நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை முதலில் மத்திய அரசு பிறப்பித்த பொழுது, என்ன இவ்வளவு அவசரம் நாடாளுமன்றத்தில் விவாதித்து நடவடிக்கை எடுக்கலாமே என்று கண்டனங்கள் தெரிவித்தும், மோடி அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது.
இதுகுறித்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் திடீரென அ.தி.மு.க ஆதரவோடு நிறைவேறியது. மாநிலங்கள் அவையில் இதுவரை சட்டம் நிறைவேற்றப்படவில்லை. எனவே சட்டமாக்காத நிலையில், முதலில் பிறப்பித்த அவசரச் சட்டத்தினுடைய காலவரை முடிவடைந்தது. அதன்பின்னும், வேண்டுமென்றே பல கண்டனங்களுக்கிடையே விவசாயிகளைக் காவு கொடுக்கும் வகையில் மறுபடியும் இரண்டாவது முறையாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு கேலிக்குத்தாகிவிட்டது.
ஒரு ஜனநாயக நாட்டில் இப்படியா ஒரு துக்ளக் அணுகுமுறை என்று அனைவரும் விம்ர்சிக்கக் கூடிய வகையில் மோடி அரசு நடந்துகொண்டது. தற்போது மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு எந்த விளைவுகள் வந்தாலும் நில கையகப்படுத்தும் மசோதாவைச் சட்டமாக்கிவிடுவோம் என்ற பேச்சு அதிர்ச்சியலையை தந்துள்ளது.
வெளிநாட்டு கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு கூஜா தூக்க மோடி அரசு தயாராகி விட்டதின் விளைவுதான் வெங்கையா நாயுடுவின் இந்தப் பேச்சு.
நாடு விடுதலையடைந்த பின்பு, இதுபோல நான்குமுறை அவசரச் சட்டங்கள் மீண்டும் இரண்டாவது தடவையாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1956ல் பண்டிதர் நேரு காலத்தில் திருவாங்கூர் - கொச்சின் மாநிலத்தின் நிதிநிலை ஒதுக்கீடு குறித்தான மசோதா மற்றும் அவசரப்பணிகள் குறித்தும் முதல் தடவையாக அவசரச் சட்டம் இரண்டாவதுமுறையாகப் பிறப்பிக்கப்பட்டது.
1987ல் இராஜீவ் காந்தி காலத்தில் தடா மற்றும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை கடத்தல் தடுப்புச் சட்டம் குறித்தும் அவசர மசோதா இரண்டாவது தடவை பிறப்பிக்கப்பட்டது.
அதைப்போலவே 1994ல் நரசிம்மராவ் காலத்தில் மணிப்பூர் -பஞ்சாப்- புது டெல்லி மாநகராட்சி குறித்து அவசரச்சட்டம் இரண்டாம் தடவையாகப் பிறப்பிக்கப்பட்டது.
நான்காவது முறையாக தற்போது மோடி அரசு, நில கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற இரண்டாம் தடவை திரும்பவும் அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளது.
விவசாய நாடான இந்தியாவில் 60சதவித வேலை வாய்ப்பும், 60சதவித நிலப்பரப்பும் வேளாண்மையை நம்பி இருந்தாலும் , அரசின் மெத்தனத்தால் உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) வெறும் 18சதவிகிதம்.
தவிர விவசாயிகளிடம் ஏற்கனவே கையகப் படுத்திய நிலங்களையும் அரசுகள் இன்னமும் பயன்படுத்தாமல் வைத்துள்ளது .
கோல் இந்தியா நிறுவனம் வசம் உள்ள 2லட்சம் ஹெக்டேர் நிலத்தில் வெறும் 50,000ஹெக்டேர் நிலப்பரப்பைத் தான் இந்நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. எஞ்சிய நிலம் எந்தப் பயன்பாடும் இல்லாமல் வெறுமனே உள்ளது.
2005ம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற சட்டத்தின் மூலமாக 60,374ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 576-சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டாலும், அதில் வெறும் 37சதவிகித நிலப்பரப்பு கூட முழுமையாக பயன்படுத்தாத நிலையில் உள்ளன. எஞ்சியுள்ள 63சதவிகித விவசாய நிலங்கள் பயன்படுத்தப் படாமலே உள்ளது.
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு 32,87,260 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் நிலப்பகுதி மட்டும் 29,73,190 (மலைகள், நதிகள், நீர்நிலை பரப்புகள் நீங்கலாக) சதுர கிலோமீட்டர் ஆகும். வனப்பகுதி மட்டும் 6,77,598 சதுர கிலோமீட்டர், மீதமான விவசாய நிலப்பகுதி வெறும் 1,79,900 சதுர கிலோமீட்டர் மட்டுமே.
இந்நிலையில் மேலும் விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தாமல், ஏற்கனவே கையகப்படுத்தி வைத்திருக்கும் நிலங்களையே பயன்படுத்தலாமே,
விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு தொழில் வளர்ச்சி என்று பேசுவதும், விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள் என்று திமிர்ப்பேச்சு பேசுவதும் இந்தியா போன்ற விவசாய நாட்டிற்கு பொறுத்தமான அணுகுமுறையாக இருக்காது.
இஸ்ரேல் நாடு ஒருகாலத்தில் உணவு தானியங்களுக்கு வெளிநாடுகளிடம் கையேந்தி பெரும் சோதனைகளைச் சந்தித்தது. இப்போது விவசாயத்தை முழுமையாக அந்நாடு விரிவு படுத்தியதால் உணவு ஏற்றுமதியில் உலக அளவில் சிறந்துவிளங்கி, பொருளாதார வளர்ச்சியையும் எட்டியுள்ளது
திரைப்படங்கள் தொடங்கும் முன்பு காட்டப்படும் செய்திப் படங்கள் போல இந்தப் புள்ளிவிபரங்களை எல்லாம் படிக்க மக்களுக்குப் பொறுமையில்லை என்றாலும், அவசியம் இதுபற்றி சிந்திக்கவேண்டிய நிலையில் நாமெல்லாம் இருருக்கின்றோம்.
கையகப் படுத்திய நிலங்களே பயன்படுத்தப் படாமல் இருக்க, நில ஆர்ஜிதச் சட்டத்தை எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் கொண்டு வந்தே தீருவோம் என்று ஏன் இவ்வளவு அக்கறையும் அலம்பலும் மோடி கூட்டாளிகளுக்கு.
மக்களிடமிருந்து எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வெங்கையா நாயுடு போன்றவர்கள் கூச்சலிடுவது மக்கள் நலனுக்காகவா?
உண்மைகள் உறங்குகின்றன, நியாயங்கள் நிராயுதபாணியாக உள்ளன. பாவப்பட்ட மனிதனாக ஏழை விவசாயிகள்.....
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
06-04-2015.
No comments:
Post a Comment