வரலாற்று காலத்திலிருந்து மண்ணாசை அரசாளும் யாரையும் விட்டதில்லை. இந்தியாவின் ஜனநாயக ஆட்சியிலும் அப்பாவி விவசாயிகளின் தலையில் கைவைத்து அவர்களுடைய நிலங்களைக் கபளீகரம் செய்து, பெரிய தொழில் அதிபர்களுக்கு வழங்கவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கவும் என பல்வேறு சூழல்களில் கோமணம் கட்டிய விவசாயிகளின் நிலஉடமைகளை பிடுங்கிக் கொள்வதுதான் இன்றைய அரசாங்கத்தின் தலையாய பணியாக இருக்கின்றது. மக்கள் நல அரசு என்பதை மக்களை மதியாத அரசு என்றுதான் இன்றைக்கு அழைக்கவேண்டி இருக்கின்றது.
புதிய பொருளாதாரக் கொள்கை என்று 1991ல் ஒரு பிசாசு உள்நுழைய இந்தியாவின் கதவுகளை எப்போது திறந்துவிட்டோமோ அன்றையிலிருந்து வெளிநாட்டுக்காரர்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நமது சட்டங்களும், நிதிநிலை அறிக்கைகளும் அமைகின்றன. இதில் ஓர் அங்கம் தான் விவசாயிகளின் நிலங்களைப் அபகரிப்பது . இது ஒரு அப்பட்டமான பகல்கொள்ளை.
எப்படி சுந்தந்திரத்துக்கு முன், ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகம் இந்தியாவில் காலூன்றி வெள்ளையர் வைத்ததுதான் சட்டம் என்று இருந்தததோ அதே நிலைமைக்கு இந்தியா இப்போது போய்க்கொண்டு இருக்கின்றது. நம்முடைய இறையாண்மை உலகவங்கியின் கைக்குள் போய்விட்டது. அதன் ஆளுமைதான் இந்தியாவின் ஆட்சிபீடத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறது.
நிலம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. நிலமில்லாமல் எந்த ஜீவனும் கிடையாது. மானிடங்கள் வருவார்கள் செல்வார்கள். இந்த நிலம் காலம் தாண்டியும் நிலைத்திருக்கும்.
கொலம்பஸ், வாஸ்கோடகாமா போன்றோர் இந்தியாவைக் கண்டுபிடிக்க கடல்மார்க்கமாக வர முயற்சித்ததன் நோக்கமென்ன? வரலாற்று ரீதியாக எல்லா செல்வங்களும் சூழ்ந்த பூமியாக இந்த மண் ஒருகாலத்தில் இருந்தது. ஏன் ஆங்கிலேயர்கள் , பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், போர்த்துகீசியர்கள் என சகலரும் இந்தியாவை நோக்கி வந்து கோவா, கள்ளிக்கோட்டை, மாஹி, தூத்துக்குடி, காரைக்கால், பரங்கிப்பேட்டை- சதுரங்கப்பட்டிணம், புதுவை, சென்னை, பழவேற்காடு, ஏனாம்,சந்திரநாகூர், கொல்கத்தா, என்ற பல கேந்திர நகரங்களில் கால்பதித்தார்கள். ஒவ்வொரு நாட்டவருக்கும் இந்தியாவின் மீது ஈர்ப்பிருந்தது. எல்லாம் மண்ணால் விளைந்த பேராசை. இன்றைக்கு அடிமைத்தளைகளை அறுத்து, வெள்ளையர்களை விரட்டிய பின்னும் நமக்குநாமே அமைத்துக்கொண்ட அரசுகளும் நம்முடைய நிலங்களைப் பிடுங்குகிறது.
கடந்தகால வரலாற்றிலும் இதே நிலை நீடித்திருக்கிறது.
பீகாரில் சம்ரான் பகுதி செழிப்பான கங்கையின் கிளைநதியான பூரி கந்தஹி மற்றும் பாகுபதி பாயும் தீராவாசப்பகுதி. அதனை ஆங்கிலேய அரசு ஜமீந்தார்களுக்கு ஒதுக்கி அங்குள்ள விவசாயிகளை அப்போது தெருவில் விட்டது. அந்த விவசாயிகள் ஜமீந்தார்களுக்கு வரிகட்டி சாகுபடி செய்யவேண்டி இருந்தது. இந்நிலங்களைப் பிடுங்கி அவுரி சாகுபடி செய்ய பிரிட்டிஷ்காரர்கள் முயற்சி செய்தபோது உத்தமர் காந்தி தலைமையில் பெரும் போராட்டமே அங்குவெடித்தது.
உத்திரபிரதேசத்தில் ரேபரலி வட்டாரத்தில் நிலங்களைக் கையகப்படுத்திய ஆங்கிலேயருக்கு எதிராக கடும் போராட்டம் நடந்தது. கொந்தளிப்புகளில் ரேபரலியே பற்றி எரிந்தது. விடுதலைக்குப் பின்னும் இதேநிலை தான். அன்றைக்கு பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து காங்கிரஸ்காரர்கள் இதற்காகப் போராடினார்கள். இதே காங்கிரஸ் ஆட்சியில் தான் முதல்முதலாக நில ஆர்ஜித சட்டத்தில் அவசியமென்றால், நிலத்தைக் கையகப்படுத்தலாம் என்ற சட்டமே வந்தது.
