Friday, January 22, 2021

———————-
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில்,
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்,
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்,
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
............................................
பதவுரை
புள்ளும் - பக்ஷிகளும்,
சிலம்பினகாண் - சப்திக்கின்றன,
புள்ளரையன் - பக்ஷிராஜனான கருடனுக்கு நிர்வாஹகனான,
கோ - ஸ்வாமிக்கு,
இல் - வாஸஸ்தாநத்தில் (கோவிலில்)
வெள்ளை - வெளுப்பான,
விளி - கைங்கர்யபரர்களைக் கூப்பிடுகிற,
சங்கின் - சிங்கத்தினுடைய,
பேரரவம் - பெரிய சப்தத்தை,
கேட்டிலையோ - கேட்கவில்லையோ?
பிள்ளாய் - சிறுபெண்ணே,
எழுந்திராய் - எழுந்திரு,
பேய் - பூதனையாகிற பேயின் முலை தநத்திலுள்ள,
நஞ்சுண்டு - விஷத்தை சாப்பிட்டு,
கள்ள - வஞ்சனையுடைய,
சடகம் - வண்டியாய் வந்த அசுரனை,
கலக்கு அழிய - உருக்குலைந்து அழியும்படி,
கால் ஓச்சி - திருவடிகளால் உதைத்து,
வெள்ளத்து - திருப்பாற்கடலில்,
அரவில் - திருவநந்தாழ்வான் மேல்,
துயில் அமர்ந்த - நித்திரையை அடைந்த,
வித்தினை - காரணமானவனை,
முனிவர்களும், - மனனம் பண்ணுமவர்களும்
யோகிகளும் - யோகம் பண்ணுமவர்களும்,
உள்ளத்துக்கொண்டு - இருதயத்தில் தரித்துக் கொண்டு,
மெள்ள எழுந்து - மெதுவாக எழுந்திருந்து,
அரி என்ற - ஹரி : ஹரி : என்ற
பேரரவம் - பகவந்நாம சப்தங்கள்,
உள்ளம் புகுந்து - நெஞ்சில் பிரவேசித்து,
குளிர்ந்து - குளிர்ந்தது,
ஏல் ஓர் - எம்பாவாய்.
...................................................
“பொழுது விடிந்துவிட்டது”
பறவைகள் ஓசையிடத் தொடங்கிவிட்டன. பறவைகளுக்கெல்லாம் தலைவனாம் கருடனின் அரசனான எம்பெருமானின் கோவிலில் ஒலிக்கும் வெண்சங்கின் ஓசை உனக்கு கேட்கவில்லையா..?
பெண்ணே, எழுந்திரு....! பூதகியின் முலையில் சுரந்த நஞ்சினைக் குடித்தவனை, சக்கர வடிவில் உருவெடுத்து வந்த சகடாசூரனை தனது காலால் கொன்றவனை, திருபாற்கடலில் பள்ளி கொண்ட உலகின் முதற் காரணனான நாராயணனை, முனிவர்களும், யோகிகளும், தங்களது சிந்தையில் நிறுத்தி, ”அரி” என்று வணங்கி, ஓதும் ஓசை, உள்ளமெங்கும் குளிர்விக்கிறதே....!
நீயும் எழுந்திராய்....!
என்று தூக்கத்திலிருந்து எழாத ஆயர்குலப் பெண்ணை எழுப்புகிறாள் கோதை...!
..................................


