Saturday, March 14, 2015

தி.சு.கிள்ளிவளவன் T.S.Killivalavan (congress).

தி.சு.கிள்ளிவளவன்    T.S.Killivalavan (congress).
_________________________

 மறைந்த தி.சு கிள்ளிவளவன் 1972லிருந்து அறிமுகம்.
குறிப்பாக, 1978லிருந்து அவருடன் நெருக்கம். தி.மு.கவில் பேரறிஞர்.அண்ணாவுக்கு நெருக்கமாக இருந்தார். அண்ணாவோ இவரை திருவேங்கடம் என்ற இவரது இயற்பெயரைச்சொல்லியே அழைப்பார். இவரும் அண்ணாவை “நீ நான் என்றும் உரிமையோடு அழைப்பதுண்டு”.

லாயிட்ஸ் ரோட்டிலுள்ள வழக்கறிஞர் வி.பி.ராமன் இல்லத்தில்,  தி.மு.கவின் ஹோம்லெண்ட் பத்திரிகை வி.பி ராமன்  பொறுப்பாசிரியராகவும், தி.சு கிள்ளிவளவன் துணையாசிரியராகவும்,  பேரறிஞர் அண்ணாவின் நிர்வாகத்தில் நடந்தது. இந்தப்பத்திரிகைக்கு   மாணவர் முன்னேற்றக் கழகத்தில் இருந்த பழ.நெடுமாறன்அன்றைக்கு மூவாயிரம் ரூபாய் வசூலித்து அளித்தது கவனிக்கப்படவேண்டிய செய்தி.

திரு.பாலசுப்பிரமணியம் நடத்திய சண்டே அப்சர்வர் என்ற ஆங்கிலப்பத்திரிகையிலும் கிள்ளி பணியாற்றினார். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அதிலிருந்து விலகி காமராஜர் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்து, காங்.கட்சி அலுவலகத்தில் பொறுப்பாளராகவும் இருந்தார்.

அப்போது இவர் ஈ.வி.கே.சம்பத், கவிஞர் கண்ணதாசன், பழ.நெடுமாறன் ஆகியோர்களோடு நெருக்கமாக இருப்பார்.  பழ.நெடுமாறன் பணிகளைப் பார்த்து பெருந்தலைவர் காமராஜர் மாவீரன் என்ற பட்டத்தை அளித்தார்.
அதன் பிறகான, அவசரநிலை காலகட்டத்தில் காமராஜர் மறைவுக்குப் பின் அன்றைய காங்கிரஸில் நெடுமாறனோடு கிள்ளிவளவன் நெருக்கம் காட்டினார்.

கவியரசு கண்ணதாசன், முன்னாள் அமைச்சர் கோவை.பிரபுவின் தந்தையார் பி.ஆர்.இராமகிருஷ்ணன், மணலி இராம கிருஷ்ண முதலியார், ஈரோடு செங்கோட்டு வேலன், எஸ்.ஆர்.பால சுப்பிரமணியன், திருச்சி.சாமிக்கண்ணு , துளசியா வாண்டையார், நாகர்கோவில் முத்துக்கருப்பன், கடலூர் . பூவை ராமானுஜம் , திண்டுக்கல் அழகிரிசாமி, மதுரை.ஆ.ரத்தினம் , தூத்துக்குடி எ.பி.சி வீரபாகு, கே.டி.கோசல்ராம், நிலக்கோட்டை ஏ.எஸ்.பொன்னம்மாள், கா. பாரமலை,   எம்.எஸ்.செல்வராஜ், வி.ஜெயலட்சுமி எம்.பி, திருமயம் சுந்தர் ராஜன், திருவல்லிக்கேணி திருமாறன், பூதலூர் முருகேசன், தொட்டியம் செல்வராஜ், திருப்பூர். கோவிந்தசாமி, நலங்கிள்ளி, கயிலை ராமமூர்த்தி, கரிச்சா கவுடா, தாராபுரம் சுந்தர் ராஜன் , வேடசந்தூர் வீரப்பன்,  என பலர்  காமராஜரின் மறைவுக்குப் பின் பழைய காங்கிரஸின் நிலை என்ன என்று சிந்திக்கத் தொடங்கினார்கள்.

பழைய காங்கிரஸின் தலைவர்களாக இருந்த பா.ராமச்சந்திரன், குமரி அனந்தன், தண்டாயுதபாணி போன்றோர் இந்திரா காங்கிரஸோடு இணைப்பு கூடாது என்று சொன்னபோது, பழ.நெடுமாறன், திண்டிவனம் ராமமூர்த்தி போன்றோர் இந்திரா காங்கிரஸோடு இணைக்கவேண்டுமென்ற என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். இதற்கான பிரச்சார பயணத்திற்காக திருத்தணியிலிருந்து குமரிவரை நெடுமாறன் பயணம் செய்தபோது கிள்ளியும் நானும் உடனிருந்தோம்.

