Monday, March 2, 2015

அவசரச் சட்டங்கள் ( Ordinances )

அவசரச் சட்டங்கள் ( Ordinances )
__________________________________________





நாடாளுமன்றத்தில் உரிய பலத்தோடு ஆட்சி செய்யும் மோடி, அவசரச் சட்டங்களைஅதிகம் பிறப்பித்து வருகிறார்.  நில ஆர்ஜித சட்டத்திலிருந்து பல்வேறு அவசரச் சட்டங்களை, அவசியமில்லாமல் அவசரஅவசரமாக கொண்டுவந்திருப்பது சர்ச்சையான செய்திகளாகும்.

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, முறைப்படி சட்டவடிவமாகக் கொண்டுவருவதற்கான அவகாசமும், வாய்ப்புகளும் இருக்கும்போது எதற்கு இந்த அவசரச் சட்டங்கள்?.

அவசரச் சட்டங்கள் எப்படி துவக்கத்தில் நடைமுறைக்கு வந்தது என்று பார்க்கும் போது,  அப்போதே பல சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

நாடு விடுதலைபெற்றவுடன், பண்டிதர் நேரு காலத்தில் அவசரச்சட்டம் குறித்து, குடியரசுத்தலைவர் இராஜேந்திர பிரசாத்துக்கும்,  பிரதமர் நேருவுக்கும், மக்களவைத் தலைவர் ஜி.வி. மௌலங்கர் ஆகிய மூவருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருந்தன.


ஒருசமயத்தில் அவசரச் சட்டம் பிறப்பிக்கவேண்டுமென்று பண்டிதர் நேரு முடிவெடுத்தபொழுது, மக்களவைத்தலைவர் ஜி.வி. மௌலங்கர்  “அவ்வாறு செய்வது ஜனநாயகத்துக்கு விரோதமானது” என்று குறிப்பிட்டார். அதற்கு நேரு  “வேறு வழியில்லை அவசரம், அவசியம் கருதி அவசரச் சட்டம் பிறப்பிக்கவேண்டுமென்று” உறுதியாக இருந்தார்.

இதுகுறித்து, மௌலங்கர் 25-11-1950 அன்று. பிரதமர் நேருவுக்கு எழுதிய கடிதத்தில், “ விருப்பத்துக்கு ஏற்றவாறு அவசரச் சட்டங்களை ஒரு அரசு பிறப்பித்தால்,   மக்களவையின் ஆளுமையையும், உளவியல்ரீதியாக தவறான விளைவுகளுக்கு இழுத்துச் செல்லும். அரசாங்கமும் அவசரச் சட்டங்களினால் தான் நடைபெறுகிறதோ என்று மக்களுக்கு அச்சம் ஏற்படும். இது ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.” என குறிப்பிட்டிருந்தார்.

மௌலங்கர் கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் நேரு 13-12-1950 அன்று  பதில்கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், “ அவசர சட்டங்களை சரியென்றோ, அவற்றை ஏற்றுக்கொள்வதோ நல்லதல்ல என்ற தங்களுடைய கருத்தை என்னுடைய அமைச்சரவை சகாக்களும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், பிரத்தியோகமான அவசர சூழ்நிலையில் அவசரச்சட்டம் இயற்றுவதைவிட்டால் வேறு வழி இல்லை என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து மௌலங்கர் பிரதமர் நேருவுக்கு 17-06-1954 அன்று   கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் “ இது முதலாவது மக்களவை, திரும்பவும் அவசரச் சட்டங்கள் என்று சொல்லிக்கொண்டே போனால், எதிர்காலத்தில் வரையறை இல்லாமல் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்க இப்போதுள்ள நடைமுறைகளே முன் உதாரணம் ஆகிவிடும் என்று அச்சப்படுகின்றேன்.



