்தது. அன்றைக்கு ஒன்றுபட்ட ஆந்திரமாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இதைக் கடுமையாக எதிர்த்தார். குடும்பக்கட்டுப்பாடு மூலம் மக்கள் தொகை கட்டுப்படுத்திய மாநிலங்களைப் பாராட்டி நிதிகொடுக்காமல் நிதிஒதுக்கீட்டைக் குறைப்பது எப்படி என்று 1998 காலக்கட்டங்களிலே பிரச்சனை எழுந்தது.

மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கீடு இருந்தால் 1971ம் ஆண்டு மக்கள்தொகையை அடிப்படையாக்க் கொண்டு கணக்கிடப்படவேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இந்த நிதிக்குழு தனது பரிந்துரையில் 1971ம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக்க் கொண்டால்  17.5சதவீதம் ஒதுக்கீடு செய்யலாம் என்றும், 2011 மக்கள் தொகையை அடிப்படையாக்க் கொண்டால்  10சதவீதம் தான் செய்யமுடியும் என்று பரிந்துரை செய்துள்ளது.

14வது நிதிக்குழு அறிக்கையின்படி, தமிழகத்திற்கு குறைவாகத்தான் நிதி ஒதுக்கீடு கிடைக்கும். வரிவருமானத்தில் 4.023சதவீதமும், சேவை வரி மூலமாக 4.104சதவீதமும் தமிழகத்துக்குக்  கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.  ஏற்கனவே 2லட்சம்கோடி ரூபாய் கடனில் தமிழக அரசு இருக்கின்றது. அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியத்திட்டங்கள், கல்வி வளர்ச்சி போன்ற அடிப்படைக் கூறுகளை தமிழகத்தைப் பொறுத்தவரை நிதிக்குழு சரியாக ஆய்வு செய்யவில்லை எனத் தெரிகிறது.  

நிதிக்குழு மாநிலங்களுக்கிடையே பாரபட்சமாக, பாதிக்கக்கூடிய அளவில் நிதி ஆதாரப் பரிந்துரைகளை செய்துள்ளது என்று விமர்சனமும் எழுந்துள்ளது.  சமஸ்டி அமைப்பில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல்  மாநிலங்களுடைய தேவைகள், புவியியல் அமைப்பு, மக்கள் பிரச்சனைகள் ஆகிவற்றைக் கருத்தில் கொண்டு சீராய்ந்து நிதிக்குழு தன் கடமையைச் செய்யவேண்டும். ஆனால் ஒவ்வொரு நிதிக்குழுவும் மாநிலங்களின் உண்மையான தேவைகளும், நடைமுறைப் பிரச்சனைகளையும் பற்றி அறியாமல் தங்கள் பரிந்துரைகளை அறிக்கைகளில் வழங்கிவிடுகின்றார்கள்.

கடந்த 6வது நிதிக்குழுவில் இருந்தே இதுபற்றிய விழிப்புணர்வு மாநிலங்களுக்கு ஏற்பட்டது. இராஜமன்னார் குழு  தி.மு.க ஆட்சியில் அமைத்து, மாநில சுயாட்சி என்ற கோரிக்கையை கலைஞர் அவர்கள் கேட்ட காலகட்டத்திலிருந்து, நிதிக்குழுவின் மீதும் திட்டக்குழுவின் மீதும் நியாயமான விமர்சனங்கள் எழுந்தன.

பண்டிதர் நேரு காலத்தில் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சிமட்டும்தான் இருந்தது. இதனால் நிதிக்குழுபற்றிய செயல்பாடுகள் எதுவும் வெளிப்படையாக அறியமுடியவில்லை. 1967க்குப்பின், மாநிலங்களில் காங்கிரஸ் இல்லாத ஆட்சி ஏற்பட்டதால், திட்டங்களை ஒதுக்குவதிலும், நிதி ஆதாரங்களைப் பகிர்வதிலும் மாற்றாந்தாய்ப் போக்கு டெல்லியில் உள்ளது என்ற விமர்சனம் எழுந்தது. அதற்கு அடிப்படை நிதிக்கமிசனும், திட்டக்கமிசனும் தான்.

