Tuesday, March 17, 2015

இலங்கையில் சம்பூர் மின் உற்பத்தி நிலையம். - SAMBOOR, SRI LANKA .




ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்னால், இந்தியாவும் இலங்கையும் சம்பூர் மின் உற்பத்தி, பலாலி விமானநிலையம் சீர்படுத்துதல், 2009க்குப் பிறகு வடக்கு,கிழக்கு மாநிலங்களில் கண்ணீவெடிகளை நிலத்திலிருந்து அகற்றுதல் எனப் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

1998லிருந்தே இந்திய இலங்கை வணிக ஒப்பந்தங்கள் சிலவும் நிறைவேறியது. ராஜபக்‌ஷே காலத்தில் இந்த ஒப்பந்தங்களை எல்லாம் சற்றும் மதிக்காமல் சீனாவுக்கு சிவப்புக்கம்பளத்தை விரித்தார். கொழும்பு நகரத்தில் காலி சாலையில் இந்திய ஹைகமிசன் அலுவலகத்திற்கு இடம் ஒதுக்கிவிட்டு பின் அதைத் திரும்பப்பெற்று சீனாவின் ஒரு விமான நிறுவனத்திற்கு கையளித்தார் ராஜபக்‌ஷே.

இந்தியாவின் ஒப்பந்தங்களுக்கு சற்றும் மதிப்பளிக்காமல் நடந்துகொண்ட இலங்கை இப்போது மீண்டும் சம்பூர் மின் உற்பத்திநிலைய ஒப்பந்தத்தை தூசிதட்டி அதனை உயிர்ப்பிக்க இருப்பதாகத் தெரிகிறது. அதைக்குறித்து கருணாதனன் எழுதியிருக்கும் பத்தி கீழ்வருமாறு :-

*

மக்கள் வாழ முடியாத அளவுக்கு ஓர் காட்டுப்பகுதி என்று அரசாங்கம் சம்பூர் மக்களின் நிலங்களுக்கு முத்திரை குத்தியது. இது தனது சுயலாபம் கருதி செய்த ஓர் திட்டமாகும். அதாவது, அந்நிய செலவாணியைப் பெற வெளிநாட்டவர்களையும், வெளிநாட்டுக்கு பெண்களை வேலைக்கு அனுப்புவதையும் ஊக்குவிக்கும் இவ் அரசாங்கம், தனது கடனையும் சீன ஆதிக்கத்தில் நாம் கட்டுப்படவில்லை என்ற காரணத்துக்காகவும், இலங்கையின் கிழக்கு கரையோரத்தை இந்தியாவுக்கு வழங்கியது. இந்தியாவுக்கு கிழக்கு கரையோரத்தை வழங்காமல் இருந்திருந்தால் இன்று கிழக்கை சீனாவுக்கோ அல்லது ரஷ்யாவுக்கோ இந்த அரசாங்கம் தாரை வார்த்திருக்கும். இன்றுள்ள நிலைமையை விட விளைவுகள் மிகவும் மோசமாக இருந்திருக்கும் என்பதையும் உணரவேண்டும்.

கடல் நீரில் விவசாயம் செய்யும் சீனா, பாலைவனத்திலேயே விவசாயம் செய்யும் ரஷ்யா ஆகிய நாடுகள் செல்வச் செழிப்பு மிக்க சம்பூர் நிலத்தை கண்டு சும்மாவிட்டிருக்க வாய்ப்பே இல்லை. அந்த வகையில் மேற்குறித்த நாடுகள் கிழக்கு கரையோரத்தை கைப்பற்றாதது ஒரு ஆறுதலே இது மக்கள் பிரச்சினை.



ஆனால், இன்று அந்த கிழக்கு கரையோரத்தை இந்தியா கைப்பற்றி இருப்பதானால் என்ன நடந்துள்ளது? புவியியல் ரீதியாக இலங்கையின் கிழக்குக் கரையோரமானது இயற்கைத் துறைமுகம், குடாக்கள், ஆழம் குறைந்த கடற்படுக்கை, சங்கமம் (மகாகவலி கங்கை கடலோடு இணைகிறது), கடல் நீரேரிகள் எனப் பல இயற்கையாகவே அமைந்துள்ளன. அதேநேரம் இந்து சமுத்திர ரீதியான கப்பல் போக்குவரத்தையும், சர்வதேசக் கடல் எல்லைகளையும் மேற்பார்வை செய்ய முடியும். அவுஸ்திரேலியா, சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளையும் அவதானிக்க முடியும்.

