Thursday, February 12, 2015

நிடி ஆயோக்.








மாநில அரசுகளுக்கு ஐந்தாண்டு திட்டங்களுக்குத் தேவையான நிதியை மத்திய திட்டக் கமிசன் 60ஆண்டுகளுக்கும் மேலாக ஒதுக்கி செயல்பட்டுவந்தது. பண்டிதர் நேரு பிரதமராக இருந்தபொழுது, சோவியத் ரஷ்யாவில் இருப்பதைப் போன்று, பிரதமர் தலைமையில் திட்டக்குழு அமைக்கப்பட்டது.

திட்டக்குழுவினைக் குறித்து அரசமைப்புத் திட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. நிதிகமிஷன் செயல்பாடுகள் மட்டும்தான்  குறிப்பிடப்பட்டுள்ளது.  திட்டக்குழு மாநில முதல்வர்களையே கட்டுப்படுத்துகின்ற சூப்பர் கேபினட்டாக இருக்கின்றது என்ற விமர்சனங்கள் கடந்த காலத்தில் எழுந்தன. திட்டக் கமிசன் கொடுக்கின்ற பணத்தை வாங்கிக் கொண்டு தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசின் முதல்வர்கள் வாயைப் பொத்திக் கொண்டு தங்கள் மாநிலத்துக்குத் திரும்பவேண்டிய நிலை.

இதுகுறித்து பேரறிஞர்.அண்ணா, தலைவர். கலைஞர், கம்யூனிஸ்டு கட்சி முதல்வர்களாக இருந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஜோதிபாசு மற்றும் என்.டி.ராமாராவ், ராமகிருஷ்ண ஹெக்டே, போன்ற பலரும் ஏன் காங்.கட்சியின் வங்க முதல்வராக இருந்த டாக்டர் பி.சி.ராய் கூட திட்டக் கமிசனின் போக்கைக் கண்டித்துள்ளார்.

மோடி பிரதமரானவுடன் திட்டக் கமிசனுக்குப் பதிலாக “நிடி ஆயோக்” குழுவினை  அமைத்துள்ளார். இதனை அமைத்தவுடன் மாநிலங்களின் கருத்துகளை கேட்காமல்   அவசர அவசரமாக இதனை அமைத்துள்ளார் என்ற விமர்சனம் எழுந்தன.

கடந்த 8-02-2015 அன்று மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் அனைத்து மாநில முதல்வர்கள் கலந்துகொள்ள “டீம் இந்தியா” என்ற தலைப்பில் இந்த கூட்டம் புதுடெல்லியில் நடந்தது. யூனியன் பிரதேசங்கள் இந்தக் கூட்டங்களுக்கு அழைக்கப் படவில்லை. எனவே புதுவை மாநில முதல்வர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இக்கூட்டத்தில் கிடப்பில் உள்ள திட்டங்களை நிறைவேற்றப்பட வேண்டுமென்று மாநில முதல்வர்கள் குறிப்பிட்டனர். வெவ்வேறு பெயர்களில் உள்ள திட்டங்களை ஒரே பெயரில் நடைமுறைப்படுத்துவதைக் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும். வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும்,  “தூய்மையான இந்தியா” திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவும் முடிவுகள் எடுக்கும் என்று மோடி பேசினார்.

 அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகள்.

*கடந்த ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட
140க்கும் மேலான திட்டங்கள், 66 ஆக குறைக்கப்பட்டது. மேலும் அவை இந்த கூட்டத்தில் 10 திட்டங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

* அவ்வாறாக பல திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, மற்றவை மாநில அரசுகளுக்கு கைமாற்றப்படும். 10 திட்டங்கள் மட்டுமே மைய அரசின் திட்டங்களாக இருக்கும். இதில் மத்திய அரசு தன் விருப்பத்தின்படி, தனக்கு வேண்டிய மாநிலங்களுக்கு திட்டங்களும், நிதி ஆதாரங்களும் ஒதுக்க வாய்ப்பும் உள்ளது.

*இந்த 66 திட்டங்களுக்கும் சுமார் 3லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசின்மூலம் ஒத்துக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மாநில அரசுகள் மைய அரசின் அதிகப்படியான கட்டுப்பாடுகள் இன்றி திட்டங்களுக்குச் செலவு செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தாலும், அது எப்படி, எவ்வாறு என்று தெரியவில்லை.

இக்கூட்டத்தில் மோடி, மாநிலங்களுக்கிடையே கூட்டுறவான சமஸ்டி அமைப்பு வேண்டுமென்று சொல்லியுள்ளார்.

