Wednesday, March 11, 2015

உணவு கொடுத்த உழவனை இந்தநாடு கண்டுகொண்டதா.... In winter's chill or summer's heat a Farmer works so the world can eat. (4)





நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு ஒட்டுமொத்தத்தில் 15.7சதவீதமாக படிப்படியாக குறைந்து வருகின்றது.  அரசுகள் சரியாக  கவனிக்காமல் அழிந்துக் கொண்டே செல்ல, வேளாண்மை படிப்படியாகக் குறைந்து விளைநிலங்களின் பரப்பும் குறைந்துவிட்டது. விவசாயிகளோ ஒருபக்கம் கடனில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள்.
அன்றைக்கு நாட்டின் உணவுத்தேவையைக்கருதி, விவசாய உற்பத்தி நடைபெற்றது. இன்றைக்கு சந்தைகளை குறிவைத்து விவசாய சாகுபடி மாறிவிட்டது. விதையும், விவசாய இடுபொருள்களும் வணிகமயமாகிவிட விவசாயி கடன்பட்டுச் சாகிறான்.

நன்றாக நினைவிருக்கின்றது... எங்களைப்போன்ற கிராமங்களில் அதுவும், விவசாயக்குடும்பங்களில் பிறந்தவர்கள் அக்காலத்தில் பார்த்திருக்கிறோம். பெரும்பாலான வீடுகளில் தனித்தனியாக மிளாகாய் வத்தலுக்கும், பருத்திக்கும், பெரிய பெரிய அறைகளாக சேமிப்புக்கிடங்குகள் இருக்கும், பருத்திக்குக்கீழே மணலைப்போட்டு பக்குவப்படுத்துவார்கள்.

மிளகாய் வத்தலைக் காய வைத்து பெரிய அறையில் ஓரளவு காற்றுப்படும்படி, மலை போன்று அறைமுழுவதும் குவித்து வைத்திருப்பதை பார்த்தால் கம்யூனிஸ்டுகள் செங்கொடியோடு  பேரணி நடத்துவது போல காட்சியளிக்கும்.

நவதானியப் பயிர்களை எல்லாம்  மூட்டைகளில் கட்டி  அல்லது குதிர்களில் போட்டு சேமித்து வைத்து நல்லவிலை கிடைக்கும் போது வியாபாரிகளிடம் விற்பதுண்டு. மிளகாய், பருத்தி பயிர்கள் விலை அதிகமாகும் போது கோவில்பட்டியிலிருந்தும் சங்கரன்கோவிலில் இருந்தும் வியாபாரிகள் வந்து லாரிகளில் ஏற்றிச் செல்வார்கள்.

கொள்முதல் செய்த விளைச்சலுக்கு விலையாக, அப்போது புழக்கத்திலிருந்த நல்ல அகலமான நீலநிறத்திலிருக்கும் நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணிக் கொடுக்கும்போது பார்த்திருக்கிறேன். வெளியூர்களிலிருந்து வருகின்ற இந்த வியாபாரிகள், விவசாயிகளிடம்  நட்போடு பழகி, விருந்துக்கு  நாட்டுக்கோழிகள் வேண்டுமென்று கேட்டு உணவருந்திச் செல்வார்கள். விவசாயிக்கும் வியாபாரிக்குமான உறவு அப்படி இருந்தது.



இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லவேண்டும்.  பொன்னி அரிசி என்று சத்தற்ற வெள்ளைவெளேர் அரிசியைத்தான் தற்போது நாமெல்லாம்  சாப்பிடுகின்றோம். கேரளாவில் மலையாள மக்கள் சாப்பிடுகின்ற மட்டை அரிசி போன்று கனமான சற்று சிகப்பு நிற கோடுகளோடு விளையும் “ மோட்டா” ரகமான சம்பா அரிசியும் , புழுதியில் விளையும் ”புழுதி பிரட்டி” என்று கிராமங்களில் சொல்லுகின்ற அரிசியும் தான் அப்போது உணவாகவும் இருக்கும்.

இந்த நெற்பயிர்களுக்கு இடுபொருள், பூச்சிதாக்குதல், களையெடுத்தல், தண்ணீர் அடிக்கடி பாய்ச்சுதல் போன்ற பிரச்சனைகளில்லை. ஒரு ஏக்கருக்கு 20மூட்டைகள் அறுவடை செய்ய முடியும். அறுவடைக்குப்பின் இதன் வைக்கோலை மண்ணுக்கு உரமாக்குவதால் மண்புழு,போன்ற நுண்ணுயிர்கள் அடுத்த விளைச்சலுக்கு உரமாக மாறிருக்கும்.