பாவை நோன்புக்காக மார்கழி நீராடுதல் என்னும் பெயரால் கண்ணனைக் கண்டு உவக்கும் அனுபவம் கிடைக்கின்றது. இவ்வனுபவம் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டுமே என்ற பேருள்ளத்தால் உறங்குகின்றாரையும் எழுப்புகின்றார்கள் ஆயப் பெண்கள். இனிவரும் பத்துப் பாட்டுக்களும், இந்நோன்பின் சுவடறியாதாரை எழுப்புவதாக அமைகின்றன. ‘இனிது இனிது ஏகாந்தம் இனிது’ எனக் கண்ணனைத் தாமே தனித்திருந்து தேடாமல் தோழிமாரோடு துணையாகத் தேடுதலை மேற்கொள்கிறார்கள். இந்த அனுபவம் அவர்களது விசால நோக்கையும், அடையத் தக்கவனின் பேரருட் பரப்பையும் காட்டுவதாக அமைந்துள்ளது.
உறங்கும் ஒருத்தியின் இல்லத்துக்கு வருகிறார்கள் முன்னம் துயிலெழுந்தவர்கள். ‘வைகறைப் போதிலேயே எழுந்து விடுவதாகச் சொன்ன நீ இன்னும் கிடந்துறங்குகின்றாயோ?’ என வினவுகின்றனர். அவளோ, ‘விடிந்தால் தானே எழுந்திருக்க முடியும்?’ என்கின்றாள்.
’அடி பெண்ணே, பொழுதுதான் விடிந்து விட்டதே’ என்கிறார்கள் இவர்கள். ‘அப்படியானால் விடிந்ததற்கு அடையாளம்தான் என்ன?’ என்று கேட்கிறாள். உள்ளே, இருப்பவள், ‘நாங்கள் விழித்தெழுந்து வந்துள்ளமை போதாதோ?’ என்று எழுப்புவோர் கேட்கின்றனர். ‘நீங்கள் உறங்கினாலன்றோ விழித்தெழுவது’ கண்ணன் நினைவால் உறங்காமலேயே இருப்பவரன்றோ நீங்கள்’ என்கிறாள் அவள். ‘விடிந்தமைக்கு வேறு அடையாளமுண்டோ?’ என்று அவள் வினவ அவளுக்குப் பதில் சொல்லத் தொடங்குகிறார்கள் இப்பாடலில்,
“புள்ளும் சிலம்பின காண்” - எங்கும் விடிகாலைப் பறவைகளின் ஒலி முழங்குகிறதே விடிந்ததற்கடையாளமாய்’ என்கிறார்கள் வந்தவர்கள். அதனாலும் அவள் எழுந்திருக்கவில்லை. ‘உங்கள் புறப்பாட்டின் ஆர்ப்பாட்டத்தால் பறவைகளையும் எழுப்பி விட்டீர்கள் போலும்,... மேலும் நீங்கள் பிறந்த ஊரில் பறவைகளுக்கும் உறக்கமுண்டோ? காலையெழுந்திருந்து கரிய குருவிக்கணங்கள் மாலின் வரவு சொல்லி, மருள்பாடுதல் மெய்மைகொலோ என்றன்றோ இருப்பது?’ எனவே விடிவுக்கு வேறடையாளம் உண்டோ? என்கிறாள் அவள். அதற்கு விடையாக இவர்கள் சொல்கிறார்கள் ‘புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?’ என்று, ‘அடி பெண்ணே, பறவைகள் ஒலியைத்தான் மறுத்துவிட்டாய். பறவைகளுக்கெல்லாம் அரசனான பெரிய திருவடி இருக்கும் கோயிலிலே இருந்து திருப்பள்ளியெழுச்சியின் அடையாளமாய் வெண்சங்கின் பெருமுழக்கம் கேட்கவில்லையா?’ என்றார்கள்.
அப்போதும் அவள் எழுந்து வரவில்லை. “வெள்ளை விளிசங்கு” என்பதால் வெள்ளை விடிந்ததற்கு அடையாளமோ? சாமம்தோறும் சங்கு முழங்குவதுண்டே. அதனால் சங்கு ஒலிப்பதும் அடையாளமோ? என்று கருதிக் கிடந்தாள் போலும். அதனால் கோபமுற்ற பெண்கள் ‘இன்னும் நீ அறியாப் பிள்ளைதானே’ என்னும் கருத்துப்படப் ‘பிள்ளாய் எழுந்திராய்; என்கிறார்கள்.
நான்தான் இளம் பிள்ளை.... போகட்டும் உங்களை எழுப்பினார் யார்? என்று கேட்கின்றாள் அவள். உறங்குகின்றவள் திடுக்கிட்டெழுமாறு கண்ணன் அதிசயங்களைக் கூறுகின்றனர் எழுப்ப வந்த பெண்கள்.
‘பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை’ - ‘தாயும் உதவாத தனிமையிலே பேயாக வந்த பூதகியிடம் நச்சுப்பால் அருந்தி அழித்து, சக்கரமாய் உருண்டு வந்த சகடாசுரனைக் கலங்க உதைத்தழித்து, பாற்கடலில் அனந்த சயனனாய் அறிதுயில் கொண்டு விளங்கும் அவதார வித்தான’ திருமாலில் விசேஷங்களைச் சொல்லுகின்றனர்.
’உங்களை எழுப்பினார் யார்?’ என்ற வினாவிற்கு உத்தரமாகத் திருமாலின் பெருமைகள் கூறி, ‘அத்தகைய பெருமாளை நெஞ்சத்தில் இருத்தி வைத்துள்ள முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரி அரி என்ற பேரரவம் எங்களை எழுப்பிற்று’ என்கிறார்கள்.
இந்த ஆய்ப்பாடியில் முனிவர்களும் யோகிகளும் எப்படி வந்தனர்? எனில் கண்ணனைக் கண்டு அனுபவிக்கப் பசுக்கொட்டில்களிலே வந்து படுகாடு கிடந்தனர் என்பர். அவர்கள் மெள்ள எழுந்து அரியென்றமைக்குக் காரணம் உள்ளத்திலிருக்கும் அவனுக்கு ஏதும் இடையூறு நேராதிருக்க - கர்ப்பிணிப் பெண்கள் நோவு நேராமல் எழுந்திருக்கை போல மெள்ள எழுந்தார்களாம். ‘எங்களை இந்த ‘அரி’யென்ற ஒலி வெள்ளம் தட்டி எழுப்பிற்று. நீயும் எழுந்திராய்’ என்கின்றார்கள். விளிசங்கின் பேரரவம், வெள்ளத்தரவம், அரியென்ற பேரரவம் - இத்தனை அரவங்களும் இணைந்திருக்க யார்தான் உறங்க முடியும்?
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
21-12-2020.

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...