எனது மணவிழாவில், தலைவர் கலைஞர், பழ.நெடுமாறன், தி.சு.கிள்ளி வளவன் (1986)

பழைய காங்கிரஸ்  இந்திரா காங்கிரஸோடு இணைக்கப்பட்டவுடன் தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவராக, நெடுமாறன் அல்லது ஆர்.வி சுவாமிநாதன் வருவார்கள் என்று எதிர்பார்த்தபோது, கடற்கரை இணைப்புக் கூட்டத்தில் இந்திராகாந்தி அவர்கள், கருப்பையா மூப்பனாரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அறிவித்தார்.

பழ.நெடுமாறன் அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர். கருப்பையா மூப்பனார் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டங்களின் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தனர். மூப்பனார் தலைவர் ஆவதற்கு சி.சுப்பிரமணியம், மரகதம் சந்திரசேகர், சிவாஜிகணேசன் ஆகியோர் ஆதரவாக இருந்தனர்.

நெடுமாறன் தலைவராகவில்லை என்று பலருக்கும் அப்போது வருத்தங்கள் இருந்தது. அப்போது நெடுமாறனோடு, கவியரசு கண்ணதாசன்,  தஞ்சை  ராமமூர்த்தி, எம்.கே.டி .சுப்பிரமணியம் என முக்கிய பலர் இருந்தனர். அவர்களில்  வயதில் மிகவும் இளைமையானவராக இருந்தது அடியேன் மட்டும் தான்.

(எம்.கே.டி .சுப்பிரமணியம் பற்றி ஒன்றை இங்கே நினைவு கூறவேண்டும். எம்.கே.டி என்று அழைக்கப்பட்ட இவர் ராபின்சன் பார்க்கில் பேரறிஞர் அண்ணா பெத்தாம்பாளையம் பழநிச்சாமி தலைமையில் தி.மு.கவை துவக்கியபோது,  அந்த அழைப்பிதழில் இடம்பெற்ற ஆறேழு பேரில் இவரும் ஒருவர்.)

இந்திரா காங்கிரஸில் இணைந்தபின் நெடுமாறன் அணி, மூப்பனார் அணி என்று சில ஆண்டுகள் கடந்தன. பிரச்சனைகளை டெல்லிக்கு கொண்டு செல்லும்போதெல்லாம் நெடுமாறனோடு கிள்ளி, தஞ்சை ராமமூர்த்தி, ஆகியோருடன் நானும் உடன் செல்வோம். அங்கே இந்திராகாந்தியைச் சந்தித்துப் பிரச்சனைகளை எடுத்துச் சொல்வோம். இந்திராகாந்தி அவர்கள், நரசிம்மராவ் , வசந்த சாத்தே, ஏ.ஆர். அந்துலேவிடம் விஷயங்களைச் சொல்லுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்பார் . நாங்களும் அவர்களைச் சந்தித்துவிட்டு வருவோம்.

ஜனதா அரசாங்கம் மொரார்ஜி தலைமையில் மத்தியில் இருந்தபோது பிரம்மானந்தத்தின் தலைமையில் தனிக்காங்கிரஸாகப்பிரிந்து, இந்திரா காந்தியை தனிமைப்படுத்திய சூழலில் அப்போது இந்திரா காந்தி அவர்கள்  1979ஜனவரி என்று நினைவு, அப்போது டெல்லியின் தாங்கமுடியாத குளிரில்,  தன் ஆதரவாளர்களுடைய மாநாட்டைக் கூட்டினார். அதில் தமிழ்நாட்டின் சார்பில் இந்திராகாந்தி தலைமையை வழிமொழிந்து நெடுமாறன் ”ராமன் இருக்கும் இடம் அயோத்தி. இந்திரா இருக்கும் இடம்  காங்கிரஸ்” என்று பேசினார். அன்றைக்கு அந்த நிகழ்ச்சியில் மூப்பனாரோ, சிவாஜிகணேசனோ,மற்றும் டெல்லியிலிருந்துகெண்டே குடந்தை ராமலிங்கம் நிகழ்ச்சிக்கு வரவில்லை. ஆனால் நெடுமாறனோடு வாழப்பாடி. ராமமூர்த்தி, தீர்த்தகிரி கவுண்டர்,  கிள்ளி, எம்.கே.டி.எஸ், நாமக்கல் சித்திக், முனுவர் பாஷா, போன்ற நூற்றுக்கணக்கானவர்களோடு  நானும் சென்றிருந்தேன்.

