Thursday, March 5, 2015

நாட்டார் வழக்காற்றியலின் கர்த்தா : நா.வானமாமலை - Folk lore scholar N.Vanamamalai.


 

நாட்டார் வழக்காற்றியலின் கர்த்தா : நா.வானமாமலை


நாட்டார் வழக்காற்றியலின் கர்த்தா : நா.வானமாமலை -Folk lore scholar N.Vanamamalai.
________________________________________________________

சிலநாட்களுக்கு முன், திருநெல்வேலி வண்ணார்பேட்டையைத் தாண்டி முருகன்குறிச்சி வழியாகத் திருச்செந்தூர்  சாலையில் பயணிக்கும் போது, அந்தப்பகுதியில் வாழ்ந்த தமிழறிஞர் நா.வானமாமலை நினைவுக்கு வந்தார்.  அவர் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியைச் சார்ந்தவர்.

நான் இஸ்கஸில் (இந்திய -சோவியத் நட்புறவு கழகம்) மாணவர் அமைப்பில் நிர்வாகியாக இருக்கும் பொழுது, மறைந்த மூத்தவழக்கறிஞர். என்.டி. வானமாமலை அதன் செயலாளராகவும், திரு என்.டி.சுந்தரவடிவு அவர்கள் தலைவராகவும், இராஜபாளையம் அலெக்ஸ்  அலுவலகச் செயலாளராகவும் இருந்தார்கள். அப்பொழுது  அடிக்கடி நா.வானமாமலை அவர்களைச் சந்தித்ததுண்டு.   கி.ரா-வும், நா.வானமாமலையும் நெருங்கிய நண்பர்கள்.

இந்திய.கம்யூனிஸ்டு கட்சியின் முன்னணி தலைவராகவும், பலமுறை கோவில்பட்டியின் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருந்த சோ.அழகர்சாமி, அக்கட்சியின் நிர்வாகி கோடங்கால்.கிருஷ்ணசாமி ஆகியோருடன் அவருடைய பாளை முருகன்குறிச்சி டுட்டோரியல் கல்லூரியில் பலமுறை சந்தித்ததுண்டு. அவருடன் பேசினால், பல செய்திகளும் அனுபவங்களும் கிடைக்கும்.

நாட்டுப்புறபாடல்கள், நாட்டுப்புற கதைகள் மற்றும் நாட்டுப்புற கலைகள் பற்றிய பல அரிய தகவல்களை அறிந்து, அவற்றைச் சேகரித்து இன்றைக்கு நா.வானமாமலை தொகுத்தளிக்கவில்லை என்றால், நமக்கு தற்போது கிடைத்திருக்கும் இதுசம்பந்தமான செய்திகளின் காலப்பெட்டகம் கிடைக்காமல் போயிருக்கும்.  தமிழ்தாத்தா உ.வே.சா ஓலைச்சுவடிகளுக்காக எப்படி ஒவ்வொரு ஊராகச் சென்றாரோ அவ்வாறு ஒவ்வொரு ஊராகச் சென்று இந்த செய்திகளை எல்லாம் சேகரித்தார் நா. வானமாமலை.



தமிழ்நாட்டு பாமரர் பாடல்கள், ஐவர் ராசாக்கள் கதை, கட்டபொம்மு கூத்து, கட்டபொம்மன் கதைப்பாடல், கான்சாகிபு சண்டை, முத்துப்பட்டன் கதை, வீணாதிவீணன் கதை போன்றவை அவற்றுள் முக்கியமானவை.  எப்படி நெல்லையில் ரசிகமணி டி.கே.சி வண்ணாரப்பேட்டை இல்லத்தில் வட்டத்தொட்டி அமைப்பைத் தொடங்கினாரோ, அதுபோல 1967ல் நெல்லை ஆய்வு மையம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இவரால் பல ஆய்வாளர்கள் உருவாகினார்கள்.

இந்த நெல்லை ஆய்வுமையக் கூட்டம் திட்டமிட்டவாறு தொடர்ந்து நடத்தி பல விவாதங்களும், ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. இவருடைய ஆராய்ச்சி இதழ் 1969ல் துவக்கப்பட்டு அற்புதமான பல தமிழாய்வுக்கட்டுரைகள் வெளிவந்தன.

பிற்காலத்தில் அந்த ஆராய்ச்சியை பேராசிரியர் அ.சிவசுப்பிரமணியம் தூத்துக்குடியிலிருந்து தன்னை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்டார்.  இவருக்கு உறுதுணையாக விளாத்திகுளம் அருகே தங்கம்மாபுரத்தில் உள்ள எஸ்.எஸ். போத்தைய்யா, நாட்டுப்புற தரவுகளைத் திரட்ட உதவியாக இருந்தார்.