அந்தமான், நிக்கோபார் தீவுகளிலுள்ள இந்திய கடற்படைத் தளம் உள்ள பிளே எயார் துறைமுகம் மற்றும் இந்திய யூனியன் பிரதேசமான கார் நிக்கோபார் தீவிலுள்ள கடற்படைத்தளம் ஆகியவற்றின் மேற்பார்வைக்கும் இந்தியாவுக்கும் இலங்கையின் கிழக்குக் கரையோரம் இந்தியாவுக்கு அவசியப்பட்டது எனலாம்.
ஆனால், தமிழர் என்ற வகையிலும், வரலாற்றின் அடிப்படையிலும் காலம்காலமாக இந்தியாவுடன் தொடர்பு கொண்டுள்ள இலங்கை மக்களது சொந்த நிலத்தை பறித்து, அங்கு மக்களுக்கு பொருந்தாத ஓர் அனல் மின் நிலையத்தைக் கட்டும் என எதிர்பார்க்கவே இல்லை.

நீண்டகாலமாக இழுபறியில் இருந்த இந்திய அனல்மின் நிலையம் தற்போது சம்பூரில் அமைவது ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது என்றே கூறவேண்டும். காரணம், அனல் மின் நிலையத்துக்கென சுமார் 1548 ஏக்கர் நிலப்பகுதியை கம்பி வேலிகளால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 208 குடும்பங்கள் வாழ்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேலை, 1548 ஏக்கரில் சுமார் 500 ஏக்கர் வரை சுத்தப்படுத்தப்பட்டு அனல் மின் நிலையம் அமைக்கும் ஆரம்ப கட்டத்தில் தயார் நிலையில் இருப்பதை காண முடிந்தது.


இந்தியாவின் அனுசரணையுடன் அமையவுள்ள மின் நிலையத்தில் இலங்கையில் பல பிரதேசங்களுக்கு இருந்து வந்த மின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என கூறப்பட்டது. அதற்காக 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் (500*2) இரண்டு உலைகளை அமைக்கவுள்ளதாகவே ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது (250 * 2) 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இரு உலைகளை அமைப்பதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இம்மின் உற்பத்தியை இலங்கை மின்சார சபையும் இணைந்து இந்திய தேசிய அனல்மின் நிலைய கூட்டுத்தாபனத்துடன் சம்பூரில் அனல் மின் நிலையம் உருவாகவுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் 2006ஆம் ஆண்டு முதல் இழுபறியில் இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் மோடியுடன் இறுதி ஒப்பந்தத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அமையவுள்ள இரண்டாவது நிலக்கரி அனல்மின் நிலையம் இதுவாகும். மத்திய சுற்றாடல் அதிகாரசபை அனுமதி இல்லைமுழுக்க முழுக்க சம்பூர் மக்களின் நிலத்தில் அமையவுள்ள இந்திய அனல் மின் நிலையத்துக்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை இன்னும் அனுமதியளிக்கவில்லை. இப்போதுதான் சுற்றாடல் தாக்கம் குறித்து மக்கள் கருத்துக்கு விடப்பட்டுள்ளது. ஒரு மாதம் மட்டுமே ஆட்சேபனை வழங்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. வயல்வெளிகள் உள்ள இடத்தில் அமையவுள்ள அனல்மின் நிலையம் தொடர்பாக இந்திய அதிகாரிகள் மட்டுமே ஆராய்ச்சி செய்துவிட்டு செல்கிறார்கள்.

இலங்கையைச் சேர்ந்த எவரும் ஆராய்ச்சி செய்யவில்லை. திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த எவரும் அப்பகுதிக்கு செல்லவே முடியாதபோது, அங்கு எத்தகைய தாக்கம் ஏற்படும் என்று கூறமுடியும்?