அந்த நேரத்தில் குளிர்தாங்கமுடியாத கிள்ளி என்னிடம் “ ஏன்யா இங்க கூட்டுவந்து என்னைக் கொல்லனும்ன்னு பார்க்குறீங்களா. பெரிய ஸ்வெட்டர் ஒன்னு வாங்கிக்கொடுங்க எனக்கு ....குளிர்தாங்கமுடியவில்லை எனக்கு” என்று கிண்டலாகவும் , குளிர்தாங்கமுடியாமல் கடுமையாகவும் நடுக்கத்தோடு பேசினார்.

இப்படியாக சென்னை, டெல்லி என்றெல்லாம் அலைந்து கடைசியில் 1980களில் ”தமிழ்நாடு காங்கிரஸ் (காமராஜர்)” என்று மதுரை தமுக்கம் மைதானத்தில் துவக்கிய காலத்தில் நெடுமாறன் தலைவராகவும், துணைத்தலைவராக தஞ்சை ராமமூர்த்தியும், பொதுச்செயலாளர்களாக தி.சு.கிள்ளிவளவனும், எம்.கே.டி சுப்பிரமணியமும், நானும் பொறுப்பேற்றோம்.

அப்போது எங்கள் அலுவலகம் சென்னையில் மயிலாப்பூர் வள்ளுவர் சிலை அருகே இருக்கும் கல்லுக்காரன் தெருவில் அமைந்திருந்தது. கிள்ளி காலை ஒன்பது மணிக்கு அலுவலகம் வந்தால் மாலை ஏழுமணி வரை அலுவலகத்தில் இருப்பார். அவரது எழுத்து பருமனாக பார்க்க அழகாக இருக்கும், ஆங்கிலத்தில் நன்றாக மொழிபெயர்ப்பார். காங்கிரஸ் நண்பர்கள் சிலர் அவரை பேராசிரியர் என்று அழைப்பார்கள்.

மத்திய மாநில பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யும் நாட்களில் மயிலை மாங்கொல்லையில் புள்ளி விபரத்தோடு பட்ஜெட் பற்றி பேசுவதைப் பார்த்து கிள்ளியை எல்லோரும் புள்ளிவிபர மன்னன் என்பார்கள்.

கிள்ளி, எம்.கே.டி.எஸ், நான் மூவரும் நெடுமாறனோடு சுற்றுப்பயணங்களில் உடன் கலந்துகொள்வோம். அப்போது சாப்பாடு விசயத்தில் கிள்ளியும் எம்.கேடி.எஸ்ஸும்  வேடிக்கையாக மோதிக்கொள்வார்கள். கிள்ளி சுத்த சைவம். அதில் வெங்காயமும் பூண்டும் கூட இருக்கக்கூடாது.  எம்.கே.டி.எஸ்க்கு  கோழியும் மீனும்  இறைச்சியும் இருந்தால் தான் சாப்பாடே இறங்கும்.

எம்.கே.டி “யோவ் கிள்ளி உம்மகூட குடும்பம் நடத்துறதே கஷ்ட்டமா இருக்குய்யா.” என்பார். கூடவே என்னைப்பார்த்து “ எங்க பக்கத்தூர் நைனா எது இருந்தாலும்  சாப்பிட்டு வெட்டுறார் பாருங்க.. உம்மையும் வச்சு இழுத்துட்டுப்போறது கஷ்ட்டமா இருக்கே “ என்று வேடிக்கையாகச் சொல்வார்.

வெளியூருக்குப் போனால் கிள்ளி எப்போதும் எம்.கே.டி அறையில் தங்கமாட்டார். என்னுடன் தான் தங்குவார். விடியக்காலை நான்கரைமணிக்கு விளைக்கைப் போட்டுக்கொண்டு ஆசனங்கள் செய்வார். எனக்கோ அடக்கமுடியாத கோபம் வரும். இந்தமனுஷன் கூட தங்கினா  காலங்காத்தாலே விளைக்கைப்போட்டு தொந்தரவு பண்றாரே என்று கடுப்பாவேன்.

அதுமட்டுமில்லாமல், நான் போர்த்தியிருக்கும் போர்வையை உருவி...
“ ராதா எழுந்திருங்க.. நான் சொல்லிக் கொடுக்கும் இந்த ஆசனத்தைச் செய்யுங்க ” என்பார். ”சார் என்னைக் கொஞ்சம் விடுங்க சார் நான் தூங்குறேன்” என்று கேட்டால் “இல்லல்லல்ல எழுந்திருங்க ”என்பார் .

