நண்பர் மணா, நான் 25 ஆண்டுகள் சென்சார் போர்டு என அழைக்கப்படும் தணிக்கைக் குழுவின் உறுப்பினராக இருக்கும் பொழுது, பல படங்களைத் தணிக்கை செய்யக்கூடிய வாய்ப்புகள் கிட்டின.
அப்போதெழுந்த பல பிரச்சனைகளை இங்கே சொல்லலாம். அன்றைக்கு பெரிய சர்ச்சைகளாக பத்திரிகைகள் எழுதிய கமல்ஹாசனின் ஹேராம் திரைப்படமும், படையப்பா திரைப்படமும் வெளியாவது தடுக்கக் கூடிய வகையில் இருந்ததையும் கடுமையாக வாதாடி தணிக்கைச் சான்றிதழ் வழங்க வைத்தவன் அடியேன். இப்படி பல திரைப்படங்களைச் சொல்லலாம்.
நடிகர். பாக்கியராஜ் பழைய எம்.ஜி.ஆர் படங்களின் காட்சிகளை எல்லாம் தொகுத்து போலீஸ்காரராக நடித்து 1990ல் வெளியான படம் ”அவசர போலீஸ் 100” . அவ்வாண்டில் தீபாவளி தினத்தில் வெளியாகத் இரண்டு நாள் முன் தணிக்கைக்கு வந்தது. தணிக்கையில் நான் பிரச்சனை கிளப்ப குறிப்பிட்ட நாளில் அந்தப்படம் வெளியாகவில்லை.
இப்படியாக பல சம்பவங்கள் 25ஆண்டுகால தணிக்கைக் குழு உறுப்பினராக இருக்கும் போது நிகழ்ந்திருக்கிறது.
அப்போதெல்லாம் தணிக்கைக் குழுவில் மொத்தமே 10பேர் தான் இடம்பெற்றிருப்போம். இப்போது 100க்கும் மேலான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அன்றைக்கு மூத்த பத்திரிகையாளர்கள், என்போன்ற அரசியல் இயக்கத்தைச் சார்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் இடம்பெற்றிருந்தோம்.
மணா அவர்களின் பதிவைப்பார்த்ததும் பழைய நினைவுகள் மேலெழுந்தன. அந்த நாட்களின் அனுபவங்கள் குறித்து விரிவான கட்டுரை தினமணி, கலைமகள், புதிய பார்வை, கணையாழி இதழ்களில் எல்லாம் வெளிவந்திருந்தது.
இல்லஸ்ட்ரேட் வீக்லியில் ஒரு சமயம் இவைகுறித்து நண்பர் கே.பி.சுனில் என்னுடைய நேர்காணலை ஆங்கிலத்திலும் வெளியானதுண்டு. நண்பர் மணா பதிவு கீழே!
நண்பர் மணா அவர்களுக்கு சின்ன வேண்டுகோள், புன்னைகை மன்னனான நீங்கள் முறைப்பது போல் இருக்கும் தங்களுடைய தற்போதைய புகைப்படத்தை மாற்றி வைக்கலாமே!
_________________________________________________
மணா :
அன்றைக்கு இருந்த தணிக்கை முறை
#
கலைஞரின் ' பராசக்தி' திரைப்படம் தணிக்கைக்குழு ஆய்வுக்கு வந்தபோது சென்னை பாரகன் தியேட்டரில் மூன்று நாட்கள் ஆய்வு செய்யப்பட்டது.நாத்திகக் கருத்துக்கள் இருப்பதாகக் கூறப்பட்டு, அவை தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. அப்போது தணிக்கைக்குழுவில் உறுப்பினராக இருந்தவர் 'சண்டே அப்சர்வர்' பாலசுப்பிரமணியன்.
#
மேகலா பிக்சர்ஸின் ''திரும்பிப்பார்'' படம் தணிக்கை செய்யப்பட்டபோது 3000 அடி வெட்டப்பட்டது.
#
அதே படத்தில் ராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோவில் மேல் ஏறியதைக் குறிப்பிடும் வகையில் '' கோபுரம் ஏறியிருக்கும் தலைவர்களே'' என்ற வசனம் தணிக்கைக்குழுவில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு மாற்றப்பட்டது.
#
காஞ்சித்தலைவன் -படத்தில் எம்.ஜி.ஆருக்காக சிதம்பரம் ஜெயராமன் பாடிய '' வெல்க காஞ்சி''என்ற மாடல் அண்ணாவைக்குறிப்பதாகக் கூறி அனுமதி மறுக்கப்பட்டது. பிறகு அதே வரி '' வெல்க நாடு'' என்று மாற்றப்பட்டது.
- முன்னாள் தணிக்கைக்குழு உறுப்பினரான கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
நவம்பர் -13 -புதிய பார்வை இதழில்
No comments:
Post a Comment