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தினால் மக்கள் இன்றும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அந்த நிலையைத்தான் சம்பூர் மக்களும் எதிர்கொள்வார்கள் என்று அனுமானிக்க முடியும் என்கின்றனர் சூழலியல் ஆய்வாளர்கள்.


சம்பூர் பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வுகளையும், ஆட்சேபனைகளையும் அரசுக்கு தெரிவிக்க தயாராகி வரும் ஆய்வாளர் திருச்செல்வம் கூறியதாவது;
சம்பூர் அனல் மின் நிலையம் அமைக்கப்படுவது குறித்த தாக்கத்தை நீர், நிலம், ஆகாயம், உடலியல் தாக்கம் என்று பிரித்துக் கூறலாம்.
அனல் மின் நிலையத்தை அமைக்க கடல் நீரை பயன்படுத்தவுள்ளதாக கூறுகின்றனர். ஆனால், அது சாத்தியப்படாத ஒன்று. இதனால் நன்னீரே பெறப்படவுள்ளது. எனவே, நீரில் கடல் நீரும், நன்னீரும் மாசுபடக் கூடும்.

நன்னீரைப் பெறுவதால் சம்பூர் பகுதிகளில் நன்னீர் விஷமாகும் வாய்ப்புள்ளது. இரசாயனக் கலவைகள் இதில் கலக்கலாம், நன்னீரில் கழிவுகள் படிவதால் நீரிலுள்ள உயிரினங்கள் இறக்கும் வாய்ப்பேற்படுகின்றது. குடிப்பதற்கேற்ற நீராக நன்னீர் இருக்காது. சுன்னாகத்தை போலவே கிணறுகளில் கழிவு எண்ணெய் கலக்கும். சம்பூரில் ஏராளமான சிறுகுளங்களும் கிணறுகளும் இருக்கின்றன.

கடல் நீரை பெறுவதால் கடல் வாழ் உயிரினத்தின் சங்கிலித்தொடர் உடைபடுவதோடு, உயிரினம் அழிவடையும் நிலை ஏற்படும். கடல் நீரில் அனல்மின் நிலைய கழிவுகளை கொட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவே தெரியவருகிறது. இக்கழிவுகள் மிகவும் வெப்பமானவை. ஆழமற்ற பறவைக்கடலான கொட்டியாரக் குடாவில் கழிவுகள் கொட்டப்பட்டால் மீன் உற்பத்தி பாதிக்கப்படும். அந்த வெப்பமான நீரில்மீன் இறந்து போகும், இடம்பெயர்ந்து வேறு இடங்களில் முட்டையிடும். இனி மீன்களை கொட்டியாக்குடாவில் காண்பதே அரிதாகிவிடும்.

அதேவேளை கடல் நீர் அலைகளினூடாக பறந்து செல்வதால் கிழக்கு கரையோரத்தின் கடல் சார் உயிரின பல்வகைத்தன்மைகள் பாதிக்கப்படும். கடல்வாழ் தாவரங்களும் பாதிக்கப்படும்.
சம்பூர் நிலம் பொன்விளையும் பூமி எனப்படுமளவுக்கு வளமான மண்ணைக் கொண்டது. இங்குள்ள நன்னீரை அனல்மின் நிலையத்துக்காக எடுக்கும்போது, நன்னீரில் கடல் நீர்கலக்கும். நன்னீர் இல்லாமல் போகும்போது, கடல் நீர் நிலக்கீழ் நீராக ஊடுருவும்.

இதனால் நிலம் வளமிழந்து உப்பு கலந்து உவர்நிலமாகும். தாவரங்கள் வளராது. நிலம் தொடர்பான அனைத்து உயிரினம், தாவரம் எல்லாம் அழிவடையும். இதனால் நிலம் தரிசாகி, பாலைவனமாகும் நிலையும் ஏற்படும். விவசாய நிலங்களில் இனி தொழிற்சாலைகளை அமைத்து சீவிக்க முடியும் என்ற நிலை ஏற்படும். காட்டு வளமும் அழிவடையும்.
இந்த நிலங்களில் தாவரங்கள் இல்லாது போகும்போது, ஒட்சிசனை பெறமுடியாது. மனிதர்களுக்கு காபனீர்ரொட்சைட்டை சுவாசிக்க வேண்டி ஏற்படும். இதனால் சுவாச நோய், புற்றுநோய், காசநோய் மற்றும் பல பரம்பரை நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.


