Saturday, March 21, 2015

Kulasekarapattinam's ideal launch pad - LPSC_Mahendragiri

குலசேகரப்பட்டிணம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படாது எனச் சொல்லிவிட்டது  மோடி அரசு.

(Kulasekarapattinam's ideal launch pad - LPSC_Mahendragiri  )
__________________________________________________________________

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள
குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கின்றன. அதன் அருகாமையில் திருநெல்வேலி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி மற்றும் திரவ எரிவாயு தொழில்நுட்ப மையமும் அமைக்கவேண்டும் என்ற திட்டங்களின் கோரிக்கையும்
இருந்தாலும் அவை நடைமுறைக்கு வரவில்லை.

காவிரி டெல்டாவில் மீத்தேன் திட்டம், தேனியில் நியூட்ரினோ, கூடங்குளம் அணு உலை போன்ற திட்டங்களை மக்கள் எதிர்த்தாலும்  அரசுகள் நிறைவேற்றி வருகின்றது.  >>>>> தற்சமயம் மீத்தேன் திட்டம் கைவிடப்பட்டது என்று செய்தி வந்தாலும், அது முழுமையான முடிவா என்பது தெரியவில்லை.”<<<<<

திருவனந்தபுரத்தில் ISROஅமைப்பில் இயங்கும் இந்திய வானியல் தொழில்நுட்ப மையம் வான்வெளித்தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றன. அதைப்போல வானியல் மற்றும் திரவ எரிவாயு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள தொழில்நுட்ப பயிலகம் மகேந்திரகிரியில் அமைக்கவேண்டுமென்ற முக்கிய கோரிக்கை இருந்துவருகின்றது.

விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் கட்டுதல். வான்வெளி அறிவியல் சம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மகேந்திரகிரியில் திரவ எரிவாயு மையம் அமைக்கப்பட வேண்டியது அவசியம். இதற்கான பொறுத்தமான சுற்றுச்சூழல் மகேந்திரகிரியில் அமைந்துள்ளது.

மகேந்திர கிரி -நெல்லைமாவட்டம்


இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கவேண்டுமென்று மத்திய அரசு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்திலே முடிவு செய்தது. அதற்காக ஒரு குழு அமைத்து, அந்தக்குழுவும் ஆய்வு செய்து குலசேகரப்பட்டிணம் சரியான இடம் என்றும் அறிக்கை கொடுத்தது. கூடவே மகேந்திரகிரி (Liquid Propulsion Systems Centre)  இந்திய எரிவாயு ஆய்வு மையத்தையும் அமைக்க சரியான இடம் என்ற கோரிக்கையையும் பரிந்துரை செய்தது.

12வது ஐந்தாண்டு திட்டத்தில் விண்வெளி ஆராய்ச்சி குறித்து 60திட்டங்கள் கண்டறியப்பட்டன. ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள இரண்டு ராக்கெட் ஏவு மையங்களை விரிவாக்கவும் இதில் முடிவுகள் எடுக்கப்பட்டன. மீண்டும் மூன்றாவது தளத்தை ஸ்ரீஹரிக்கோட்டாவிலே அமைக்க  பணிகளை மன்மோகன்சிங் ஆட்சிகாலத்திலேயே தொடங்கிவிட்டது இஸ்ரோ.

குலசேகரப்பட்டிணம்  “ராக்கெட் ஏவுதளம்” அமைக்க பொறுத்தமான இடமும் கூட . 12ஆயிரம் கோடி ரூபாயில் குலசேகரப்பட்டிணத்தில் அமைக்கவேண்டிய திட்டத்தை தமிழகத்தின் அழுத்தம் இல்லாததாலும், டெல்லி பாதுஷாக்கள் புறக்கணிப்பதும் வேதனையைத் தருகின்றது.


பி.எஸ்.எல்.வி செயற்கைக் கோள்கள் தெற்கு நோக்கி ஏவப்பட்டு 450முதல் 1000கி.மீ தூரத்தில் வான்வெளியில் நிலை நிறுத்தவேண்டும். இந்த ராக்கெட்டுகள் பூமத்திய ரேகைக்கு கிழக்கு நோக்கி ஏவப்பட்டு சுமார் 36,000கிலோமீட்டர்  கிழக்கு நோக்கி நிலை நிறுத்த வேண்டும். ஒரு நாட்டில் ஏவப்பட்ட ராக்கெட்டானது இன்னொரு நாட்டின்  எல்கைக்கு உட்பட்ட பகுதியில்  பறக்கக் கூடாது.