மாநிலங்களின் தேவைகளை மதிப்பிடுவதில் நிதிக்குழுவினுடைய பங்கு மிகமுக்கியமானது. அமைப்பு ரீதியாக என்ன நிலையென்று பார்த்தால், நிதிக்குழுவை அமைக்கும் முறையிலும், அது பரிசீலனை செய்யவேண்டிய விஷயங்கள் எவை என்று நிர்ணயிப்பதிலும் மத்திய அரசு கையாளும் கொள்கை தவறானதாக அமைகிறது.

மத்திய அமைச்சரவையின் சிபாரிசின் பேரில் நிதிக்கமிசனை குடியரசுத்தலைவர் அமைக்கிறார். நிதிக்கமிஷனை நிர்ணயிப்பதிலும் அவை பரிசீலிக்கவேண்டிய பிரச்சனைகள் எவை என்று தீர்மானிப்பதிலும் மாநில அரசுகளின் பங்கு இல்லாமல் போகிறது. இதனால் மாநிலங்களின் நலனில் அக்கறை இல்லாதவர்கள் குழுவில் இடம்பெற்று விடுகிறார்கள்.

நிதிக்கமிஷன் அமைக்கும் போதே அதற்கான வரையறைகளை மத்திய அரசு ஏற்படுத்திவிடுவதன் மூலம் மாநிலங்களுக்கான நியாயமான கோரிக்கைகளைக்கூட நிதிகுழுவினால் கவனிக்கமுடியாமல் போகிறது. நிதிக்குழுவுக்கென்று நிரந்தரமான அமைப்பு எதுவும் இல்லை. இந்த காரணத்தினால் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையும் நிதிக்குழு முன்னால் இயங்கிய குழு தன்பணிகளை விட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது. இதனால் ஒவ்வொரு நிதிக்குழுவிற்கும் இடையிலான தொடர்ச்சிகளுக்கு சில சிக்கல்களும் ஏற்படுகின்றன.

அரசியல்சட்டத்தில் 252வது பிரிவு கடன்களைப்பற்றியும் , 293வது பிரிவு நிதிபங்கீடு பற்றியும், 270, 272, 275வது பிரிவுகள்  நிதிக்குழுவின் சிபாரிசுப்படி நிதிப்பங்கீடு செய்யப்படுவதையும் குறிப்பிடுகின்றன. ஆனால், நிதிக்குழுவின் சிபாரிசுகள் முழுவதையுமோ அல்லது சிலவற்றையோ நிராகரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கும் உண்டு. ஆகவே மத்திய அரசில் பொறுப்பில் உள்ள கட்சி எதுவோ அக்கட்சி தங்களது அரசியல் கொள்கைகளுக்கேற்ப நிதிக்கமிஷனின் பணிகளையும், உறுப்பினர்களையும் நியமித்து விட்டு கமிசனின் பரிந்துரைகளை ஏற்கவோ மறுக்கவோ செய்லாம்.

ஆகவே, முதலில் நிதிக்குழுவுக்கென்ற தனி அலுவலகம் இயங்கவேண்டும். நிதிக்குழு என்பது சுயாதிக்க அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும். அப்படி செயல்பட்டால்தான் அதனுடைய முடிவுகள் நியாயமானதாக இருக்கமுடியும். ஒருசமயம் மத்திய – மாநில உறவுகளைப் பற்றி ஆராய்வதற்கு துணைக்கமிட்டி அமைப்பது தொடர்பாக தேசிய வளர்ச்சிக்குழு முடிவு செய்தது. ஆனால் அப்போது தலைமையமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.

இந்த நிதிக்குழு தருகின்ற பரிந்துரைகள்தான் சிலசமயம் விதிகளாகி விடுகின்றன. நாட்டின் வளர்ச்சியை சீராக்க் கொண்டுசெல்வது நிதிக்குழுவின் பரிந்துரைகளும் மத்திய அரசின் அணுகுமுறையும் தான். இந்த நிதிக்குழுவில் உள்ளவர்கள் எதோ பொறுப்புக் கொடுத்துள்ளார்கள் என்ற நிலையில் இல்லாமல் தங்கள் பணியை இதயசுத்தியோடு பாரபட்சமில்லாமல் துலாக்கோல் நிலையிலிருந்து ஆற்றிடவேண்டும். .
நாட்டின் வளர்ச்சியில் நிதிக்குழுவின் பங்கு வெறும் எழுத்துக்களால் மட்டுமில்லாமல் அது செயலிலும் இருக்கவேண்டும்.


-கே. எஸ். இராதாகிருஷ்ணன்.


No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...