நிலத்திலிருந்து சுமார் ஒன்றரை மீற்றர் ஆழத்திலிருக்கும் பாறைகளினூடாக அனல் மின்நிலைய கழிவு நீர் ஊடுருவி கிணறுகளுக்குள் புகுந்தால் அதனையே மக்கள் குடிநீராக பயன்படுத்த வேண்டியநிலை ஏற்படும். இவ்வாறு சம்பூரின் முழுக் கட்டமைப்பும் மாற்றம் பெற்று அழிவு நிலை ஏற்படும்.


சம்பூர் அனல் மின் நிலையம் அமைப்பதாக கூறிய இடம் முதற்கட்டமே என அறிய முடிகிறது. இதில் மொத்தமாக ஆறுகட்டங்கள் இருக்கிறது என பெயர் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதாவது, 700 மில்லியன் ரூபா செலவில் முதலாம் கட்டத்தில் இரண்டு 250 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ஓர் உலையும், 2ஆம் கட்டத்தில் 1300 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இரும்பு தொழிற்சாகைள், வாகன உற்பத்தி தொழிற்சாலை, உரத் தொழிற்சாலை, நீர் விநியோக தொழிற்சாலை, ஆடைத் தொழிற்சாலை, எண்ணெய் ஆலைகள், சுற்றுலா மையங்கள் என பல தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

இதற்காக இலங்கை உட்பட பிரேசில், இத்தாலி, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் என ஏழு நாடுகள் முதலிட்டுள்ளன.

இதுதவிர, அணுஉலை ஒன்றும் உருவாகவுள்ளது. மூன்றாம் கட்டமாக இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் தொழிற்சாலைகள் நிறுவப்படும். இப்படியாக சம்பூரின் 10 ஆயிரத்துக்கு 600 ஏக்கருக்கு மேற்பட்ட மொத்த நிலப்பகுதிகளும் சூறையாடப்படவுள்ளது என்றார்.
இருபதாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டால் சம்பூர் மக்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். இவ்வாறு இருபதாயிரம் பேருக்கு தொழில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இங்கு அமைக்கப்படவுள்ள அனல் மின்னிலைய வேலையாட்களுக்கு தங்குமிடம், சுற்றுலாத்துறை போன்ற துறைகளினூடாக சம்பூர் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இலாபம் பெற முடியும் என்ற ஓர் அறிக்கை கூறுகிறது.

அனல் மின் நிலையத்தில் வேலை செய்யும் அளவுக்கு உயர் தொழில்நுட்ப அறிவு கொண்ட மக்கள் சம்பூரில் இல்லை. விவசாயம், மீன்பிடி என்று வாழ்ந்த மக்களுக்கு அனல் மின் நிலையத்தில் என்ன வேலை செய்ய முடியும்? இன்னும் பல தலைமுறைக்ள அங்கு வாழ்ந்தாலும் உயர்தர வேலை ஒன்று கிடைக்குமா என்பது சந்தேகமே.
கிழக்கின் திருகோணமலை மக்களின் பட்டறிவு என்னவென்றால், பிரீமா, மிட்சுயி, ஆடைத்தொழிற்சாலைகள் என அங்கு தொழிற்சாலைகள் வந்திருந்தும் சம்பூர் தமிழ் மக்களுக்கு வேலை 5 வீதத்துக்கும் குறைந்த வேலையே கிடைத்துள்ளது.

