இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவிடம் மகிந்த ராஜபட்ச தோற்றுப்போன தருணத்தில் இலங்கையில் நான் இருந்தேன். இலங்கையின் பெரும்பான்மை சிங்கள மக்களால் "நவீன துட்டகைமுனு'வாகப் போற்றப்பட்ட, இன்னும் சரியாக சொல்லப்போனால் வழிபடப்பட்ட மகிந்த ராஜபட்சவின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை அவதானிக்க முடிந்தது.
ஜனவரி மாதம் 9ஆம் தேதி காலை 5 மணியளவில் தோல்வியை ஒப்புக் கொண்ட மகிந்த ராஜபட்ச தனது உத்தியோக பூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையை விட்டு வெளியேறினார். ஆனால், அதிகாலை 2 மணியளவிலேயே தனது தோல்வியைப் புரிந்து கொண்ட மகிந்தர் அதிகாலை 5 மணி வரைக்கும் ஆட்சியை கையில் வைத்திருக்க எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்தார் என்கிறார்கள். இலங்கையில் இருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகைகள் இதை புலன் விசாரணை செய்து பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின. புதிய அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மங்கள சமரவீர இந்த சதித் திட்டத்திற்கெதிராக நீதியான முறையில் விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அறிவித்தார்.
இலங்கையில தேர்தல் முடிவுகள் வெளியான அன்று மாலையே மகிந்த ராஜபட்ச தனது சொந்தக் கிராமமான தங்கேலவிற்கு வருகிறார் எனத் தெரிந்து நாங்கள் அங்கே சென்றோம். போர்க்களத்தில் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டு தோற்கடிக்கப்பட்டு நாடு திரும்பும் மன்னனை நாட்டுமக்கள் எப்படி கூடி நின்று வரவேற்பார்களோ அதேபோல தங்கேல மக்கள் மகிந்தவை கூடி நின்று வரவேற்றார்கள். பெரும்பாலானவர்கள் உணர்ச்சிப் பெருக்கால் வாய்விட்டு அழுததைக் காணக் கூடியதாக இருந்தது "மகிந்த ஜயவேவா' (மகிந்த வாழ்க) என்ற கோஷம் வானைப் பிளந்தது.
மகிந்த ராஜபட்ச சிரிக்க முயன்று கொண்டிருந்தார். கூட்டத்தை நோக்கி கைகளை வீசினார். ஆனால், எவ்வளவுதான் சிரிக்க முயன்றாலும் முகத்தில் தோல்வி தந்த "சவக்களை' அப்பட்டமாகத் தெரிந்தது. தனது வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் முன்பாக தனது வீட்டின் ஜன்னல் கம்பியை ஆதரவாகப் பிடித்துக் கொண்டு, கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து "நீங்கள் (சிங்களவர்கள்) எனக்கே வாக்களித்தீர்கள். ஆனால், தமிழர்கள் என்னைத் தோற்கடித்து விட்டார்கள்' என்றார். "நீங்கள் அவர்களை எப்போதோ கொலை செய்திருக்க வேண்டும் மாத்தையா(பிரபு)' என கூட்டத்தில் இருந்து ஒலித்த குரல் இன்னும் என் காதுகளுக்குள் ரீங்காரமிடுகிறது.
அந்த நொடி தமிழர்களாக, அதுவும் யாழ்ப்பாணத் தமிழர்களாக நாங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தால் எதுவும் நடக்கூடிய அபாயகரமான சூழல் அங்கு நிலவியது. முடிந்த அளவில் எங்களுக்குள் சிங்களத்தில் பேசி விரைவாக இடத்தைக் காலி செய்தோம்.
மகிந்த ராஜபட்ச தனது வீட்டின் ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி "தமிழர்கள் என்னைத் தோற்கடித்து விட்டார்கள்' என்று சொன்னது கடந்த தேர்தலைப் பொறுத்தவரைக்கும் சரியானது. இலங்கை வரைபடத்தில் மைத்திரிபால சிறீசேன வென்ற மாவட்டங்களை "ஹைலைட்' செய்தால் அது "தமிழ் ஈழ' வரைபடம் போல அமையும். பொலநறுவை தவிர்த்த எந்த ஒரு தனிச் சிங்களப் பிரதேசத்திலும் மைத்திரிபால சிறீசேனவால் வெற்றி பெற முடியவில்லை. பொலநறுவை கூட அவரின் சொந்த மாவட்டம் என்பதால்தான் சாத்தியமானது.
