பெங்களூரை சேர்ந்த 41வயதான பிரபா அருண்குமார், ஆஸ்திரேலியா சிட்னி நகரில் தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றினார்.
கடந்த 07-03-2015 அன்று தன்னுடைய பணிகல்ளைமுடித்துக்கொண்டு வெஸ்ட் மேட் என்ற இடத்திலுள்ள தன்னுடைய வீட்டுக்குத் திரும்பும்போது, அவரை வழிமறித்து துடிதுடிக்க கொடூரமாக குத்திக் கொலை செய்துள்ளனர்.
இருப்பினும் காயங்களின் வேதனையோடு கைப்பேசியிலிருந்து தன்னுடைய கணவர் அருண்குமாருக்கும் அவரே தொடர்புகொண்டு தனக்கு நேர்ந்த துயரத்தைச் சொல்லி உள்ளார். இரத்தவெள்ளத்தில் துடித்தவரை ஆஸ்திரேலியக் காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டார்.
இவர் கொலைசெய்யப்பட்ட இடத்தின் அருகே ஒரு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் பதுங்கி இருக்கும் கொள்ளையர்கள் அவ்வழியே வரும் பாதசாரிகளை மிரட்டி கொள்ளையடிப்பதும் கொலைசெய்வதும் வாடிக்கையாக உள்ளதென்று ஆஸ்திரேலியக் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
திறமையான நிர்வாகியான பிரபா அருண்குமார்க்கு இவ்வளவு ரணமான முடிவு ஏற்பட்டிருக்கக் கூடாதென்ற பதட்டமும் கவலையும் நமக்கெல்லாம் ஏற்படுகின்றது. சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் படுகின்ற நேரத்தில் இந்த செய்தி அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. மனைவியை இழந்து துடிக்கும் அருண்குமாருக்கு என்ன ஆறுதல் சொல்ல...
பிரபா அவர்களின் முகத்தைக் கண்டாலே கொலைசெய்யும் கொலைகாரனுக்குக் கூட மனது வராதே, ஆனால் இந்த கொடூரனுக்கு எப்படி மனம் வந்தது என்பதுதான் நமது கேள்வி. நான் மரணதண்டனைக்கு எதிரானவன். பலரை மரணதண்டனைகளிலிருந்து உச்சநிதிமன்றங்களின் மூலம் காப்பாற்றியவன் . இந்நிலையில் இந்தக் கொடியவனுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்பதுதான் நம் அனைவரின் கருத்தாக இருக்கும்.
பெண்களுக்கெதிரான கொடுமைகள், பாலியன் வன்கொடூரங்களுக்கு எதிராக இந்தியாவில் உரத்தகுரல் எல்லாப்பக்கமும் எழுப்பப்படுகின்றது. ஆனால் சகிக்கமுடியாத இந்த கொடுமைகள் உலகமயமாகிவிட்டதே!
முண்டாசுக்கவி பாரதி இருந்தால் “மங்கையராய் பிறந்திடநல் மாதவங்கள் செய்திட வேண்டும் “ என்று பாடியதற்கு பதிலா,க இன்றைய நிலைக்குப் பொறுத்தமாக, தன் குரலில் கடுமையாகச் சாடி இருப்பார்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
No comments:
Post a Comment