------------------------------------
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் ?
நாற்றத் துழாய்முடி நாராயணன், நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால், பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்,
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ?
ஆற்ற அனந்த லுடையாய் ! அருங்கலமே !
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.
--------------------
பதவுரை
நோற்று – ஒருநோன்பு நோற்று, சுவர்க்கம் புகுகின்ற – ஸுகத்தை அநுபவிக்கின்ற, அம்மனாய் – ஸ்வாமியானவளே, வாசல் திறவாதார் – வாசல் கதவைத் திறக்காமல் போனாலும், மாற்றமும் – பதிலாக ஒரு பேச்சாவது, தாராரோ – பேசக்கூடாதோ ?, நாற்றம் – வாசனை வீசுகிற, துழாய் – திருத்துழாய் மாலையையுடைய, முடி – க்ரீடத்தையுடைய, நாராயணன் – எங்கும் பரந்து நின்று ரக்ஷகனான நாராயணனும், நம்மால் – அவனையே அண்டின நம்மால், போற்ற – ஸ்தோத்ரம் செய்யும்படி, பறைதரும் – வேண்டின புருஷார்த்தங்களைக் கொடுக்கிற, புண்ணியனால் – தார்மிகனான ஸ்ரீ ராமனால், பண்டு ஒருநாள் – முன்பு இலங்கையில் போர்,நடந்த காலத்தில், கூற்றத்தின் – யமனுடைய, வாய் – வாயிலே, வீழ்ந்த – விழுந்தவனான, கும்பகர்ணனும் – கும்பகர்ணனும், தோற்றும் – தோல்வியடைந்தும், உனக்கே – உனக்கே, பெரும் துயில் தந்தானோ –தன்னுடைய பெரிய தூக்கத்தை தந்தானோ – கொடுத்து விட்டுப்போனானோ, ஆற்ற – அதிகமான, அனந்தல் உடையாய் – சோம்பலை உடையவளே, அருங்கலமே – எங்கள் கோஷ்டிக்கு ஆபரணமாய் இருப்பவளே, தோற்றமாய் வந்து – தள்ளித் தடுமாறுதே வந்து, திற – கதவைத்திற, ஏல் ஓர் – எம்பாவாய்.
----------------------------
”பாவை நோன்பிருந்து, அந்தப் புண்ணியத்தால் சொர்க்கம் செல்ல நினைக்கும் பெண்ணே…!” அம்மனாய்…!
வாசல் திறவாமல் போனாலும் பேசவும் கூடாதா என்ன…?
நறுமணமிக்க துளசிமாலையை அணிந்த நாராயணனை நாம் போற்றிப் பாடினால் நமக்கு புண்ணியம் தர ஆயத்தமாக இருக்கிறான்…!
பெருந்தூக்கத்தை வரமாகப் பெற்று, பின் இராவணனுக்காகப் போரிட்டு இறந்த கும்பகர்ணன், அவனது பெருந்துயிலை உனக்கு வரமாகத் தந்துவிட்டானோ…?
ஆழ்ந்த தூக்கத்தை உடையவளே…! அழகிய ஆபரணம் போன்றவளே…!
உறக்கம் தெளிந்து கதவைத் திறந்திடுவாயாக…!”
‘பாவை நோன்பு நோற்று எங்கள் கண்ணனை அடைவதற்கு எண்ணாநின்றோம். ஆனால் நீயோ வேண்டிய நோன்பெல்லாம் மேற்கொண்டு முன்னே கண்ணன் என்கிற சுவர்க்கத்தை நெருங்கிவிட்டவளாய் இருக்கிறாய். நீ அல்லவோ எங்களுக்கெல்லாம் தலைவியாகிற பக்குவம் உடையவள்’ என்று தோழிப்பெண்கள் ஒருத்தியை எழுப்புகின்றார்கள். பேசினாலும் வம்பு, பேசாவிட்டாலும் வம்பு என்று இவள் வாய் திறக்கவுமில்லை. அதனால் வாசல் திறக்காவிட்டாலும் வாயையாவது திறக்கலாகாதா? என்று விண்ணப்பிக்கின்றார்கள். ‘நோற்றுச் சுவர்க்கம் புகின்ற அம்மனாய் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் ?’
அப்போது இவளோ ‘என்னைப் பழி சிமத்துவதற்கென்றே படை திரட்டி வந்திருக்கிறீர்கள் போலும், கண்ணனைக் கண்டது யார்? அன்றிக் கேட்டது யார்? வீண் பேச்சை ஒழியுங்கள்’ என்பதாக நொந்து கொள்கிறாள்.