இன்னும் சரியாக சொல்லப்போனால் இலங்கையில் உள்ள 160 தேர்தல் தொகுதிகளில் 90 தொகுதிகளில் மகிந்த ராஜபட்சவே வெற்றி பெற்றுள்ளார். பொலநறுவைத் தொகுதி தவிர்ந்த தனிச் சிங்களவர்கள் வாழும் அனைத்துத் தொகுதிகளிலும் மகிந்தவே வெற்றி பெற்றுள்ளார். "தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் எனக்குத் தேவை இல்லை. சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே எனக்குப்போதுமானது' என கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது மகிந்த ராஜபட்ச ஆணவமாக சொன்னார். ஆனால், அவரின் எதிர்பார்பிற்கும் மாறாக தமிழ் முஸ்லிம் வாக்குகளே அவரை மண் கவ்வ வைத்தன. 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்க விடாமல் விடுதலைப் புலிகள் தடுத்தது போல இந்தத் தேர்தலிலும் தடுத்திருந்தால் மகிந்த ராஜபட்ச அமோக வெற்றி பெற்றிருப்பார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து "யாழ்தேவி' புகையிரதம் மூலமாக கொழும்புக்கு சென்றுகொண்டிருந்தேன். எனக்கு முன்னால் இருந்தவர் என்னை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். சுத்தமாக முகச் சவரம் செய்து கிளீன் லுக்கில் இருந்தார். எமது பிரதேசத்தில் பொதுவாக டாக்டர்கள்தான் கிளீன் சேவ் செய்வார்கள். ஒரு சந்தேகத்துடன் "டாக்டரா....?' எனக் கேட்டேன். இல்லை. "ஆர்மி மேஜர்' என்றார். ஒரு ஆர்மி மேஜருடன் ஒன்றாக, அதுவும் "யாழ் தேவி' புகையிரதத்தில் யாழ்ப்பாணத் தமிழன் ஒருவன் பயணிக்கலாம் என ஒரு சில வருடங்களுக்கு முன்பு யாராவது என்னிடம் சொல்லி இருந்தால் விழுந்து விழுந்து சிரித்திருப்பேன். காட்சிகள்தான் விரைவாக மாறுகின்றன. நிறைய விஷயங்கள் பேசினோம். ""என்னதான் இருந்தாலும் நாங்கள் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள். இலங்கையில் நடைபெற்ற ஆட்சி மாற்றம் எம்முள் பெருமளவு நம்பிக்கையை விதைக்கவில்லை'' என்றேன்.
""மிகப் பெரிய தவறு சகோதரரே"' என்றார்.
""ஏன்"' என்றேன்...
""சிங்களவர்களில் பெரும்பாலானவர்கள் மகிந்த ராஜபட்சவிற்கே வாக்களித்தோம். ஆனால், வென்றதோ மைத்திரிபால சிறீசேன''.
""புரியவில்லை...''
""அதாவது நண்பரே, இலங்கை தேசத்தின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையினரான நீங்கள் உருவாகி வருகிறீர்கள். வாழ்த்துகள்'' என்றார்.
அவர் எனக்கு வாழ்த்து சொன்னதும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
இதைச் சொன்னால் என்னைத் துரோகி என்பார்கள். ஆனால், சொல்லத்தான் வேண்டும். கிளிநொச்சியில்தான் அந்த அம்மாவைச் சந்தித்தேன். வயதானவர். ஐந்து பிள்ளைகளில் மூன்றை மாவீரர்களாகப் பலி கொடுத்தவர். முள்ளி வாய்கால் வரைக்கும் சென்று மீண்டு இப்போது சிறு சாப்பாட்டுக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். யாழ்ப்பாணப் புட்டும், சம்பலும் சாப்பிட்டேன். யாழ்ப்பாணப் புட்டு "சாமான் சங்கு' ரகம் என்பது சாப்பிடவர்களுக்குத் தெரியும் "சாமான் சங்கு' என்ற யாழ்ப்பாண வட்டார வழக்கை, இணைவைக்க முடியாத ஒன்று எனப் புரிந்து கொள்ளலாம்.
அவரது கடைக்கு முன்னால் இருந்த தெருவைக் காட்டி "இதிலதான் தம்பி கடைசி சண்டேல நூறு பெடியள் (புலிகள்) செத்தவங்கள். அதில என்ர கடைசிப் பெடியும் ஒருத்தன். பிளேனில வந்து ரசாயன குண்டேல்லோ போட்டவன் சிங்களவன்'' என்றார்.
வார்த்தைகள் வராமல் மென்று முழுங்கினேன்.
""முப்பது வருசமா பெடியளுக்கு புட்டு செய்து கொடுத்தனான் தம்பி.
ஆரம்ப காலத்தில தலைவர் கூட வாறவர்''
""ம் ம் ம்...''
""கடைசி சண்டேல கடைசி ஐஞ்சு நாளும் ஒரு வாய் கூட சாப்பிடல''
""பெரிய கொடுமை'' என்றேன்.
புலம் பெயர் நாடுகளிலும், இந்தியாவில் உள்ள சில ஈழத் தமிழ் ஆதரவு தலைவர்களும் சொல்வதுபோல இனி ஒரு போராட்டம் ஈழத்தில் சாத்தியமாகுமா எனக் கேட்டேன்.
""ஏன் இந்த அழிவுகள் போதாதா...? இன்னும் நூறு பெடியள் இந்தத் தெருவில கருகிச் சாக வேண்டுமா?'' எனக் கேட்டார்.
அந்த அம்மாவை சந்தித்து சுமார் ஒரு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டன. ஆனால், இன்றும் என் காதுக்குள் அந்த வார்த்தைகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.
- அருளினியன்.
No comments:
Post a Comment