2008ம் ஆண்டுகளில் புலிகளைக்
காப்போம் என்று விழிப்புணர்வு விளம்பரங்கள் அதிகம் கண்ணில் தென்பட்டது. அப்போது இந்தியாவில் மொத்தம் இருந்த புலிகள் எண்ணிக்கை 1411; “Save Tigers Moments” பொதுமக்களிடையே
பெரும் வரவேற்பையும் உற்சாகத்தையும் கொடுத்தது. அரசுசாரா அமைப்புகளும், ஏனைய சமூக இயக்கங்களும் இதுகுறித்து
விழிப்புணர்வை உருவாக்கின. 2011ம் ஆண்டு
கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 1706புலிகள் இருந்தன. கடந்த ஆண்டின்
கணக்கெடுப்பின்படி 2226புலிகள் இருந்தன.
முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம், களக்காடு-முண்டந்துறை
என தமிழகத்தில் மட்டும் 4 புலிகள்
காப்பகங்கள் உள்ளன. இந்த காப்பகங்கள் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திடமிருந்து உதவிபெற்று
பராமரிக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் 226புலிகளும், மத்திய
பிரதேசத்தில் 308புலிகளும், உத்ரகண்டில் 340புலிகளும் கர்நாடகாவில் 408புலிகளும் இருக்கின்றன. தமிழகத்தின்
எண்ணிக்கை தேசிய புலிகள் எண்ணிக்கையில் 10சதவிகிதம் ஆகும்.
தேசிய விலங்கான புலிகள்
பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமானபோதும் சமீப காலங்களில்
வனத்திலிருந்து வெளியேறி மக்கள் வாழ்விடங்களில் நுழைந்து வேட்டையாடிய புலிகள்
சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் உதகை அருகே மூன்று பேரைக்கொன்றதாக ஒரு
புலியும், சிலநாட்கள் முன்
தமிழகம் மற்றும் கேரளாவில் இரண்டுபேரைக் கொன்றதாக மற்றொரு புலியும் வனத்துறையால்
சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்கள் பரபரப்பாக அமைந்தது.
இந்த இரண்டு
சம்பவங்களிலுமே புலியைச் சுட்டுக் கொன்றது தவறு என இயற்கை ஆர்வலர்கள்
குரல்கொடுத்து வந்தனர். அந்த இருபுலிகளையும் வனவிலங்கு சாலைக்கு கொண்டு
சென்றிருக்கலாம் என்று ஆலோசனையும் கூறினார்கள். வனத்துறையினர் தரப்பில், அது சாத்தியமில்லை என்றும், புலியைக்கொல்வது
வனத்துறையினரின் நோக்கமல்ல. ஆனால் வேறு வழியுமில்லை. உரிய பாதுகாப்பு
கிடைத்திருந்தால் புலியை உயிருடன் பிடித்திருக்கலாம் என்றும், இம்மாதிரியான சம்பவங்களில் அந்தந்த பகுதி
வனத்துறை அலுவலர்கள் முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
கூடலூர் அருகே புலிதாக்கி
பெண் இறந்த சம்பவத்தின் பின், அப்பகுதியில் கலவரம்
ஏற்பட்டது. வனஆக்கிரமிப்பு, கஞ்சா பயிரிடுதல், மரங்கள் கடத்துதல், வன உயிர்களை வேட்டையாடுதல் என்று வனத்துறை
அலுவலர்களுடைய பணிச்சுமை பெரிது என்று சொல்கின்றனர். கூடலூரில் கலவரம் ஏற்பட்டபோது
நீலகிரி காவல்துறையும், மாவட்ட
நிர்வாகமும் கூட வேடிக்கை பார்த்தபடி இருந்திருக்கிறார்கள். புலியைச் சுட்டுக்
கொன்றதுடன் பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடவுமில்லை. வனத்துறையினரின் நிலை
இப்படியென்றால், கொல்லப்பட்ட
புலியின் நிலையை கவனிக்கவேண்டும்.
ஒரு புலி சுமார் 25சதுர கி.மீட்டர் பரப்பளவில் உள்ள காட்டை
தன் எல்லையாகக் கொண்டு வசிக்கும். தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால்
வனநிலப்பரப்பை அவைகள் பகிர்ந்து கொள்ளவேண்டிய வாழ்விட சிக்கல் அதிகரித்திருக்கும்.
மேலும் , கொல்லப்பட்ட
புலிக்கு உடலில் காயங்கள் இருந்ததால் அதனால் வேட்டையாட முடியாமல் போய் பசியுடன்
அலைந்துதிரிந்து கூடலூரில் பெண்ணைத் தாக்கிக் கொன்றுள்ளது. இதுதான் கூடலூர்
சம்பவத்தின் நிலைமை.