குலசேகரப்பட்டினத்திலிருந்து ஏவப்படும் ராக்கெட் சரியாக இந்திய எல்லைப்பகுதியில் பறக்கும். ஆனால் ஸ்ரீஹரிக்கோட்டாவில் ராக்கெட் ஏவப்பட்டால் இந்தோனேஷியா, இலங்கை  மியான்மர் போன்ற நாடுகளின் மேல் பறக்க வாய்ப்புள்ளது. அதனை  திசை திருப்பி குறிப்பிட்ட சுற்றுப்பாதைக்குக் கொண்டுவரவேண்டும். இதற்கு மேலும் பல கோடிகள் செலவாகும்.


குலசேகரப்பட்டிணம் 

அதுமட்டுமில்லாமல் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட் ஏவப்பட்டால்  சுற்றுப்பாதையை சரிசெய்ய கூடுதலான எரிபொருள் நிரப்பவேண்டும். குலசேகரப்பட்டணத்தில் இந்த தேவை இல்லை இதனால் ஒவ்வொரு முறை ஏவப்படும் போது 20கோடி ரூபாய் எரிபொருள் மிச்சப்படும்.

பன்னாட்டுச் சந்தை நிலவரப்படி, ஒருகிலோ எடையை விண்ணில் அனுப்பவேண்டும் என்றால் 15லட்சம் ரூபாயிலிருந்து 20லட்சம் ரூபாய் வரை செலவாகும். குலசேகரப்பட்டணத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும் போது 2,200கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை அனுப்பலாம். இன்னும் கூடுதலாக 600கிலோ எடையும் சேர்த்து அனுப்பக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆனால் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 1600கிலோ கனம் கொண்ட செயற்கைகோள்களை 650கிலோமீட்டர் தூரத்தில் தான் வான்வெளியில் நிலை நிறுத்தமுடியும். இப்படி இவ்விரு இடங்களையும் பொறுத்திப் பார்த்தால் 90கோடி ரூபாய் குலசேகரப்பட்டிணத்திலிருந்து ஏவும் போது
செலவு குறைவாகிறது.

மேலும் குலசேகரப்பட்டணத்தில் இருந்து செயற்கைக்கோள்கள் ஏவும் பொழுது 36000கிமீட்டர் தூரத்தை குறைவான நேரத்தில் கடக்கும். இதனால்  எரிபொருள் எஞ்சியுள்ளதோடு செயற்கைக்கோளினுடைய செயல்பாட்டுக் காலமும் கூடுதலாகும்.

ஸ்ரீஹரிக்கோட்டா ராக்கெட் ஏவுதளம்

 ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டாவில் மூன்றாவது மையம் அமைப்பதில்  செலவீனங்களும் அதிகம், அங்கு இயற்கை சீற்றங்களான புயல் பாதிப்பினால் வருடத்திற்கு மூன்று மாதங்கள் செயல்பட முடியாமல் போகும். ஆனாலும் முன்கூட்டியே  ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 300ஏக்கர் நிலத்தை புதிய ஏவுதளத்திற்காக 2013ம் ஆண்டிலே  கையகப்படுத்திவிட்டார்கள்.

ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழகத்தின் குலசேகரப்பட்டினம்  எல்லாவகையிலும் பொறுத்தமாக இருந்தும்,  குலசேகரப்பட்டிணம் ராக்கெட் ஏவுதளமும், மகேந்திரகிரி விண்வெளி எரிவாயு ஆய்வு மையமும் வராமல் தடுப்பது டெல்லியில் உள்ள கேரள லாபி என்று குற்றச்சாட்டு உள்ளது.

ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய பேராசிரியர். நாராயணா என்பவர் தலைமையில் குழுவொன்று அமைந்தது. அந்தக்குழுவில் 2பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் 4பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் ஒருவர் மட்டும் தான் தமிழநாட்டைச் சேர்ந்தவர்.  குழுவின்  ஆய்வில் குலசேகரப்பட்டிணத்தை பரிசீலனைக்கே எடுக்காமல் புறக்கணித்தார்கள்.