பெரும்பான்மையான மக்கள் கொண்டுவரப்பட்டு இன்று அவர்கள் திருகோணமலை வாசிகளாகிவிட்டனர். இப்படி தமிழர் சதவீதம் திட்டமிடப்பட்டு குறைக்கப்படுகின்றது என்கின்றனர் மக்கள்.
அனல்மின் நிலையத்துக்காக வரும் வேலையாட்கள் தமிழர் கலாசாரத்துக்கு பாரிய சவாலாகவே இருக்கப் போவது உண்மை.
அனல்மின் நிலையத்தை அமைப்பது கனடாவின் திட்டம்
திருகோணமலையில் அனல் மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை 1993ஆம் ஆண்டு கனடா இலங்கைக்கு பரிந்துரை செய்திருந்தது. மகாவலி சர்வதேச கனேடிய நிறுவனமே இதனை 52 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் திருகோணமலையில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

அன்று

இன்று

“திருகோணமலை மின் திட்டம்’ என்ற பெயரில் 300 மெகாவாட் மின்சாரத்தை (1502) உற்பத்தி செய்ய கனேடிய நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. அதில் மகாவலி அனல்மின் உலைகளை தயாரிக்க சுவிஸ்சர்லாந்து, சுவீடன், அமெரிக்க, அவுஸ்திரேலியா, இத்தாலி, சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகள் முதலிட முன்வந்தன. ஏழு நாடுகளைச் சேர்ந்த 11 கம்பனிகள் முதலிட்டு 1993ஆம் ஆண்டு சுற்றாடல் பாதுகாப்பு சான்றிதழும் பெறபட்டதாக குறித்த கனேடிய நிறுவனம் தெரிவிக்கிறது.

1993ஆம் ஆண்டு தொடங்கி, 1995ஆம் ஆண்டு முடித்து மின்சாரத்தை வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. 93ஆம் ஆண்டு கொள்கை திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் அமைச்சு இதற்கான வேலைகளை செய்திருந்தது. பின்னர் சில அரசயல் காரணங்களால் அது தடுக்கப்பட்டது. அதாவது, திருகோணமலையில் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டம் ஆரம்பத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு இன்று அது உறுதியாகியுள்ளது.


COALஅனல்மின் நிலையத்துக்காக பயன்படுத்தப்படும் நிலக்கரி கப்பலில் கொண்டுவரப்படும் அதேவேளை அதனை சம்பூருக்குள் எவ்வாறு கொண்டு வருவது தொடர்பாகவும், நிலக்கரி கழிவுகளை, அதாவது மின் உற்பத்திக்குப் பின்னர் அதனை எவ்வாறு வெளியேற்றுவது எந்த வழியில் கொண்டு செல்வது என்பது தொடர்பாகவும் தெளிவான தகவல்கள் இல்லை என்கின்றனர் சூழலியல் ஆய்வாளர்கள். இம்மின்சாரம் கந்தளாய்க்கு நிலக்கீழ் முறையில் கொண்டு செல்லப்படவுள்ளது.


காட்டு வளத்தினால் பல விளை பொருட்களை உற்பத்தி செய்யும் சம்பூரில் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டால் காபன், காபனீர்ரொட்சைட், மொனோக் சைட், கந்தகவீர் ஒட்சைட் போன்ற இரசாயன கலவைகள் அனல்மின் நிலையத்திலிருந்து 18 கிலோ மீற்றர் சுற்றுவட்டம் வரை தாக்கம் இருக்கும். அதாவது,மூதூர், திருகோணமலை நகர் என்பவற்றைத் தாண்டி இரசாயன அமிலங்கள் காற்றில் கொண்டு செல்லப்படும்.

தென்மேல் பருவப் பெயர்ச்சி காற்றினால் இத்தாக்கம் உடனடியாக கொண்டு செல்லப்படும். இது மிகவும் ஆபத்தான விடயம் என்பதை சுட்டிக்காட்டிய சூழலியலாளர்கள் இந்தியா மக்களுக்கு திட்டமிட்டே இதனை செய்வதாக தெரிவிக்கின்றனர்.
இந்திய எண்ணெய் நிறுவனம், தாங்கிகளினால் திருகோணமலையில் சூழல் மாசு ஏற்படுவது மேலதிக தகவலாகும்.




#KSR_Posts
#samboor  

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...