கவிஞர் கண்ணதாசன் மறைந்தவுடன், அவருடைய அஸ்தியை எடுத்துக்கொண்டு நெடுமாறன் குமரிமுனைக்குக் கொண்டு செல்லவேண்டுமென்று முடிவு செய்தார். அப்போது அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரையாவது அழைத்துச் செல்லவேண்டி இருந்தது. அதில் சிரமங்களும்  இருந்தது. அப்போது நெடுமாறன் கிள்ளியையும் என்னையும் கண்ணதாசனின் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். எங்களோடு கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் குமரிமுனைக்கு வந்து  அஸ்தியைக் கரைத்தார்.

ஈழத்தமிழர் பிரச்சனையில் நெடுமாறன் 1980களின் துவக்கத்தில் போராட்டங்கள் நடத்தியபோது, ஈழத்தமிழ் தலைவர்களோடு கிள்ளி நெருக்கம் காட்டியதுண்டு. ஒரு நிகழ்வைச் சொன்னால் கிள்ளி அவர்களுடைய தியாகம் வெளிப்படும்.

மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில்,  பணக்கொடா மகேஸ்வரனுடைய “TEA" என்ற  அமைப்பு (தமிழ் ஈழ ராணுவம்) வெடிவைத்த சம்பவம் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த தங்கபாலு உயிர் தப்பினார். அந்தசம்பவத்தின் வழக்கில் அனைவரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அந்தக் குற்றவாளி பட்டியலில், இலங்கையில் பணியாற்றிய சுங்க அலுவலர் விக்னேச ராஜா கைது செய்யப்பட்டிருந்தார். அவருடைய தாயார் லண்டனில் மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது இறுதிச் சடங்குகளுக்காக அவர் லண்டன் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .

விக்னேச ராஜாவுக்கு நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால பிணை (bail) வாங்கினேன். ஆனால் அதற்கு இரண்டு ஜாமீன்தாரர்கள் தேவை. மறைந்த தனித்தமிழ் பேசின ஒரு அறிஞர் என்னிடம் ”தம்பி நான் ஜாமீன் கையெழுத்திப் போடுறேன்னு உறுதி கொடுத்திருந்தார். இதே உறுதியை நெடுமாறனிடமும் கொடுத்தார். ஆனால் அந்தத் தமிழறிஞரை இதுகுறித்து சந்திக்கச் சென்றபோது வீட்டிலிருந்து கொண்டே ஆள் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

இச்சம்பவங்களை அறிந்த கிள்ளி, “ராதா நான் வரேன்” என்று தன்னுடைய வீட்டுப்பத்திரங்களை எடுத்துக் கொண்டு சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வந்து ஜாமீன் கொடுத்தார். அந்த விக்னேச ராஜா போனவர் திரும்பவரவில்லை. அதையும் கிள்ளி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
எனது மணவிழாவின் போது, தலைவர் கலைஞர், வை.கோ, எனது சீனியர் ஆர்.காந்தி, இலங்கையின் எம்.பி.சேனாதிராஜா ஆகியோருடன் கிள்ளி.

டெசோ அமைப்பின் சார்பில், கோவை , வேலூர், திண்டுக்கல், சேலம், தூத்துக்குடி ஆகிய ஊர்களில் பேரணிகள் நடந்தன. வேலூர் பேரணியில் மட்டும் நெடுமாறன் கலந்துகொள்ளவில்லை. அதில் கிள்ளியும் நானும் கலந்துகொண்டோம். தலைவர் கலைஞர் அவர்கள் ”நெடுமாறன் எங்கே உடல்நிலை சரியில்லையா, தாடியெல்லாம் வளர்த்திருந்தாரே” என்று எங்களிடம் கேட்டார். கிள்ளி நெடுமாறன் ஊரில் இல்லை என்று பதில் சொன்னார். ஆனால் அப்போதுதான் நெடுமாறன் அவர்கள் என்னிடம்  தலைவர் கலைஞருக்கும், திரு.கி.வீரமணிக்கும் தனித்தனியாக கடிதங்கள் எழுதி நான் ஈழத்துக்குச் சென்றவுடன் இந்த இருவரிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தார். இந்தவிஷயம் கிள்ளிக்குத் தெரியாது.

