Tuesday, March 13, 2018

குற்றச்சாட்டுக் கறைபடிந்த எம்.பி., எம்.எல்.ஏக்களை விசாரிக்க 11 மாநிலங்களில் தனி விரைவு நீதிமன்றங்கள் அமையவுள்ளது.

ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடை விதிக்கலாமா என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த பொது நல வழக்கைத் தொடுத்தவர் வழக்கறிஞர் அசுவிணிகுமார் உபாத்பாய். அந்த வழக்கின் முக்கிய சாராம்சம்.
- அரசு மற்றும் நீதித்துறை பணிகளில் உள்ள ஒருவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால், வாழ்நாளெல்லாம் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்பட்டு விடுகிறது.
- கிரிமினல் வழக்கில் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுகிறபோது, தண்டனை முடிந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டால், எம்.எல்.ஏ., ஆகலாம். மந்திரியாகக்கூட ஆக முடியும்.
- அரசு, நீதித்துறை ஊழியர்களுடன் ஒப்பிடுகையில் அரசியல்வாதிகளுக்கு மாறுபட்ட விதிகளை நாம் அமல்படுத்த கூடாது.
- வாழ்நாளெல்லாம் தேர்தலில் நிற்பதற்கு அரசியல்வாதிகளுக்கு தடை விதிக்காதவரையில, அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியாது என வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் காகோய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடை விதிப்பதில் தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் 2 வார காலத்தில் பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி நிர்ணயிப்பது பற்றியும், அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வயது வரம்பு கொண்டு வருவது குறித்தும் பதில் தெரிவிக்குமாறு நீதிபதிகள் ஆணையிட்டனர். இதில் சுப்ரீம் கோர்ட்டு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க விரைவு கோர்ட்டுகள் அமைக்குமாறு கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், 1,765 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது நிலுவையில் உள்ள 3 ஆயிரத்து 816 குற்றவியல் வழக்குகளை விசாரிக்க விரைவு கோர்ட்டுகளை அமைக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டிருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, கர்நாடகா உள்பட 11 மாநிலங்களில் இந்த கோர்ட்டுகள் அமைக்கும் பணி நடந்து வருவதாகவும் கூறியுள்ளது.
இது ஒப்புக்காக இருக்கக் கூடாது. இந்த முயற்சியை வலுவாகவும், நேர்மையாகவும் எடுத்துச் சென்று தவறு செய்த மக்கள் பிரதிநிதிகள் தண்டிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இதெல்லாம் வெட்டிப் பேச்சுகள், கூத்துகள் ஆகிவிடும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13/03/2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...