Sunday, March 8, 2015

பம்பை – அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்பு Pamba Achankovil Vaippar link.

பம்பை – அச்சன்கோவில் -  வைப்பாறு இணைப்பு   Pamba Achankovil Vaippar link.





கேரள சட்டமன்றக் கூட்டத்தில்,  06-03-2015 அன்று கேரள ஆளுனர் உரையில், பம்பை அச்சன்கோவில்-வைப்பார்-இணைப்பு செயல்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளது. அந்த உரையில் கேரளா கோடைகாலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதர்காக வாமானபுரம், அச்சன்கோவில், மீனச்சில், சாலியாறு நதிகளின் குறுக்கே புதிய அணை கட்டப்படும் என்ற்ய் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்புதிய அணையைக் கட்டுவதால், அச்சன் கோவில் ஆற்றின் தண்ணீர்வரத்து வரும் பகுதியில் தான் இந்த புதிய அணை கட்டப்படும். 1972லிருந்து மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட, தமிழகம் பயன்பெறும் திட்டம் இதனால் கேள்விக்குறி ஆகிவிட்டது.

அந்த திட்டம் என்ன என்ற் பார்த்தோமானால், கேரளாவில் உள்ள பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆற்றுப் படுகையின் உபரிநீரைத் தமிழகத்தின் வைப்பாறோடு இணைக்கும் திட்டம் 43வருடங்களாக விவாதிக்கப்பட்டு, மத்திய அரசும் இத்திட்டத்தை பரிந்துரைத்தது.

கேரளாவின் ஒத்துழைப்பில்லாமல் இத்திட்டம் கிடப்பில் கிடக்கின்றது. 1983ல் அடியேன், நதிகள் தேசியமயமாக்கப்பட்டு கங்கை – மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணார் – காவிரி – வைகை – தாமிரபரணி குமரிமாவட்ட நெய்யாறோடு இணைக்க வேண்டுமென்றும், அத்தோடு கேரளாவில் மேற்கு நோக்கிப்பாயும் நதிகளின் உபரி நீரை தமிழகத்துக்குத் திருப்புவதோடு, அங்குள்ள அச்சன்கோவில்- பம்பை நதிகள்  தமிழகத்தில் உள்ள வைப்பாறோடு இணைக்கவேண்டுமென்ற எனது பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம்,  “பயன்பெறும் வகையில் ஆக்கப்பூர்வமான வழிமுறைகளைக் காண  மத்தியஅரசு ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும், அந்தக் குழு முறையாக அமர்ந்து நாடு எதிர்பார்க்கும் இந்த முக்கியப்பிரச்சனைக்கு அவசியம் தீர்வு காணவேண்டுமென்றும் மிகத் தெளிவாக அறிவுறுத்தியது.

மத்திய அரசு, அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் நேரடித் தலையீட்டில், 1972ல் அமைத்த நீர்பாசன குழுவின் அறிக்கை தொகுதி II பக்.384ல், கேரளாவில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளிலிருந்து தண்ணீர் வீணாகக் கடலுக்குச் செல்கின்றது.  இதை தமிழகத்திற்குத் திருப்பலாம் என்று அப்போதே பரிந்துரை செய்தது. 4134.கி.யூ.மீ தண்ணீர் கடலில் கலப்பதாக இந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. அந்த காலகட்டத்திலிருந்து இந்தப்பிரச்சனை இதுவரை 20சுற்றுகளுக்கு மேல் பேசப்பட்டும் மத்திய அரசின் முன்னிலையில் கேரள-தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையே எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை.