மோட்டாரக சம்பா  அரிசியில் வடித்த சோற்றில், குளத்தில் பிடித்த அயிரை மீன் குழம்பையும், கருவாட்டுக்குழம்பையும், மிளகு ரசத்தையும், கட்டி எருமைத் தயிரையும் வைத்துச் சாப்பிட்ட சுகமே தனி.  இந்த மோட்டா ரக சம்பா அரிசியில் இருக்கும் நார்ச்சத்தும் , புரதச்சத்தும், கால்சியமும்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உழைக்கும் மக்களுக்கு எளிதில் பசியெடுக்காது. இந்த அரிசியை பெரிய கொப்பரைகளில் அவித்து இரண்டு மூன்று நாட்கள் நன்றாக காயப்போட்டு, அருகாமையிலுள்ள திருவேங்கடம், நால்வாசான்கோட்டை ரைஸ்மில்களில் அரைத்து தனித்தனியாக மூட்டைகள் கட்டும்போது அதிலிருந்துவரும் வாசனையை அப்படியே நுகரத்தோன்றும்.

அதுமட்டுமா, கரிசல் மானாவாரி நிலத்தில் விளையும் எள்ளை மாட்டுவண்டியில் கழுகுமலைக்கு கொண்டு சென்று செக்கில் ஆட்டி, நல்லெண்ணெயாக எடுத்துவரும்போது, நல்லெண்ணையின் நிறத்தையும் , அதில் வைக்கும் கோழிக்குழம்புகளும் மற்றவைகளும் மணமணக்கும்.
அதே நல்லெண்ணெயில் சனிக்கிழமையன்று எண்ணெய்க்குளியல் குளித்தாலே உடல் அழுப்பு அத்தனையும் தீர்ந்துபோகும். எள் சக்கையிலிருந்து எடுக்கும் பிண்ணாக்கை பால்கொடுக்கும் கறவைமாடுகளுக்குக் கொடுத்தால் பாலும் ருசியாக இருக்கும்.

இந்தப் பயிர்களோடு மானாவாரியில், உளுந்து, துவரை பயிர் வகைகளும் நன்றாக விளையும். இன்றைக்கு இந்தப் பருப்புவகைகளெல்லாம் பல்பொருள் அங்காடியில் பளபளப்பேற்றி விற்பதனால் நோய்களைத்தான் நாம் விலைகொடுத்து வாங்குகின்றோம்.

கதலியும் நாட்டுவாழையும் குலைதள்ளி சற்று தாழ்ந்து நிற்கும் வாழைத்தோப்புகளின் காட்சிகள் பசுமையாக கண்ணில்படும்.
இப்படியெல்லாம் விவசாயி வாழ்வு அமைந்திருந்தது.  அவனுக்கென்று தனி குணம், தனி பரிவாரம், சிந்தனை, அவனுடைய பாரம்பரியத்தை பாதுகாத்து வாழ்ந்துவந்தான்.

1970வரை கிராமங்களில் பார்க்கமுடிந்த இந்த வாழ்வியலே  இன்றைக்குச் சிதைந்து போய்விட்டது. வீட்டில் ஆட்டுஉரல் இல்லை. அம்மி இல்லை. உரல் உலக்கை எதுவுமில்லை. ரெஃப்ரிஜிரேட்டரும், கிரைண்டரும், மிக்ஸியும், ட்ரெட்மில்லும்  அத்யாவசியப் பொருட்களாகிவிட்டன.

தொழில்நுட்ப வளர்ச்சியை தவறென்று குறைசொல்வதாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.  அன்றைக்குள்ள மகிழ்ச்சியும், நிம்மதியும் நம்மிடையே உள்ளதா என்று விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.

விவசாயிகள் கடனில் முழ்கிக் கொண்டே போக, விளைபொருளும் நல்ல விலை கிடைக்காமல் வேளாண்மை நலிவடைந்து போகிறது. , அன்றைக்குச் சேமிப்பு கையிலிருக்க விலை கிடைக்கும்போது விற்பனைக்குக் கொண்டு சென்றான். இன்றைக்கு விவசாயி தன்  கடனை அடைக்க விளைச்சல் பொருட்களை வீட்டுக்குக் கொண்டுசெல்லும் முன்னே களத்திலே விற்றுவிடுகிறான்.  இன்றைக்கு இருக்கும் நிலைமை இதுதான் என்ன செய்ய?.

1997லிருந்து 2011 வரை இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள் கடன் தொல்லையால். இதில் தமிழ்நாட்டினுடைய பங்கு 10.8விழுக்காடு. விவசாயநிலம் வீட்டுமனைகளாகின்றன. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது போய்  கடனற்ற வாழ்வே கடைசிவரை நிம்மதி என்று நிலம் தரிசாகிக் கிடக்கின்றது. அப்படியே கூட்டுறவு சங்கங்கள் மூலம்,  விவசாயிகளுக்கு  கடன்கள் வழங்கப்பட்டாலும், சாமானியத்தில் அது  விவசாயி கைக்குக் கிடைப்பதுமில்லையே!