அதற்காகச் சொல்லவில்லை, அவனது திருத்துழாய் நறுமணம் கமழ்கிறதே உன் வீட்டில் என்பதனால் சொன்னோம் என்கிறார்கள் அவர்கள். ‘அவன் இங்கு மட்டுமா? எங்கும் பரந்திருப்பவன் அல்லவா ?’ என்கிறாள் இவள்.
‘நீ சொல்வதும் சரிதான்… தலைவியே… அந்த நாற்றத்துழாய் முடிநாராயணனைப் போற்றிப் பரவ நீயும் வா…நிச்சயமாய் நமக்கு, கைங்கர்யமாகிற சேவை செய்யும் பேற்றை அவன் நல்குவான்’ என்கிறார்கள் அவர்கள்.
நாராயணன் திருப்பெயரை உச்சரித்த மாத்திரத்தில் தன்னை மறந்து, ‘வாரணமாயிரம் சூழ வலம் வந்து நாராயணன் நம்பி நடக்கின்ற’ பேரழகில் லயித்தாள் போலும். இவள் மௌனமே உருவாகப் படுக்கையில் கிடக்கின்றாள்.
இந்த மௌனம் வெளியிலே நிற்பவர்களுக்கு – இவலையும் கொண்டு நந்தகோபன் மாளிகைக்குச் செல்ல வேண்டுமே, காலம் கழிகிறதே என்று கைவிதிர்த்து நிற்பவர்களுக்கு மெல்லிய கோபத்தை ஊட்டுகின்றது. சம்ர்த்துப் பெண்ணான இவளையும் கொண்டு சென்றால் கண்ணனோடு உறவு பெறுதல் எளிதாகுமே… அதற்கு இடையூறு செய்கிறார்களே என்று மனம் வருந்தினார்கள். கிண்டலும் கேலியும் வருத்தமும் ஒன்று கலந்த நிலையில் அவளைக் கும்பகர்ணனோடு ஒப்பிட்டுப் பேசினார்கள். ‘முன்பு ஒரு நாள் இந்த நாராயணனாலே எமலோகம் அனுப்பப்பட்ட கும்பகர்ணன் இராமபிரானுக்குத் தோற்றுப் போனானோ? தோற்றவர் தன் செல்வத்தையும் சிறப்பையும் வென்றவருக்கு விட்டுச் செல்வது உலகின் வழக்கம் அல்லவோ? அதுபோல உனக்குத் தன் செல்வமான தூக்கத்தைத் தந்து விட்டுச் சென்றானோ? அவனுடையதைத் துயில் என்றால் நீ பெற்றிருப்பது பெருந்துயிலுமாயிற்றே’ என்றார்கள். ‘பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்று உனக்கே பெருந்துயில் தந்தானோ ?’ என்றனர்.
தன்னைப் பொல்லாத ராட்சசனோடு ஒப்பிடுகிறார்களே என வருத்த மேலீட்டால் உள்ளிருந்தாள், ‘கிருஷ்ண- கிருஷ்ண’ என்று சொல்லி காதைப் பொத்திக் கொண்டாள்.
அப்போது அன்புமிக்க தோழிகள், ‘நீ கண்ணன் பெயரை உச்சரிப்பதே அழகு. அந்த அழகை நாங்களும் காணும்படி புறத்தில் வரலாகாதா? நீ எங்களுக்கு மட்டுமின்றி கண்ணபெருமானுக்குக் கிடைத்தற்கரிய ஆபரணமான அருங்கலம் அல்லவோ?’ என்று சொல்லி புகழ்ச்சி செய்தார்கள்.
இவளும் அவர்களோடு அன்பு கலந்து பரிமாறி கண்ணனை இன்புற்றிக் காணுமாறு எழுந்து புறப்பட்டாள். அப்படி வருகின்றவர்களை ‘மாடத்திலிருந்து இறங்கி வரும் நங்கையே, உறக்கக் கலக்கமும் கண்ணனோடு மகிழ்ந்த கிறக்கக் கலக்கமும் புலனாகாதபடி திருத்தமுள்ளவளாய் வருவாயாக’ என்று கருத்துப்பட, ‘தோற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்’ என்று விண்ணப்பித்துக் கொள்ளுகின்றார்கள்.
பாவனையினால் ஆயர் குலப் பெண்ணாய் ஆண்டாள் நாச்சியார் பாடிய போதிலும், இறைவனோடு இணைந்து கலக்கத் துடிக்கும் உயிரின் தவிப்பையே திருப்பாவையின் இதயத் துடிப்பாகக் கேட்கிறோம்.
’பாதகங்கள் தீர்க்கும் பரம னடிகாட்டும்
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் – கோதைதமிழ்
அய்யைந்தும் அய்ந்தும் அறியாத மானுடரை
வையம் சுமப்பதும் வம்பு’
என்று அதனால் சொன்னார்கள் ஆன்றோர்கள்.
No comments:
Post a Comment