ஹரியானா முதல்வர் நதிகள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டு நதிகளை இணைக்கவேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 48 சதவீத நிதி ஒதுக்கீடுதான் எங்களுடைய மொத்த கோரிக்கைகளில் கிடைக்கிறது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, ரயில்வே திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசே செலவு செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மகராஷ்ட்டிர முதல்வர் தேவேந்திர பாண்டவிஸ், மாநிலங்களே திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதிகளை செலவு செய்ய உரிய அதிகாரத்தை வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு மாநிலங்கள் இன்றைக்கு நிதி ஆதாரங்கள் இல்லாமல் தன்னுடைய அரசு ஊழியர்களுக்கு ஊதியமும், பணிஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியமும் குறிப்பிட்ட தேதியில் வழங்க முடியாமல் தவிக்கின்றன.  இப்பிரச்சனை தமிழ்நாடு, ஆந்திரா, பீகார், கேரளா, புதுவை போன்ற பலமாநிலங்களில்  வெளிப்படையாக எதிரொளிக்கின்றன.  இனி எதிர்காலத்தில் அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம் கொடுப்பதற்கு மாநில அரசுகள் தத்தளிக்கும் என்று நாளேடுகளிலும் செய்திகள் வருகின்றன.

இந்தியா பல்வேறு தேசிய இனங்களும், மொழிகளும், கலாச்சாரங்களும், பண்மையில் ஒருமை என்ற நிலையில் மக்களாட்சியையும், இறையாண்மையையும், இதுவரை கட்டிக்காத்து வருகின்ற நாடு. இதில் மத்திய அரசு மாற்றாந்தாய் போக்கில் மாநிலங்களை அணுகினால் நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும்.

மொழிப் பிரச்சனைகளிலும், கலாச்சார நடவடிக்கைகளிலும், நிதி ஆதாரங்களை சமநிலையில் ஒதுக்குவதிலும், நதிநீர்ப் பிரச்சனைகளிளும், திட்டங்கள் ஒதுக்கீட்டிலும் பாரபட்சமில்லாமல் துலாக்கோல் நிலையில் மத்திய அரசு நடந்துகொள்வதே நல்லது.  இந்த நிலைக்கு மத்தியஅரசு உட்படுத்தப் பட்டால்  மோடி குறிப்பிட்ட கூட்டுறவு சமஸ்டி  என்ற முறை   வெற்றி பெறும். எல்லாமே தில்லி நார்த் ப்ளாக் பாதுஷாவின் கைகளில் தான் உள்ளது.

மத்திய மாநில உறவுகளை அறிந்து அவற்றை சீர்படுத்த அனுமந்தையா நிர்வாக சீர்குழு அறிக்கை, தலைவர். கலைஞர் அமைத்த ராஜமன்னார் குழு அறிக்கை, மேற்குவங்கத்தின் முதல்வராக இருந்த ஜோதிபாசுவின் வெள்ளை அறிக்கை, கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேயின் மத்திய மாநில உறவு மாநாட்டின் தீர்மானங்கள், இந்திராகாந்தி அமைத்த சக்காரியா குழு அறிக்கை, கஷ்மீர் மாநில முதல்வராக இருந்த ஃபாருக் அப்துல்லா நடத்திய ஸ்ரீநகர் மாநாட்டின் பிரகடனம். பூஞ் குழுவின் அறிக்கை என பல அறிக்கைகள் மத்திய அரசின் பார்வையில் இருந்தும் எவ்விதமான, ஆக்கப்பூர்வமான மேல்நடவடிக்கைகளும் மத்திய அரசிடமிருந்து இல்லை.

ஒரே ஆறுதல், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356-ன் படி மாநில அரசுகளை கடந்த 1993ம் ஆண்டுவரை  110முறை தங்கள் விருப்பம் போல மத்தியஅரசு கலைத்தது. ஆனால் உச்சநீதிமன்றம்  “பொம்மை” வழக்கில்,  பிரிவு356-னை பிரகடனபடுத்தி மத்திய அரசு மாநிலாரசுகளைக் கலைப்பதினை கட்டுப்படுத்தியது. இன்றைக்கு மத்தியில் 1990 மற்றும்  அதன்பின் 1996-2014 ஆண்டுகள்வரை  வட்டார கட்சிகளான மாநிலகட்சிகளின் ஆளுமையில் தான் மாநில அரசின் ஆட்சி அமைந்தன.


இப்போதுகூட பா.ஜ.க-வோ காங்கிரஸோ மாநில கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தால்தான் வெற்றிபெறமுடியும்.
இந்த நிலைமை 1969முதல் இந்திராகாந்தி காலத்திலிருந்தே நடைமுறையாகிவிட்டது. தங்களிடம் தான் அதிகாரங்கள் குவிந்திருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டால் நாட்டு நலனுக்கு நல்லதல்ல. மாற்றியமைக்கப்பட்ட நிடி ஆயோக் இவற்றையெல்லாம் மனதில்கொண்டு தன் கடமைகளை ஆற்றவேண்டும்.


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...