————————————————
இராஜீவ் படுகொலையில், தம்பி
அருப்புக்கோட்டை இரா.பொ.இரவிச்சந்திரனைச் சேர்க்கப்பட்டு ,ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார். இந்த வழக்கு சரியானபடி புலனாய்வு செய்யப்படவில்லை என்று நாம் பலமுறை சொல்லி வருகிறோம்.
அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரோல் வழங்கியுள்ளது. பரோலுக்கு பல கட்டுப்பாடுகள் இருக்கட்டும். அவரை சந்தித்து நலன் கேட்க வருபவர்களிடமும் நெருக்கடிகளையும், கடும் கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது காவல் துறை. வீட்டைச் சுற்றி அதிகமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதே போல மற்ற ராஜீவ் படுகொலையில் தண்டனை பெற்றுபரோலில்வந்தவர்களுக்கெல்லாம் இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை. இரவிச்சந்திரனுக்கு மற்றவர்களைப் போல ஊடக வெளிச்சமும் இல்லை, மற்ற கைதிகளுக்கு கிடைக்கும் நியாயமான ஆதரவும் இல்லை. அது ஏனோ?
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் உத்தரவுக்கு கீழ்படிந்து நடப்பது அனைவரின் கடமையே. ஆனால் அதற்கு மேலும் காவல் துறையினர் கடுமை காட்டுவது நல்லதல்ல. பத்திரிக்கையாளர் ஏகலைவன் இவரை சந்திக்க நேற்று அருப்புக்கோட்டைக்குச் சென்ற போது அவருக்கு அனுமதியும் இல்லை. நேரடியாக கண்ட காட்சிகளை குறிப்பு வாயிலாக எனக்கு அனுப்பியுள்ளார்.
அது வருமாறு.
வணக்கம் ஐயா.
நேரில் கண்டவைகளை வைத்து எழுதுகின்றேன். இரவிச்சந்திரனுக்கான பரோல் ‘இறுக்கத்துடனே’யே நகர்கிறது. 100 போலீஸ் பாதுகப்பு. சுழற்சி முறையில் 50 பேர். நான்கடுக்கு பாதுகாப்பு. சந்திக்க செல்லும் நபர்கள் பெட்ரூமில் அமர்ந்து கொண்டு பேசினாலும் உள்ளே நின்றுகொண்டு வீடியோ பதிவு.
பார்க்க வருவர்களை விசாரணை என்ற பெயரிலேயே ஒரு அச்சுருத்தல், சுற்றி நான்கு தெரு முனையிலும், வீட்டிற்கு முன்னும் பின்னும் கண்காணிப்பு கேமரா. வாசலில் டிடெக்டர் மெஷின். மூன்று இடத்தில் பெயர் பதிவு, விசாரணை. வீட்டிற்குள் நுழையும் போதும் பெயர் பதிவு விசாரனை…
இவ்வளவும் இதற்கு முன் பரோலில் வந்த மற்றொருவருக்கு இல்லை. மிகச் சாதாரணமாக 1000 பேர் வரை சென்று பார்த்து வந்தார்கள். அங்கே வாசல் முன்பாக ஒரு பத்து போலீஸார்தான் இருந்தார்கள். பேட்டி, செல்போன் பதிவு கூடாது என கேட்டுக்கொண்டார்கள். அவ்வளவுதான். அதாவது அவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள். அப்பாவிகள், நேர்மையானவர்கள், சுத்தமானவர்கள். ஆபத்தில்லாதவர்கள்…என்றாக காட்டப்பட்டார்கள். அதற்கேற்ற லாபி அங்கே இருந்தது.
ஆனால் இரவிக்கு அது முற்றிலும் இல்லை. அவரை புலிப்போராளியாக, பயங்கரவாதியாக, ஆபத்தானவர்களாக சித்தரிக்கத்தான் இப்படிச் செய்கிறார்கள். தயவு செய்து இந்த போக்கையாவது உடைக்கப் பாருங்கள். பொது வெளியில் பேசுங்கள், சாதி இன ரீதியாககூட வேண்டாம். நீதிப்படியாகவும் செய்யுங்கள். உங்களால் தான் முடியும். அங்கே நிலைமை மோசமாக தான் உள்ளது.
தவிர, என்னை புத்தக தொகுப்பாளர் என்பதால் (தெரிந்து கொண்டார்களாம்) சுத்தமாக மறுத்துவிட்டார்கள். செய்தியாளர்கள் வேறு, எழுத்தாளர் பதிப்பகத்தார் வேறு என எவ்வளவு விளக்கியும் மறுத்து விட்டார்கள். வேதனையோடு திரும்பி விட்டேன். எனக்கு பரவாயில்லை. போகட்டும்.
தயவு செய்து இரவின் நிலைமையை கொஞ்சம் மாற்றுங்கள். அவருக்கான லாபி சுத்தமாக இல்லவேயில்லை. உங்களால்தான் முடியும். பொது வெளியில் கொஞ்சம் பேசுங்கள் ஐயா.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
- ஏகலைவன்
#இரா_போ_இரவிச்சந்திரன்
#விடுதலைப்_புலிகள்
#இராஜீவ்_படுகொலை
#Rajiv_assassination
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09/03/2018
No comments:
Post a Comment