தற்போது புலிகளின்
எண்ணிக்கை அதிகரிப்பிற்கு ஏற்ப வன எல்லைகளின் பரப்பு ஆக்கிரமிப்புகள் இல்லாமல்
பாதுகாக்கப்படவேண்டும். தனியார் நிறுவனங்களிடமிருந்து வனப்பரப்பை மீட்டு
பாதுகாக்கப்பட்ட காடுகள் தொகுப்பில் சேர்க்க வேண்டும். நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, நெல்லை போன்ற வனப்பரப்பு அதிகமுள்ள
மாவட்டங்களில் வனத்துறைக்கு உதவியாக ஆயுதப்படை வழங்கப்படவேண்டும். நவீன வாகனங்கள், தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் , பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்படவேண்டும்.
வனம் மற்றும் வன உயிரினங்களின் மீது அக்கறையும், அறிவுநுட்பமும் கொண்ட நிர்வாக அதிகாரிகள்
நியமிக்கப்படவேண்டும்.
வனத்தையொட்டியுள்ள
பகுதிகளில் மனித-வன உயிரினங்கள் மோதலைத் தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தப்படவேண்டும். வனம் விலங்குகளுக்கானது. அங்கே மனிதர்கள்
உள்நுழைந்துவிட்டதால் விலங்குகள் வெளியேறத் துவங்குகின்றன...
யானை, புலி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் கடந்த நூற்றாண்டுவரை மக்களைவிட்டு
தள்ளி காடுகளுக்குள்தான் வாழ்ந்துவந்தது. ஏன் இப்போது மக்கள் வசிப்பிடங்களுக்கு
வருகிறதென்றால், நம்மிடையே உள்ள
சில சமூகவிரோதிகள் சுயநலத்திற்காக, பசுமைக்காட்டை மொட்டையடித்தனர். காடுகளை அழிக்கும்போது
விலங்களுக்கும் வசிப்பிடம் பிரச்சனையாக ஆதங்கமும், ஆத்திரமும் ஏற்படுகிறது. விலங்குகள் நடமாடும் வலசைகளும்
மாறுகின்றன. இதனால் காட்டில் வசிக்கும் விலங்குகள் மக்கள் வசிப்பிடத்திற்குள்
வருகிறது. விலங்குகள் மீது தவறுகள் காண்பது பொருத்தமாக இருக்காது. விலங்குகள் தங்களுக்கென்று
வகுத்துக்கொண்ட வழிகளில் எப்போதும் நடந்துகொள்வதுண்டு.
இயற்கையின் அருட்கொடையான
காடும் மலையும் நீர்சுனைகளும்,
விலங்குகளும்
ஆகிய உணவுச்சங்கிலி ஒன்றோடு ஒன்று இணைந்தவையாகும். இவற்றுள் ஒன்றைச்
சேதப்படுத்தினால் அதனுடைய தன்மையும், வாழ்வுமுறையையும் மீறவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றது.
எத்தனையோ பெண்கள்
காடுகளுக்குள்சென்று கடந்தகாலங்களில் விறகுகளையும், காய்கனிகளையும் பொறுக்கிக் கொண்டு வரும்போதெல்லாம் விலங்குகள் அவர்களைத் தாக்குவது
அரிதாகவே நிகழ்ந்தது. இப்போது நிலைமைமாறக் காரணம், அதனுடைய வாழ்வாதாரத்தையும் வாழ்விடத்தையும் மனிதன் அழிக்க
நினைத்ததால் விலங்கினங்களும் ஆத்திரத்தில் அசம்பாவிதங்களை நிகழ்த்திவிடுகிறது.
மனித - வன உயிரின
மோதல்கள் இல்லாமல் இந்த இயற்கை நிலையை சமன்படுத்தும் வகையில் மனிதசமுதாயம் உணர்ந்து
நடந்துகொள்ள வேண்டும்.
பல்லுயிர் பகுதியான
தமிழ்நாடு-கேரள-கர்நாடகத்தில் 5,520சதுர.கி.மீட்டரும்
மேற்குத்தொடர்ச்சி மலைகளின் நீட்சியும் இணைந்த வனப்பகுதி அரிய தாவரங்களும், செடிகொடிகளும், விலங்குகளும், பறவைகளும் என கண்கொள்ளா காட்சியாக நமக்குச்
சீதனமாக இயற்கை கொடுத்த செல்வங்களை நாம் கண்டுகொள்வதில்லை.
இந்தியாவில் நடப்பதுபோல, வேட்டையாடுதல், வனங்களை அழித்தல் போன்றவை மற்றநாடுகளில்
அதிகமாக நடைபெறுவதில்லை. இருப்பினும் ஆப்ரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்தியாவைவிட வனப்பரப்பும், வனவிலங்குகளும் அதிக அளவில் உள்ளன. அதனை
பாதுகாத்து பராமரித்து அங்குள்ள மக்கள் இயற்கையைக் கொண்டாடுகின்றனர்.
அந்தவகையில் நாமும் இந்த
உண்மைநிலையை அறிந்து காட்டையும் வனவிலங்குகளையும் காத்து நாட்டை வளப்படுத்துவோம்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
No comments:
Post a Comment