Wednesday, March 25, 2015

ரசிகமணி டி.கே.சி-யின் வட்டத்தொட்டி சகா ல.ச காலமானார். - Vatta Thotti -T.K.C - La.Sa


ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்

சிகமணி நடத்திய “வட்டத்தொட்டியில்” முக்கிய உறுப்பினராக பங்கேற்றதில் நம்மிடையே மிச்சமாக இருந்தவர் ல.சண்முக சுந்தரம் அவர்கள். அவரை அன்புடன் ஆங்கிலத்தில் எல்.எஸ் என்றும் அழைப்பார்கள். அவர் இன்று தம் 95-ம் அகவையில் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தன் மகன் வீட்டில் காலமானார்.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையிலும், குற்றாலத்திலும் டி.கே.சி நடத்தும் “வட்டத்தொட்டி” கூட்டங்களிலும், ஏனைய இலக்கியக் கூட்டங்களிலும் ல.ச.வின் முக்கியப் பங்கேற்பு இருக்கும். இவர் கி.ராவுக்கு நெருக்கமானவர். இவரிடம் கழனியூரன் பேட்டிகளும் எடுத்துள்ளார். அந்தப் பேட்டிகள் கதைசொல்லி இதழிலும் வெளிவந்துள்ளது.

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நான் போட்டியிட்ட போதெல்லாம், அந்தத் தொகுதியில் உள்ள ல.சவின் சொந்த கிராமமான நாச்சியார்புரம் கூட்டங்களில் இவரைப்பற்றி மக்களிடம் சொல்லும்போது மகிழ்ச்சியான வரவேற்பு இருக்கும்.

தன் இறுதிகாலத்தில் தென்காசி அருகே மேலகரத்தில் வாழ்ந்தார். டி.கே.சியின் பேரன் தீப.நடராஜனோடு கடைசிவரை நட்பு பாராட்டியவர். திரு. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது டி.கே.சியின் அஞ்சல் தலையை வெளியிட தீப.நடராஜனும், ல.ச-வும் பெரிதும் மெனக்கிட்டார்கள். அப்பொழுது அரசியல் பணிகளுக்காக அடிக்கடி நான் டெல்லி செல்லும் பொழுது, திரு.வைகோ அவர்களோடு சேர்ந்து டி.கே.சியின் அஞ்சல்தலையை வெளியிடச் செய்ய நாங்களும் முயற்சி செய்தோம். ஆனால் அந்த முயற்சி பல்வேறு காரணங்களால் ஈடேறவில்லை என்பது வருத்தம் தருகின்ற செய்தி.






ரசிகமணியினுடைய வாழ்கை வரலாற்றை நூலாக வடித்தவர் ல.சண்முகசுந்தரம். அந்நூலை சாகித்ய அகாடமி வெளியிட்டது. இலக்கிய உலகில் டி.கே.சியின் புகழைத்தாங்கி நின்ற கடேசி சீடரையும் இழந்து தவிக்கும் ரசிகமணியின் நேசர்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.







-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
‪#‎Vatta_Thotti‬
‪#‎TKC‬
‪#‎RIP_LaSa‬



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...