அச்சன்கோவில் - பம்பை - வைப்பாறு இணைப்பால், விருதுநகர், திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்கள் பாசன வசதி பெறும், குடிநீர் வசதியும் கிடைக்கும். இங்கு 500மெகாவாட் நீர்மின் திட்டத்தையும் ஏற்படுத்தி மின்சார உற்பத்தியையும் பெற முடியும். 1992-93 திட்டத்தின் படி இதன் மதிப்பீடு 1397.91 கோடிகள். எட்டுவருடங்களில் இந்தப்பணியை முடிக்கலாம் என்றும் திட்டமிடப்பட்டது.   17ஆண்டுகளுக்கு முன், வாஜ்பாய் பிரதமராக இருந்தபொழுது, சுரேஷ் பிரபு தலைமையில் இயங்கிய நதிநீர் இணைப்புக் குழு,  பம்பை – அச்சன்கோவில் -  வைப்பாறு இணைப்பு பற்றி ஆய்வு செய்தது.

பம்பை-கல்லாறு புன்னமேடு என்ற இடத்தில், 160மீட்டர் உயரத்தில் அணைகட்டுவதும், அதுபோல, அச்சன்கோவில் கல்லாறு நதியில் சித்தார்மூழி என்ற இடத்தில் 160மீட்டர் உயர அணைகட்டி, அந்த நதிநீர்களைத் தேக்கி, அச்சன்கோவில் அருகே 35மீட்டர் உயரத்திற்கு கிராவிட்டி அணைகட்டி,  புன்னமேடு சித்தார்மூழி இரண்டு அணைகளையும் இணைத்து 5மீட்டர் விட்டத்திற்கு சுரங்கம் வெட்டி, 8கி.மீ தூரம் சுரங்கம் வழியாக தமிழக எல்லைக்குவந்து மொத்தம் 550.68கி.மீ தொலைவில் வைப்பாற்றோடு அந்த தண்ணீரை இணைகலாம்.

செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், திருவேங்கடம், வெம்பக்கோட்டை, அதன்வழியாக சாத்தூர் அருகாமையில் உள்ள வைப்பாற்றில் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வழியாக கடலில் சேரும். இதுதான் அச்சன்கோவில் –பம்பை –வைப்பாறு இணைப்புத்திட்டம். இத்திட்டத்தின் வாயிலாக, சிவகாசி வடபுரத்திலும், தெற்கே கோவில்பட்டி வரை நீர்பாசனபரப்புக்கும் , குடிநீருக்கும் பயன்பெறும் வகையில் கிளைக்கால்வாய்களும் இடம்பெறும்.
இந்த கால்வாய்களில் வரும் நீர்வரத்தை கிளைக்கால்வாய்களாக சிவகிரி, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் வரைக்கொண்டு செல்லமுடியும். ஏற்கனவே திருவில்லிபுத்தூர் அருகே அழகர் அணைத்திட்டமும் பரிசீலனையில் இருக்கும்பொழுது, வைப்பாறு கிளைக்கால்வாய் சேர்ந்தால் நீர்வரத்து அதிகமாகும். நெல்லை மாவட்டத்தில் உள்ள அடவிநயினார் அணைக்கும், திட்டத்தில் உள்ள உள்ளாறு, செண்பகத்தோப்பு அணைகளுக்கும் நீர்வரத்து பெருகும்.

நெல்லை மாவட்டத்தின் கடையநல்லூர் – சங்கரன்கோவில் தெற்குநோக்கி கால்வாய் வெட்டினால், மேலநீலிதநல்லூர், மானூர் பகுதி வழியாகச் சென்று தாமிரபரணியில் இணைக்கலாம். மேலும் இந்தக்கால்வாய் தெற்கே நான்குநேரிவரை கொண்டு சென்று தற்போது பணி நடக்கின்ற தாமிரபரணி- கருமேனி ஆற்றோடும் சேர்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் அருகே தெற்கு நோக்கி கால்வாய் வெட்டினால், எட்டையபுரம், ஒட்டபிடாரம் வரை சென்று தூத்துக்குடி நகருக்கே குடிநீர் வழங்கலாம். இத்திட்டத்தால் இவ்வளவு பயன்பாடுகள் உள்ளன.

வீணாகக் கடலுக்கு செல்லும் நீரைப் பெறுவதற்குத்தான் அண்டை மாநிலம்,  ஹரியின் தேசமான கேரளாவிடம் மண்டியிடுகின்றோம். ஆனால், அரசியல் மனமாச்சர்யங்களைக் கடந்து ஒரு சொட்டுத் தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்ற தயாள மனதில்லாமல் அங்கு வரும் ஆட்சியாளர்கள் இருக்கின்றனர்.  