நான்குநேரியில் 1917 டிசம்பர் 7ம் தேதி பிறந்த நா.வானமாமலை அப்பகுதி விவசாயிகள் பிரச்சனைகளிலும், தொழிலாளர்கள் இயக்கங்களிலும் இணைந்து போராடி சிறைக்குச் சென்றவர். 1950ல் தூத்துக்குடி மீளவிட்டானில் சரக்கு இரயில் கவிழ்க்கப்பட்ட  “நெல்லை சதிவழக்கில்” கம்யூனிஸ்ட்டு கட்சி தலைவரான பாலதண்டாயுதம், நல்லகண்ணு, ஆசிரியர்.ஜேக்கப் போன்றவர்களெல்லாம் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சதி வழக்கில் நா.வானமாமலையும் விசாரணைக் கைதியாக கைது செய்யப்பட்டவர்.

ஈழ, மலேசிய, தமிழர்கள் மத்தியிலும் அன்பைப் பெற்றவர் நா.வானமாமலை. யாழ்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு “இலக்கிய கலாநிதி” என்ற பட்டமளித்து கௌரவப்படுத்தியது.

இவையெல்லாம் ஒருபக்கமிருந்தாலும், 1960களில் ஒன்றுபட்ட நெல்லை குமரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் கல்லூர்யில் பி.யூ.சி (புகுமுக வகுப்பு) தேர்வுகளில் தோல்வியடைந்தால், இவருடைய “வானமாமலை டுட்டோரியல்தான் பலமாணவர்களுக்குச் சரணாலயம்.  மாணவர்களை அன்போடு நடத்துவார்.

 இப்படிப்பல ஆளுமைகளை எல்லாம் கொண்டவரை, சட்டமேலவைக்கு உறுப்பினராக அனுப்பி வைக்கவேண்டுமென்று சட்டமன்ற உறுப்பினராக இருந்த சோ.அழகர்சாமி பலசமயம் என்னிடம் சொல்லியுள்ளார்.

சுயநலமற்று, வாழ்ந்து பலஅரிய கடமைகளை ஆற்றிய நா.வானமாமலை போன்றவர்களை இன்றைய தலைமுறையினர் எத்தனை பேருக்குத் தெரியும். சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள மாணவர்களிடம் உத்தமர் காந்திக்கு உதவியாகவும், வழிகாட்டுபவராகவும் இருந்த குமரப்பாவைப் பற்றிக் கேட்டால் தெரியவில்லை. ஆனால் ஒரு தொலைக்காட்சி சீரியல் அல்லது வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர்களைப் பற்றிக் கேட்டால் சொல்லிவிடுகிறார்கள். இப்படித்தான் காலத்தின் கோலம் இருக்கின்றது.

கி.ரா அவர்களை ஆசிரியராகக் கொண்டு, நாட்டுப்புற படைப்பாளி கழனியூரன் பொறுப்பாசிரியராகவும், மறைந்த தி.க.சி-யை ஆலோசகராகவும் கொண்டு, நான் இணை ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும்,    “கதை சொல்லி”- என்ற கத்தாய இதழை நடத்தினோம்.  இடைக்காலத்தில் பணிச்சுமைகளால் சரியாக இந்த இதழைக் கொண்டுவரமுடியவில்லை. அப்போது ஆலோசகரான தி.க.சி சொல்வார் என்னிடம் “அச்சிட்டு கதைசொல்லியைக் கொண்டுவர சிரமப்படுகிறீர்களே நாங்கள் அன்பு பாராட்டிய நா.வானமாமலை நாட்டுப்புற இயலுக்காக தூக்கமும் தண்ணீருமில்லாமலும் உழைத்தாரே அப்படிப்பட்டவரின் கனவுகளை நிறைவேற்ற கதைசொல்லி மாதிரி இதழ்கள் தொடர்ந்து வரவேண்டும்” என்பார்.

நா.வானமாமலை அவர்களின் மாணவர்களாகத் தலையெடுத்த  சி.வ.சு,  அ.கா. பெருமாள் போன்ற அறிஞர்கள் அவருடைய சிந்தனையை மக்களிடம் எடுத்துச் சொல்லிவருகின்றனர். நா.வானமாமலை வாழ்ந்த மண்ணான பாளை. புனித சவேரியர் கல்லூரியில் ( St. Xeviers College., )  நாட்டுப்புற இயலுக்காக தனி துறை அமைக்கப்பட்டு அரிய பணிகளை மேற்கொள்வதை நாம் பாராட்ட வேண்டும்.

1980ல் பிப்ரவரிமாதம் இயற்கை எய்திய  நா.வானமாமலையின் நாட்டுப்புறவியல் சேவை தமிழக வரலாற்றில் என்றைக்கும் நிலைத்து நிற்கும்.

 - கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-03-2015




No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...