———————————————————
மகாகவி பாரதி மறைந்து நூறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. பல்வேறு ஆளுமைகள் பாரதியாரைக் குறித்து 1940-களிலிருந்து எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து ‘#கரிசல்_காட்டின்_கவிதைச்_சோலை__பாரதி’ என்ற நூலை வெளியிட இருக்கின்றேன்.
இதில் ஏறத்தாழ 70 கட்டுரைகளோடு ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, ப.ஜீவானநந்தம், கலைஞர், ம.பொ.சி. என பல முக்கிய புள்ளிகளின் கட்டுரைகளும், எட்டையபுரம் பாரதி மண்டப திறப்பு விழா கல்கி சிறப்பிதழின் சில பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
பாரதி நூற்றாண்டில் மத்தியரசும், தமிழக அரசும் சிறப்பு செய்யவேண்டும்.
இந்திய அரசு பாரதி பயின்ற வாரணாசியின்இந்துசர்வகலாச்சாலை
யில் அவருடைய முழு உருவச்சிலை அமைக்கவேண்டும். வாரணாசிப் பல்கலைக்கழகத்திலும், டெல்லி பல்கலைக்கழகத்திலும் பாரதி குறித்து ஆய்வு செய்ய இருக்கைகள் நிறுவ வேண்டும். பாரதி நூற்றாண்டுக் குறித்துச் சிறப்புஅஞ்சல்தலையும்வெளியிட
வேண்டும்.
தமிழக அரசை பொறுத்தவரையில்,
1. 1989-ல் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எட்டையபுரத்தில், அப்போது நான் தி.மு.க சார்பில் போட்டியிட்ட போது நாட்டுப்புற கலைகளை ஆய்வு செய்யக்கூடிய ஒரு கிராமிய பல்கலைக்கழகத்தை அமைய குரல் கொடுப்பேன் என்று உறுதியளித்தேன். ஆனால் நான் தேர்தலில் வெற்றியீட்ட முடியவில்லை. இந்நிலையில் பாரதி பெயரில் எட்டையபுரத்தில் கிராமிய வளர்ச்சி குறித்தான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்க வேண்டும்.
2. திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள பாரதி படித்த ம.தி.தா இந்து கல்லூரி மேல்நிலை பள்ளியில் அவர் குறித்தான கருவூலத்தைத் தமிழக அரசு அமைக்க வேண்டும்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேல் பாரதியை படித்து, அவர் கூற்றை நேசிப்பவன் என்ற முறையில் இந்தக் கருத்தை முன்வைக்கின்றேன். நான் என்ன நினைத்தேனோ அதையே மூத்த தமிழறிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் நேற்றுத் தனது முகநூலில் பாரதிக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளைக் கூறியுள்ளார். அதை வழிமொழிந்து அரசுகள் இதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
••••
சிற்பி பாலசுப்பிரமணியம்
பாரதியார் நினைவு நூற்றாண்டு
———————————————
நமது முதல்வர் ஸ்டாலின் மகத்தான தலைவர்களுக்கெல்லாம் மணி மண்டபங்களும் சிலைகளும் அமைப்பது மகிழ்ச்சி தருகிறது. இந்த மாதம் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நூற்றாண்டு மாதம். அது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாத்து ஏமாற்றம் தருகிறது.
1. பாரதியார் கடைசியாகப் பயணம் செய்த ஈரோடு கருங்கல்பாளையத்தில் சிலை அமைக்கலாம். வாசக சாலையைக் கண்டறிந்து நினைவகமாக்கலாம்.
2. அவர் வாழ்ந்த கடையம் சிற்றூரில் நினைவு நூலகம் அமைக்கலாம்.
3. சுதேசமித்திரன் பத்திரிகை இருந்த இடத்தில் கவிஞருக்கு நினைவுச் சின்னம் உருவாக்கலாம்.
4. சரியாகப் பேணப்படாத புதுவை பாரதியார் இல்லத்தை ஓர் ஆலயம் போல் திருப்பணி செய்யலாம்.
5.கவிஞர் பெயரால் அமைந்த பல்கலைக் கழகத்தில் பாரதியார் உயராய்வு மையம திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குத் துணைவேந்தருடன் கலந்து தேவையான பெரு நிதியை (கட்டடம் ,ஆய்வகம்,அருங்காட்சியகம், பாரதியார பெயரால் உயர் விருது முதலிய பல) அரசு உதவ வேண்டும்.
6. மகாகவிக்கு நினைவு நூற்றாண்டு என்பது அரிதான ஒரு வாய்ப்பு. இதனை அரசு தவறவிடக் கூடாது.
7.அரசுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகள் சொல்லச் சேர வாரும் செகத்தீரே!
——————-07.08.21————————
No comments:
Post a Comment