அமெரிக்க நாட்டைச்சேர்ந்த பொருளாதார, சமுதாய ஆய்வுநிபுணர்  எலினா ரூஸ்வெல்ட் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், ”கடன் மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது. எந்த நேரத்தில் கடன் தேவையே அதே நேரத்தில் கிடைக்கவேண்டும், எவ்வளவு தொகை தேவையோ அந்த அளவு கிடைக்கவேண்டும், வட்டியின் விகிதம் குறைந்திருக்க வேண்டும், அப்படிக் கிடைத்தால் தான் கடன் வாங்கியவர் அதை வைத்து விவசாயமோ, தொழில் செய்தோ கடனைத் திருப்பிச் செலுத்தி மீளமுடியும்” என்கிறார்.

ஆனால், எந்த விவசாயிக்கு அப்படி கடன் கிடைக்கிறது.
கூட்டுறவில் வாங்கி கந்துவட்டியில் அடைக்கிறார்கள் பின் அதையும் திருப்புச் செலுத்த முடியாமல் தற்கொலையில் உயிரிழக்கிறார்கள். ஒருகாலத்தில் கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் சொத்துக்களைப் பிடுங்கும் ஜப்தி நடவடிக்கையும் இருந்தது. வீட்டுக்கதவுகளையும், பண்டுபாத்திரங்களையும் அரசு அதிகாரிகள் ஜப்தி என்ற நடவடிக்கையில் தூக்கிக் கொண்டு போனார்கள். இதையெல்லாம் எதிர்த்து சென்னை உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை என்னைப்போன்றவர்கள் தொடுத்து ஓரளவு நிறுத்தினோம்.

இந்தியாவில் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலமாக , மகராஷ்ட்டிரா, ஆந்திரா, மத்திய பிரதேசம், ஒரிசா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் உள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த கொடிய காட்சிகள் 2012ல் இருந்து நிறைவேற ஆரம்பித்துவிட்டது.

 கடன் வாங்காமல் எளிய விவசாயத்திற்கு மாறி விவசாயம் செய்தால் இந்நிலைமை இல்லை. இயற்கை விவசாயத்தால் செலவுகள் குறையும். இயற்கை உரங்கள், தளைகள் கொண்டு பயிர் செய்யும் போது பயிர்களும் நன்றாக வளர்கின்றன. அதற்கு பூச்சுக்கொல்லிகளோ, இரசாயன உரங்களோ தேவையில்லை. இயற்கைப் பூச்சி விரட்டிகள் தெளித்தாலே போதும். பூச்சிக்கொல்லிகள் தெளித்து தெளித்து நன்மை செய்யும் பூச்சிகளைக் கொன்று மகரந்தச் சேர்க்கையையே மறந்த மலர்கள் நம் மண்ணில் பிறக்க வேண்டுமா. இயற்கை விவசாயத்தில் தண்ணீர் மேலாண்மையை கையாளும்போது பயிரும் செழிக்கும் செலவுகளும் குறையும்.

எனவே, நம் விவசாயத்தில் மறுசிந்தனை தேவை, நமது பழம்பெரும் விவசாயமுறைகள் சீர்திருத்தி நடைமுறைக்குக் கொண்டு வந்தாலே போதும். விவசாயம் செய்யமுடியவில்லை, வருமானம் இல்லை, விவசாய உற்பத்தி பொருட்களுக்கு விலையில்லை, இடுபொருட்களும் விலை அதிகரித்துவிட்டது என்ற கவலையில் ஒருபோதும் விவசாயி தன்னுடைய நிலத்தை விற்கக்கூடாது என்று ஒவ்வொரு விவசாயியும் உறுதிகொள்ள வேண்டும்.

விவசாய நிலம் என்பது தன்னுடைய தாய் தந்தைக்கு ஒப்புமையாக நினைக்க வேண்டும். ஆயிரம் நகரங்களுக்குச் சென்றாலும், வாழும் நிலைமைகள் மாறினாலும், தான் பிறந்த பூர்வீக வீட்டில் போய் அப்பாடா என்று படுக்கும் போது கிடைக்கும் நிம்மதி வேறெங்கும் கிடைக்காது..
நிலத்தை பயிர் செய்கிறோமோ, தரிசு போடுகிறோமோ என்பது வேறு கதை. வாழ்வுக்குப் பின்னே அந்த நிலத்தில் போய் நம்முடைய காலடி பட்ட்டாலே போதும் என்று விவசாயிகளின் பிள்ளைகள் நினைக்கவேண்டும்.

நிலைமைகள் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. ஆனாலும் நம்முடைய அடையாளத்தை இழக்கக்கூடாது. உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோர் என்று புறநானூறும், விவசாயிகளை இறைசக்திக்கு இணையாக முக்கூடல் பள்ளும், மணிமேகலையும் சொல்லியிருக்கின்றன.

 இன்றைய காலத்தில் ஒயிட் காலர் அரசு அதிகாரிகளும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஆணவக்காரர்களுக்கும் விவசாயியை துச்சமென நினைக்கிறார்கள்.. உணவு தந்த உழவனுக்கு இந்த நாடென்ன செய்தது என்ற குரல் ஒருநாள் உலகெங்கும் உரக்கக்கேட்கும்.

-கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
11.03.2015

No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...