Wednesday, March 11, 2015

மனித உரிமை அமைப்புகள் கேள்விக்குறியா?. - “Rights bodies holding kangaroo courts? "




தமிழகத்தில் இயங்கும் மனித உரிமைகள் அமைப்புகள் குறித்து, ”தனிப்பட்ட விளம்பரத்திற்காகவும் , கட்டப்பஞ்சாயத்துகள் செய்வதற்காகவும் துவங்கியுள்ளதாக” நீதிமன்றத்தில்  வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

மனித உரிமை ஆணையத்தின் சட்டங்களை தமிழகத்தில் முதன் முதலாக தமிழில் மொழிபெயர்த்தவன் மற்றும் 1970களின் இறுதியில் ”அமினிஸ்ட் இண்டர்நேஷனல்”, ”ஆசியா வாட்ச்” போன்ற அமைப்புகளில் தொடர்பில் இருந்தவன் என்ற முறையில் நான் இங்கே சில கருத்துகளைச் சொல்ல வேண்டிய கடைமையில் உள்ளேன்.

மனித உரிமை அமைப்புகள் என்று ஒருசிலர் நிறுவனங்களை உருவாக்கிக்கொண்டு தங்களுடைய சுயலாப நோக்கத்துடன் செயல்படும் நிலை இருக்கின்றது. சமீபகாலமாக, அதாவது சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்குள் இவை மழைக் காளான்கள் போல வளர்ந்துவிட்டன. இது வேதனையான செய்தியாகும்.

மனித உரிமைகள் காக்கப்படவேண்டும் என்பதற்காகவே
பி.யூ.சி.எல் போன்ற தமிழகத்தின் சில அமைப்புகள் இதயசுத்தியோடு போராடுகின்றனர். அவர்களின் செயல்பாடுகள்  பாராட்டும்விதத்தில் உள்ளன.

1980ல் எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் தேவாரம் காவல்துறை அதிகாரியாக இருக்கும் பொழுது, தர்மபுரி மாவட்டத்தில்
சில இளைஞர்களை நக்சலைட்டுகள் என கைது செய்து துன்புறுத்திய போது, பழ.நெடுமாறனுடன் அம்மாவட்டத்தில் ஆறுநாட்கள் பயணித்து களப்பணி ஆற்றியபோது தான் மனித உரிமைப் பிரச்சனைகளில்   களப்பணியாற்ற அதிகமான வாய்ப்புகள் அமைந்தன.

அதே காலகட்டத்தில்,  சேலம் அருகே கிச்சிப்பாளையம் காவல்நிலையத்தில், ஒரு பெண்ணை காவல்துறையினர் அடித்துக் கொலை செய்த பிரச்சனை தமிழக சட்டமன்றத்திலே எதிரொலித்தது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அதனை மறுத்தார்.
லாக்கப் டெத் என்னும் காவல்மரணம்  குறித்து முதன் முதலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தேன்.

அதன் பிற,கு சிதம்பரம் அண்ணாமலை நகரில், காவல்துறையினர்  பத்மினி என்ற பெண்மணியை காவல்நிலையத்தில் கற்பளித்த சம்பவம் தமிழ்நாட்டையே பதற வைத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப்பிரச்சனையில் கடுமையாக நீதிமன்றம் வரை சென்று போராடி நீதியைப் பெற்றது.










அப்போதெல்லாம் தகவல் தொடர்பு இன்றைக்கிருக்கும் நிலைக்கு வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியினால் சில இன்றைக்கு காளான் அமைப்புகள் சில தங்களை மனித உரிமைகளின் காவலர்கள் என விளம்பரப்படுத்திக் கொள்கின்றது.

புளியங்குடியைச் சேர்ந்த ஜே. சுயம்புலிங்கம் வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், மாநில காவல்துறை தலைவருக்கு ”தமிழ்நாட்டில் மிரட்டல்கள், கட்டப்பஞ்சாயத்து நடத்துகின்ற அமைப்புகள் குறித்து கேள்விகேட்டது சரியானதே!

சுயம்புலிங்கம் வழக்கின் விசாரணை, நேற்றைக்கு (10-03-2015)  நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் வந்த போது, தமிழ்நாட்டில்  சட்டத்தை மீறி செயல்பட்ட மனித உரிமை அமைப்புகள் மீது 170 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதிலிருந்தே தெரிகிறது சில மனித உரிமை அமைப்புகளின் செயல்பாடுகளின் தன்மை.

முறையான பதிவு இல்லாமல், சட்டப்பூர்வமாகவும் இல்லாமல் இந்த அமைப்புகள் செயல்படுகின்றது. இப்படிப்பட்ட போலியான அமைப்புகளால் எப்படி மனித உரிமைகள் காக்கப்படும்?.

எனவே, உரிய சட்டத் திருத்தங்களை மனித உரிமை அமைப்புகள் குறித்து, சங்கங்கள் பதிவுச்சட்டத்தில் கொண்டுவரவேண்டும். இல்லையெனில் இதற்கான பொதுவான தனிச் சட்டத்தையே மத்திய அரசு இந்தியா முழுவதும்  நடைமுறைப்படுத்த வேண்டும்.

தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று முறையற்ற நடவடிக்கைகளால், போலி மனித உரிமை அமைப்புகள் நாட்டுக்குச் சீரழிவைக் கொண்டுவந்துவிடக்கூடாது.

இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து “Rights bodies holding kangaroo courts? " என்று ஆங்கில இந்து  நாளேட்டின் கேள்வி சரியாக பொருந்திவிடுகிறது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
11-03-2015

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...