அச்சன்கோவில் –பம்பை- வைப்பாறோடு இணைப்பது தமிழக மக்களிடமே இன்னும் விழிப்புணர்வு வராதது வேதனையைத் தருகின்றது. குமரி நெய்யாறு, நெல்லை மாவட்டத்தின் அடவிநயினார், உள்ளாறு, செண்பகத்தோப்பு, விருதுநகர் மாவட்டம் அழகர் அணைத்திட்டம் மற்றும் முல்லைப் பெரியாறு, பாண்டியாறு-புன்னம்புழா, ஆழியாறு-பரம்பிக்குளம், சிறுவாணி, பம்பாறு என அனைத்து பிரச்சனைகளிலும் தாராளமாகத் தண்ணீர் வழங்கலாம். வழங்க மனம் தான் கேரளாவுக்கு இல்லை.
இதுகுறித்து, கேரள முதல்வர் உம்மன்சாண்டி கேரள சட்டமன்றத்தில் பேசும்போது, “பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆறுகளைத் தமிழகத்தின் வைப்பாற்றுடன் இணைக்க முடியாது என்றும், முல்லைப்பெரியாறுக்குச் சொன்ன கற்பனை காரணமான பேரழிவு ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் குட்டநாடு பகுதி பாலைவனமாகிவிடும் என்றும், உபரி நீரை தமிழகத்திற்குத் திருப்பினால் கேரளத்தில் மீன்பிடிப்புத் தொழில் பாதிக்கும் என்ற விநோதமான காரணத்தையும் சொல்கிறார். கேரளா நினைத்தால் தான்  இந்தப்பிரச்சனையில் எதுவும் செய்யமுடியுமென்று சொல்லியுள்ளது வேதனையைத் தருகின்றது. அங்கு பொதுவுடைமைக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே பதில்தான். தமிழகமோ 20சதவீத உபரிநீரைத்தான் வைப்பாறு இணைப்புக்குக் கேட்கின்றது.

ஐரோப்பாவிலுள்ள யூகோஸ்லோவியா கேரள மாநிலத்தைப் போன்று மலைப் பிரதேசமாகும். அதற்கு அண்டை நாடான ருமானியாவுக்கு யூகோஸ்லோவியா தன் நாட்டிலுள்ள எஞ்சிய நீரை கொடுத்து உதவும்போது, இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தின் எஞ்சிய நீரை மற்ற மாநிலத்திற்குக் கொடுப்பதால் எந்தவிதமான சிக்கலும், பாதிப்பும் ஏற்படாது. இதைப் போன்று சோவியத் நாட்டிலுள்ள துருக்மேனியா மாநிலத்திலுள்ள கேரிகம் கால்வாய் அண்டை மாநிலங்களுக்கு எஞ்சிய நீரைக் கொடுத்து உதவி செய்கிறது. சோவியத் நாட்டிலுள்ள வட பகுதிகளில் பாயும் நதி நீர் தென் பகுதிகளுக்குத் திருப்பப் பட்டுள்ளது.

கேரளப் படுகையில் உள்ள பாண்டியாறு, புள்ளம்புழா, மோயாறு, சோலாத்திப் புழா, பன்சிகல்லா ஆகிய நதி நீர் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் வரை பயன்பெறும். இதில் எஞ்சிய நீர் சுமார் 150 டி.எம்.சி. ஆகும். இந்த நீரில் சுமார் 18 டி.எம்.சி. நீரைத் திருப்பினால் 2.80 இலட்சம் ஏக்கர்களுக்கு பாசன வசதி கிடைக்கும். மற்ற நதிப்படுகையிலிருந்து கிழக்குமுகமாக தமிழகத்திற்குத் திருப்பினால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் வளம்பெறும்.

நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், பழநி, திருச்சி, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய நகரங்கள் குடிநீர்வசதி பெறும்.
பம்பை – அச்சன் கோவில் -  வைப்பாறு இணைப்பு திட்டத்தை மத்தியஅரசின் தேசிய நீர்மேம்பாட்டு ஆணையம் வரையறை செய்தது. இத் திட்டத்தால் தென்தமிழகப் பகுதிகள் பாசனவசதி பெறும் என்பதால் ஆர்வத்துடம் தமிழகஅரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், உபரிநீரை வழங்கவேண்டிய கேரளஅரசு இன்றுவரை ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருகிறது. 

கேரளத்தில் உற்பத்தியாகும் நதிநீரை முழுமையாகக் கேரள மக்கள் பயன்படுத்தவில்லை. அதிகமான மலைப் பிரதேசங்கள் இருப்பதால் விவசாய நிலங்கள் குறைவு. கேரள மாநிலத்தின் நீர்வளம் தமிழகத்தைவிட அதிகமானதாகும். தமிழ்நாட்டின்  நீர்வளம் 1,300 டி.எம்.சி. ஆகும். ஆனால், கேரளத்தின் நீர்வளம் சுமார் 2,500 டி.எம்.சி. ஆகும். இதில் சுமார் 1,100 டி.எம்.சி.க்கும் அதிகமான நீர் வீணாகி அரபிக் கடலில் சேருகிறது. (இந்தத் தண்ணீரின் அளவு மேட்டூர் அணையிலுள்ள நீரைப்போல சுமார் 11 மடங்கு ஆகும்.) கேரள மாநிலத்துக்குத் தேவையான நீர் அளவு 800 டி.எம்.சி. மீதமுள்ள நீரைத் தமிழகத்திற்குக் கொடுத்தால் சுமார் 8.20 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும். இதனால் கேரளத்துக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை..

கேரளத்தில் 85 மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் உள்ளன. 1,96,000 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் இந்நதிகளின் மூலம் செல்கிறது. கேரளத்தில் உள்ள நெய்யாறு நீர்ப்பிடிப்பு பகுதி 138.24 சதுர.கி.மீட்டர் ஆகும். பாம்பாறு (230 டி.எம்.சி), அச்சன்கோவில் (77 டி.எம்.சி), பெரியாறு படுகை(380 டி.எம்.சி), , கல்லட ஆறு(180 டி.எம்.சி) நீர்படுகைகளில், உபரி நீர் உள்ளது. இதில் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் மில்லியன் கியூபிக் மீட்டர் கடலுக்கு செல்கிறது என்று திட்டக்குழுவின் 1978ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது.

மேற்கு நோக்கிப் பாயும் நதிகளைத் தமிழகத்திற்குத் திருப்புவது பற்றி மத்திய அரசு 1978ஆம்  ஆண்டு ஒரு குழு அமைத்து, இத்திட்டத்தைப் பற்றி ஆராய்ந்து, இந்த நதிநீரைத் தமிழகத்திற்குத் திருப்புவதற்குச் சாத்தியக் கூறுகளை அறிந்தது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இப்பிரச்சினை பல முறை எழுப்பப்பட்டுள்ளது.

கேரள மக்களுக்கு, அரிசி, காய்கறிகள், பால், மீன், இறைச்சி, மணல், சிமெண்ட், மின்சாரம் போன்ற அத்யாவசியப் பண்டங்களை தமிழகம் வழங்குகின்றது. அதற்காவது தண்ணீர் கொடுத்தால் தானே விளைச்சல் செய்து அரிசி, பருப்பு, பால் என்று அவர்களுக்கு வழங்கமுடியும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?


அமைதியும், அருட்கொடைகளும்  தவழ்கின்ற கேரளமண்ணில் தவித்தவாய்க்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற மனிதநேயப்பண்பை இயற்கை வழங்கவேண்டும். 

No comments:

Post a Comment

You'll be surprised by how consistently things will show up exactly as you need them to, and not a moment before. When it's time to act, the energy will come.

  You'll be surprised by how consistently things will show up exactly as you need them to, and not a moment before. When it's time t...