சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டும் ஆடம்பர நட்சத்திர ஓட்டல்களில் ஜாகையா?
_____________________________________________________
கடந்த மேமாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று, நாடாளுமன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்று பத்துமாதங்கள் ஆகின்றது. அவர்களுக்கு டெல்லியில் தங்குவதற்கு வீடுகள் பெரும்பாலானவர்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.
முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருசிலரும் இன்னும் தங்கள் இருப்பிடத்தைக் காலி செய்யாமல் இருப்பது வெட்கக் கேடு.
இப்போது பதவியேற்ற உறுப்பினர்கள் டெல்லி அசோகா ஓட்டல், சாம்ராட் போன்றஆடம்பரமான ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்குகி இருப்பதாக செய்திகல் வந்துள்ளன. அமைச்சர் வெங்கய்யா நாயுடு இதைப்பற்றி வருத்தத்தோடு ”வீடுகள் ஒருசிலருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது, ஒருசிலருக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் சீரமைப்புப்பணிகள் நடந்துகொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டது பத்திரிகையில் செய்தியாக வெளிவந்துள்ளது.
டெல்லி ஆடம்பர ஓட்டல்களில் ஒருநாள் வாடகை எவ்வளவு?
மக்களின் வரிப்பணத்தில் தானே அரசு அதனை வழங்குகின்றது.
வீடுகள் வழங்கப்பட்டும் இம்மாதிரிப் போக்கில் மக்களின் பிரதிநிதிகள் சிலர் இருப்பது கவலையைத் தருகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் என ஆகிவிட்டாலே MP என்றால் Most Privileged என்று நினைத்துக் கொண்டு சிலர் பொறுப்பில் இருப்பது வேதனையாக இருக்கின்றது.
நாடாளுமன்றத்தையும் சரியாக நடந்த்த விடுவதில்லை.
மக்களின் உண்மையான பிரதிநிதியாக சிலரெல்லாம் பிரதிபலிப்பதில்லை. நாடாளுமன்றத்தில் ஒருகாலத்தில் மசாணி, பிலுமோடி, மதுலிமாயி, ஜோதிர்மயுர் பாசு, பேரறிஞர் அண்ணா, பேராசிரியர் என்.ஜி ரங்கா, ஏ.கே.கோபாலன், பெரோஸ் காந்தி, கேரே, மது தண்டவடே, ரவீந்திர வர்மா, ராம் மனோகர் லோகியா என பல ஆளுமைகள் உறுப்பினர்களாக இருந்து எப்படி பணியாற்றினார்கள் என்பதை இன்றைய உறுப்பினர்கள் உணரவேண்டும்.
இத்தனைபேரின் பெயர்களையாவது இன்றைக்கு பதவியில் இருக்கும் சிலர் கேள்விப்பட்டிருப்பார்களா என்பது தெரியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் விமானத்தில் டெல்லிக்குப் பறப்பதும், தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் நிதியை விருப்பத்திற்கேற்ப ஒதுக்குவதுமே தலையாய பணியாக சிலர் நினைக்கின்றனர்.
இன்றைக்கு இவர்களுக்கெல்லாம் வசதிகள் அதிகம். நாடாளுமன்ற உறுப்பினர்களாக பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பி.ராமமூர்த்தி , பேராசிரியர்.க . அன்பழகன், நாஞ்சிலார்,இரா.செழியன், முரசொலி மாறன், வை.கோ, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம். கல்யாண சுந்தரம், மார்ஷல் நேசமணி போன்றோர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களுக்கெல்லாம் இப்போது இருக்கும் வசதிகளும் சலுகைகளும் வழங்கப்படவில்லை.
1990வரைக்கும் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்துக்கான நிதி, விமானத்தில் பறக்கும் வசதிகளோ இப்போதுபோல அவர்களுக்கெல்லாம் இல்லை. இரண்டுமுறை விமானத்தில் செல்லலாம். மீதிமுறையெல்லாம் ஜி.டி.எக்ஸ்ப்ரஸில் முதல் வகுப்பில் தான் டெல்லிவரை இரண்டு இரவுகள் ஒருபகல் பயணிக்க வேண்டும். அதற்குமேல் விமானத்தில் போகவேண்டுமென்றால்
சொந்த செலவில்தான் போக வேண்டும்.
இப்படியான நிலையில் அன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களின் பணிகள் என்ன... இன்றைக்கிருக்கும் சிலரின் நிலைப்பாட்டையும் இணைத்துப் பார்த்தால் வேதனைதருகின்றது.
டெல்லியின் பிரபலாமான அசோகா ஓட்டலில்யாரோ வாடகை கொடுக்கிறார்கள் என்ற மமதையில் ஒரு சில உறுப்பினர்கள் தங்கி இருப்பது நாட்டின் கஜானாவை காலி செய்வது மட்டுமல்ல சுரண்டுவதும் கூட.
கடந்த காலங்களில் சில உறுப்பினர்கள் வெளிநாடு செல்லும் போது மூன்றாவது நபரை தனது மனைவி என்று கூச்சமில்லாமல் விசா பெற்றது. அவையில் கேள்விகள் கேட்டதில் நடைபெற்ற முறைகேடுகள் எனப் பல குற்றச்சாட்டுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளான செய்திகளும் வந்தன.
இப்படி இருந்தால் பொதுவாழ்வில் தூய்மை எப்படி ஏற்படும். மக்கள் குரலே மகேசன் குரல் என்று சொல்வார்கள். மகேசனான மக்கள் சிந்திப்பார்களா!?
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-03-2015
No comments:
Post a Comment