சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட பிரெஞ்சு உணவகம் முதல் பாட்டா ஷோரூம் வரை கண்ட சரித்திரம். ஒரு காலத்தில் சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்து தற்போது பாட்டா ஷோரூமாக இருந்த அண்ணா சாலை ஹோட்டல் டி ஏஞ்சலிஸ் கட்டிடம் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது.
கொலோசியம் கட்டிடம் இத்தாலி நாட்டின் ரோம் நகரில் அமைந்துள்ளது. இது கி.பி. 80-ம் ஆண்டில் ரோமானிய அரசர்களால் கட்டப்பட்ட மிகப் பழமையான கட்டிடமாகும். இந்த அரங்கத்தில் தான் போர் வீரர்கள் தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும் சண்டையிடும் இருந்தது. நீள்வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தில் ஒரு சமயத்தில் சுமார் 65 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும். இயற்கை பேரிடர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தக் கட்டிடத்தில் சிதைவுகள் ஏற்பட்டாலும், இன்றும் ரோமானிய அரசின் சின்னமாகவும், ரோம் நகரின் முக்கிய அடையாளமாகவும் விளங்குகிறது.
அதுபோல, 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை அண்ணா சாலையில் கட்டப்பட்ட ஹோட்டல் டி ஏஞ்சலிஸ் கட்டிடமும் இன்று, ரோம் நகரத்தின் சிதைவடைந்த கொலோசியம் கட்டிடத்தைப் போல காட்சியளிக்கிறது.
இந்தக் கட்டிடத்தின் வரலாறு மிகவும் சுவாரசியமானது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1875-ம் ஆண்டு பக்கிங்ஹாம் இளவரசர் ரிச்சர்ட் சென்னை ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் சென்னைக்கு வந்தபோது பிரெஞ்சு, இத்தாலிய உணவு வகைகளை சிறப்பாக தயாரிக்கும் ‘கியாகோமோ தி ஏஞ்சலிஸ்’ என்பவரையும் உடன் அழைத்து வந்தார். பின்னர் 1880-ல் ரிச்சர்ட் இங்கிலாந்து திரும்பினார். ஆனால், கியாகோமோ தி ஏஞ்சலிஸ் அவருடன் செல்லாமல் சென்னையிலேயே தங்கிவிட்டார். அதன் பிறகு, ஆர்டரின் பேரில் பலருக்கும் பிரெஞ்சு, இத்தாலி உணவுகளை சமைத்துக் கொடுத்துள்ளார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், 1900 காலக் கட்டத்தில் சென்னை அண்ணா சாலையில் இந்தோ - சாரசெனிக் கட்டிடக் கலையில் ‘ஹோட்டல் தி ஏஞ்சலிஸ்’ கட்டிடத்தைக் கட்டினார்.
இதற்கிடையில், டி ஏஞ்சலிஸ் கட்டிடம் பிரபல பேக்கரி நிறுவனத்துக்கு கைமாறி ‘பொசோட்டா’ என ஆனது. பின்னர் பல கைகள் மாறிய அந்த கட்டிடம் பின்னாளில் ‘பாட்டா ஷோரூம்’ என்ற அடையாளத்தைப் பெற்றது. போதிய கலை அம்சங்கள் இல்லாததால் பாரம்பரிய பட்டியலில் இடம் பெறவில்லை.
இந்த கட்டிடத்தின் அருகில் தான் ரிப்பன் எங்கள் அப்பன் என பாராட்டப்பட்ட ரிப்பன் சிலை அமைந்தது. அது போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த நிலையில், பின்பு சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் கட்டிடத்திற்கு மாறியது. ஒருகாலத்தில் சென்னையின் முக்கியப் பிரமுகர்கள் வந்து செல்கின்ற கேந்திரமாக இந்த கட்டிடம் விளங்கியது. அப்படிப்பட்ட கட்டிடத்திற்கு முடிவு வந்துவிட்டது. ஆனால் அதன் நினைவுகள் தொடர்ந்து சென்னையின் வரலாற்றுப் பக்கங்களில் இருக்கும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11-03-2018
No comments:
Post a Comment