 மகேந்திரகிரியைப் பொறுத்தவரையில், இதற்கான தலைமை நிலையம் இங்கு அமைந்தால்,  திருவனந்தபுரத்தில் செயல்படும் அலுவலகம் மகேந்திரகிரிக்கு மாறிவிடும் வாய்ப்பும்,  மலையாளிகளுடைய ஆதிக்கமும் அவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பும் தடைபட்டுவிடும் என்ற அச்சமும் ஏற்பட, தமிழகத்துக்கு வரவேண்டிய இந்த இரட்டைத் திட்டங்கள் வரவிடாமல்  அவர்களால் தடுக்கப்படுகிறது.

இன்றைக்கு மட்டுமல்ல 1956ல் மொழிவாரி மாநிலங்கள் அமைந்த காலத்தில்,  தேவிகுளம்-பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, பாலக்காடு பகுதியில் உள்ள கிராமங்கள் என பல பகுதிகளை கேரளாவிடம் இழந்தோம்.

 இதில் வேடிக்கை என்னவென்றால் தேவிகுளம்-பீர்மேடு தாலுகாவில் அன்றைக்கு மொத்தத்தில் நான்கு கிராமங்கள் தான் மலையாளிகள் கிராமங்கள் மீதம் நூற்றுக்கணக்கான கிராமங்கள் தமிழ் கிராமங்கள்.

அன்றைக்கு நேருவின் அலுவலகத்தில் இருந்த மலையாளிகளின் லாபி மொழிவாரி மாநில அமைப்புக் குழுவின் உறுப்பினர் கேரளவைச் சேர்ந்த பணிக்கர் போன்றவர்கள் தமிழகத்திற்கு மோசம் செய்தார்கள். அதே நிலைமைதான் இன்றைக்கும்  தொடர்ந்து நடைபெறுகிறது.

கேரளாவிடம் இழந்த இந்தப்பகுதிகளால் தான் குமரி மாவட்ட நெய்யாறு, நெல்லை மாவட்ட அடவிநயினார், உள்ளார், செண்பகத் தோப்பு,
திருவில்லிபுத்தூர் அருகே  அழகர் அணைத்திட்டம், முல்லைப்பெரியார், ஆழியார்-பரம்பிக்குளம், பாண்டியாறு-புன்னம்புழா, சிறுவாணி, பம்பாறு போன்ற நதிநீர்ப் பிரச்சனைகள் நம்மை வாட்டி வதைக்கின்றது. இப்படித்தான் கேரளா நம்மிடம் எல்லாம் பெற்றுக்கொண்டு நன்றியில்லாமல் முதுகில் குத்துகிறது.




பிரச்சனைக்கு வருவோம்.

 குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுமையம் அமைந்தால் 8000பேருக்குமேல் வேலையும், 6ஆயிரம் பேருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பும், வணிகமும் கிடைக்கும்.

மகேந்திரகிரி, குலசேகரப்பட்டிணம் என்ற இரண்டு கேந்திரங்கள் அமைந்தால் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்கள் அடிப்படை வசதிகள் பெற்று அவ்வட்டாரமே வளர்ச்சி அடையும்.

ஏற்கனவே INS Kattabomman என்ற கடற்படை தளம் விஜயநாராயணம் பகுதியில் அமைந்துள்ளது.  நான்குநேரியில் சிறப்புப் பொருளாதார பூங்காவும் அமைந்துள்ளதால் இந்த இருதிட்டங்கள்  வந்தால் தெற்குச் சீமை வளர்ச்சி அடையும்.

 குறைந்தபட்ச அடிப்படைக்காரணங்களே இல்லாமல் மோடி அரசு  இத்திட்டங்களை கைவிரித்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது  டெல்லி அதிகார மையம் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் போக்கில் புறக்கணிக்கிறது என்பது நிரூபணம் ஆகிறது என்று தானே சொல்லவேண்டும்?.


- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
  20-03-2015.

#Kulasekarapattinam_ISRO_Launch_Pad

#LPSC_Mahendragiri

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...