நாட்டின் பாதுகாப்பு, உள்நாட்டுப் பிரச்சனைகள்,  அவசர நிலை, மிகவும் அத்யாவசியமான கட்டங்களிலே அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கும் முறையை மிகவும் கவனமாக  கையாள வேண்டும். "Extreme and  very urgent cases" ,  the result may be, in future, the government may go on issuing ordinances giving the Lok Sabha no option, but to rubber-stamp the ordinances.  என்று மௌலங்கர் தன் கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இந்த மரபையும், இந்த சிந்தனையையும், பரிசீலனையில் வைத்துக் கொண்டால்தான் மக்களாட்சி நடக்கின்றது என்ற எதார்த்தம் இருக்கும். அப்படி இல்லையென்றால், அவசரச்சட்டங்கள் பிறப்பித்துக் கொண்டு, மக்கள் பிரதிநிதிகளிடம் நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலும், ஒப்புதல் பெறாமலும் இம்மாதிரி முறையில் செயல்பட்டால் நமது ஜனநாயக கோட்பாடுகளும், நாம் விரும்பும் குடியரசு தத்துவங்களும் காணாமல் போய்விடும் . என்று எழுதியிருந்தார்.

இதற்கும் பிரதமர் நேரு அளித்த பதில்கடிதத்தில், மிகவும் குறைந்த தவிர்க்கமுடியாத அவசரச் சட்டங்களையே அரசு பிறப்பித்துள்ளதாகவும், அவை அனைத்தும் நாடாளுமன்றத்தில் பரிசீலனைக்கு வைக்கப்படும் என்று மௌலங்கள் எழுதினார்.

குடியரசுத்தலைவர் டாக்டர். இராஜேந்திர பிரசாத்தும் அவசரச் சட்டம் குறித்து மௌலங்கர் கருத்தையே ஆதரிப்பதாக அவருடைய நடவடிக்கையிலிருந்து வெளிப்பட்டது.

பிற்காலத்தில்,  1986ல்  உச்சநீதிமன்றத்தில்  D.C.Wadhwa v/s State of Bihar வழக்கில், நீதிபதி பி.என். பகவதி, பீகார் அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தை இரத்து செய்து,  அவ்வழக்கின் தீர்ப்பில் “ அவசரச் சட்டத்தை பிறப்பிக்கும் போது, தவிர்க்கமுடியாத நிலையும், அவசரமும், அவசியமும் இருக்கவேண்டுமென்றும், வெறும் அரசியல் இலாபத்திற்காக  அவசரச்சட்டம் பிறப்பித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறினார்.   மேலும்,  அந்தத் தீர்ப்பில் சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் உள்ள பொறுப்பை பறிக்கக் கூடாது என்றும்  தீர்ப்பில் குறிப்பிட்டார். அவசரச்சட்ட அரசாக அதாவது ஆங்கிலத்தில் ,
"Ordinances  Raj" -ஆக எந்த அரசையும் அனுமதிக்கமுடியாது என்றும் நீதிபதி.பகவதி குறிப்பிட்டிருந்தார்.

அவசரச் சட்டங்களும், உத்தரவுகளும், ஆளவந்தார்களுடைய விருப்பத்துக்கு ஏற்றவாறு பிறப்பிப்பது உலகளவில் ஜனநாயகம் இல்லாத நாட்டில் நடக்கின்ற நடவடிக்கையாகும்.   இந்தியா பல்வேறு தேசிய இனங்களும், மொழிகளும், கலாச்சாரங்களும் ஒருங்கிணைந்து ஜனநாயக மாண்புகளை  மதித்து கொண்டாடும் மண்.  அப்படிப்பட்ட ஆரோக்கியமான நமதுஜனநாயக பூமியில்,  இன்றைய மத்திய அரசு, தன் விருப்பத்திற்கேற்ற அவசரச்சட்டங்கள் கொண்டுவரவேண்டிய அவசியமென்பது என்ன என்பதுதான் புரியவில்லை.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.



No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...