ஞாயிற்றுக்கிழமைகளில் அன்புக்குரிய நண்பர்கள் சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து மட்டுமில்லாமல் புலம் பெயர்ந்த ஈழ சகோதரர்களும் அழைப்பது வாடிக்கை.
நேற்றைக்கு வடமலாபுரம் செல்வராஜ் மஸ்கட்டிலிருந்து அழைத்து “நீங்கள்லாம் ஏன் அரசியல்ல இருக்கீங்க அண்ணாச்சி. பாருங்க நம்ம ஊர்பக்கங்கள்ள விவசாயிகள் கஷ்ட்டப்படுறாங்க. நான்லாம் மஸ்கட்ல இருந்து சம்பாதிச்சுட்டு இருக்கேன். பாருங்க மானாவாரியிலே விதைச்ச கோவில்பட்டி சோளம் இன்றைக்கு குவிண்டாலுக்கு 1100ரூவாதான் , கொத்தமல்லி 40கிலோ 2800ரூவா, மக்காசோளம் 100கிலோ 1100ரூவா செகப்புச் சோளம் 100கிலோ 100 ரூவா தான், ஆனா நெருஞ்சிமுள்ளு ஒரு கிலோ 170ரூவாயாம், நெல்லு விலை அப்படியேத்தான் இருக்குது, ஆனா சிமெண்டு விலைமட்டும் நாளுக்கு நாள் கூடுது” என்று வருத்தத்தோடு புலம்பியது வேதனை படுத்தியது. என்ன செய்ய?
சமீபத்தில் மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சியின் கேரள உறுப்பினர் பி.கருணாகரன் இதையெல்லாம் எடுத்துச் சொல்லி பேசும் போது, விவசாய துறை அமைச்சர் இதற்கான பதிலையே சொல்லவில்லையாம். பி.கருணாகரன் பேசியதாவது :
விவசாயத்துறையில் விவசாயிகளும், விவசாயத்தொழிலாளர்களும் ஒரு பெரும் சக்தியாக உள்ளார்கள். எனவே அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு சர்கரை ஆலைகள் சுமார் 11ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கின்றன. கூட்டுறவு சங்கங்கள் சேமிப்புகளைப் பெறக்கூடாது என்று அரசாங்கம் சொல்வதற்கு காரணம் என்ன? இதன்மூலம் ஆட்சியாளர்கள் விவசாயிளைத் தனியாரிடம் கடன்வாங்க தள்ளிவிடுகின்றார்கள்.
இதுகுறித்து பலமுறை நிதி அமைச்சரிடம் முறையிட்டிருக்கிறேன் ஆயினும் அரசாங்கம் இதில் எவ்வித முடிவும் எடுக்கவில்லை ஒவ்வொரு 32 நிமிடத்திகும், ஒரு விவசாயி கடனால் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமை. லட்சக்கணக்கான விவசாயிகள் கடனால் தற்கொலை செய்துகொண்டு இந்த பூமியிலே மடிந்துவிட்டார்கள் என பி.கருணாகரன் மக்களவையில் பேசியுள்ளார்.
சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை - வள்ளுவத்தின் இந்த வரிக்கு அர்த்தமில்லாமல் போய்விட்டது.
#tragedy_voice_of_Agriculturist.
#KSR_Posts
No comments:
Post a Comment