வேலூர் சென்றுவிட்டு வந்தபின் இரண்டுநாட்களில் விஷயம் கசிந்தவுடன், நான் குடியிருந்த மயிலாப்பூர் சாலைத்தெருவுக்கு வந்தார் கிள்ளி. (அந்தவீட்டில்தான் விடுதலைப்புலிகள் பிரபாகரன் என்னோடு தங்கி இருந்தார்) அப்போது காலை மணி ஏழு இருக்கும். வந்தவர் , நெடுமாறனையும் என்னையும் எவ்வளவு பேசமுடியுமோ பேசினார். ஒருகட்டத்தில் அழுத்துப் போய் அவரே அமைதியாகி விட்டார்.  நான் கட்சியின் பொதுச் செயலாளர் தானே என்னிடம்கூட சொல்லக்கூடாத ரகசியமா என்று சென்னை பாஷையில் பேசியது மறக்கமுடியாதது.

என்னுடைய திருமணம் நீதிபதி ரத்னவேல்பாண்டியன், பழ.நெடுமாறன் ஆகியோர் ஆலோசித்து, எனக்கு எந்நாளும் என் நினைவில் வாழும்  சரளாவை நிச்சயம் செய்தார்கள். மணமகன் வீட்டின் சார்பில் எல்லாப்பணிகளையும் கிள்ளியே கவனித்து, தலைவர் கலைஞர், பழ.நெடுமாறன், வை.கோ மற்றும் தமிழகத் தலைவர்கள் தமிழ் ஈழத்தலைவர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் என பலர் கலந்துகொண்டு சிறப்பாக நடக்க உதவியாக இருந்தார்.
எனது மணவிழாவில் பழ.நெடுமாறன், கிள்ளி மற்றும் காமராஜ் காங்கிரஸ் நிர்வாகிகள்.

நான் தி.மு.கவில் இணைந்தபின் கிள்ளியோடு நட்புபாராட்டிக் கொண்டு அவ்வப்போது சந்திப்பதுண்டு, இறுதியாகச் சந்திக்கும் போது, சுறுசுறுப்போடு தேனிபோல செயல்பட்ட கிள்ளி சோர்ந்து படுத்துக்கிடப்பதைப்  பார்த்தபோது  மனம் பதபதைத்தது.

1985லிருந்து நெடுமாறனிடமிருந்து விலகி, வாழப்பாடி .இராமமூர்த்தியிடம் நட்பு பாராட்டி காங்கிரஸ் இயக்கத்தில் கிள்ளி இருந்தார். அந்த சமயம் என்னை வைகோ அவர்கள் மறுமலர்ச்சி தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் என்று தமிழ்நாட்டில் முதல்முதலாக ஒரு அரசியல்கட்சிக்கு செய்தித் தொடர்பாளர் என அறிவித்தார்.

 அன்று நடந்த நிகழ்ச்சியில் வாழப்பாடி ராமமூர்த்தியையும், கிள்ளியையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்போது வாழப்பாடி.ராம மூர்த்தி,
 ”ராதா வாழ்த்துகள் உங்க கிள்ளியும் செய்தித் தொடர்பாளராக அறிவிக்கப்போகிறேன்” என்று சொன்னது இன்றும் செவிகளில் கேட்கின்றது.

கிள்ளிக்கு இனிப்பு என்றால் கொள்ளைப் பிரியம். திருநெல்வேலி அல்வாவும், கோவில்பட்டி கடலைமிட்டாயும் வேண்டுமென்று உரிமையோடு கேட்பார். இராயப்பேட்டை பழைய உட்லண்ட்ஸ் ஓட்டலில் ரசகுல்லாவும், அண்ணாசிலைக்கு எதிர்புறம் இருந்த உடுப்பி கிருஷ்ணா பவனில் ரவா இட்லியும் விரும்பி சாப்பிடுவார்.

சமயம் பார்த்து ஜோக்கடிப்பதில் கிள்ளி துள்ளிவிளையாடும் கில்லி. யாரிடமும் சுடுசொல் சொல்லமாட்டார். எல்லோரின் அன்புக்கும் பாத்திரமானவர். அவர் மறைவு எங்களைப் போன்ற அவருடைய சகாக்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு ஆகும்.

 ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன்னால் அவருடைய துணைவியார் இறந்துவிட்டார். வீட்டுக்குப் போனால் இவர்கள் இரண்டுபேரும் மலர்ந்த முகத்துடன் உபசரிப்பது மறக்கமுடியாது. என்மனைவி சரளா மறைந்தது கிள்ளிக்கு சொல்லவில்லை. ஆனால் செய்தியறிந்தவுடன் மிகவும் வருந்தினாராம். கிள்ளிக்கு மொத்தம் 7 பிள்ளைகள் இவர் வீடே பேரக்குழந்தைகள் நிரம்பி இருக்கும்.

கிள்ளியின்  பணிகளும் , தியாகங்களும் என்றென்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும் அவர் புகழ் வாழ்க!




-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.





No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...