விடுதலை பெற்றவுடன் காங்கிரஸ் ஆட்சியில், விவசாய நிலங்கள் குறித்து அறிய கிராமியப் பொருளாதார அறிஞர், உத்தமர் காந்தியின் சகாவான குமரப்பா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
<<<<< இந்த இடத்தில் குமரப்பாவைப்பற்றி சொல்லவேண்டும். உத்தமர் காந்திக்கு உதவியாகவும், அவருடைய நிதிநிர்வாகத்தை கவனிக்கக்கூடியவராகவும் இருந்தவர் குமரப்பா!
காந்தியார் இவரிடம் அவசர நிமித்தமாக பணம் கேட்டால் கூட
“எதற்கு? அவசியமில்லையென்றால் பணம் தரமுடியாது” என்று சொல்லக்கூடிய உரிமையும், நட்பும் பெற்றவர். வெளிநாட்டில் கல்வி பெற்றவர். தஞ்சாவூரில் பிறந்து , மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் கல்லுப்பட்டியில் காந்தி நிகோதன் ஆசிரமத்தை நிறுவினவர். இறுதி வரை எளிமையாக வாழ்ந்த அறிஞர்.
நேரு அமைச்சரவை முதல் அமைச்சரவையில் இவரை சேரச்சொன்னபோது, “No Mr.Nehru" என்று அசால்ட்டாக மறுதலித்தவர். இவரைப்போன்று அன்றைக்கு லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் , கிருபளானி, அச்சுத பட்டோவர்த்தன் போன்றவர்கள் அமைச்சரவையில் சேர பிரதமர் நேரு கேட்டுக்கொண்டபோது பதவியை வேண்டாமென்று துச்சமாக தூக்கி எறிந்தவர்கள்.
அச்சுத பட்டோவர்தன் நேருவிடம் தன் ஜோல்னாப்பையையும், அணிந்திருந்த ஆடையினையும் காட்டி ”எனக்கு இது இரண்டும் போதும், நான் பார்க்கவேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது” என்று பதவி வாய்ப்புகளை நிரகரித்தவர். சுதந்திரத்திற்காக சிறைக்கொட்டடியில் இவர்கள்பட்ட துன்பமெல்லாம் வார்த்தைகளால் சொல்லமுடியாது. இன்றைக்குள்ளவர்கள் இப்படி எல்லாம் எளிதாகச் சொல்வார்களா!
இவர்கள் அனைவரும் சர்வோதயம், விவசாயிகள் நலன் என்ற போக்கில் தங்களுக்கான தளத்தை அமைத்துக் கொண்டு செயல்பட்ட பெருந்தகைகள். நாட்டு விடுதலைப்போரில் தியாகஞ்செய்த இப்படிப்பட்ட திருமகன்கள் வாழ்ந்த மண் இது என்று இன்றைக்கு எத்தனை இளைஞர்களுக்குத் தெரியும். இம்மாதிரியான வேதனையான நிலைதான் நாட்டில் காட்டாட்சிகளும், வல்லான் வகுத்த வழியே வழியாகக் கொண்டு அறமற்ற போக்கு நம்மிடையே இருக்கின்றது. >>>>
திரும்ப பிரச்சனைக்கு வருகிறேன். குமரப்பா குழு இந்தியாமுழுவதும் பயணித்து நில நிர்வாகங்களையும், நிலச்சீர்திருத்தங்களையும் குறித்து விரிவான அறிக்கையை வழங்கியது. நில உச்சவரம்புச் சட்டம் வருவதற்கே குமரப்பா குழுவின் அறிக்கையே அடிப்படையாக அமைந்தது. இந்த அறிக்கையை பிரதமர் நேரு ஏற்றுக்கொண்டு, ஐந்தாண்டு திட்டங்களில் இந்த அறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்றார். அப்படிச் சொன்னதோடு சரி. இந்த அறிக்கையின் மேல் விரிவான நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை.
வினோபா அவர்கள் பூமிதான இயக்கத்தில் நிலங்களை இனாமாகப்பெற்று, நிலமற்றோருக்கு வழங்க ஒரு தவம்போல இந்தியாமுழுவதும் கால்நடையாக நடந்து பிரச்சாரம் மேற்கொண்டதெல்லாம் “எல்லோருக்கும் நிலம்” என்ற கொள்கையின் அடிப்படையிலே. இன்றைய நிலைமையோ ”நிலமெல்லாம் பெரும் முதலாளிகளுக்கு”.
இப்படியெல்லாம் விவசாய நிலங்களைப் பற்றி வரலாறும், பதிவுகளும் இருக்கும்பொழுது, விவசாயி தன் உயிராக நினைக்கும் நிலத்தை பிடுங்க நினைக்கிறது அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம். இதற்கும் ஒரு சட்டம். அந்தச் சட்டத்திலும் அடிப்படை நியாங்கள் எதுவும் கிடையாது.
இதையெல்லாம் எங்கேபோய் சொல்ல? மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்.,கங்கையே சூதகமானால் எங்கே போவது ?
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-03-2015.
#KSR_Posts
#Agriculturist
#Land_Acquisition_Bill.
No comments:
Post a Comment