நேற்றைக்கு முதல்நாள் தினமணி ஆசிரியர் திரு.கே.வைத்தியநாதன், கல்கிப் பிரியன், புதுவை இளவேனில், திரு.லட்சுமி நாராயணன் அவர்களோடு நானும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கதைசொல்லி ஆசிரியர். கி.ராவை புதுவையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்தேன்.
பாரதிதாசன் 125வது பிறந்தநாள் நிகழ்வை ஒட்டி புதுவை செல்லவேண்டிய கடமை இருந்தது. கரிசல் இலக்கியப் பிதாமகனும், முனத்தி ஏருமான கிராவிடம் இலக்கியம், அரசியல் என அனைத்துப் பிரச்சனைகளையும் இரண்டுமணி நேரத்திற்கு மேலாக விவாதித்தது மனதுக்கு மகிழ்சியாக இருந்தது.
ரசிகமணி டி.கே.சியின் சகாவாக இருந்த கி.ரா தனித்தமிழ் மட்டுமில்லாமல் பேச்சு வழக்குத் தமிழும் அவசியம், அப்படி இருந்தால் தான் ஒரு மொழி உயிரோட்டமாக இருக்கும் என அழுத்தம் திருத்தமாக கூறினார்.
வட்டார வழக்கு என்பது ஒரு மொழிக்கு அவசியம். தமிழகத்தில் தென்குமரியில் தொடங்கி, நெல்லை, மதுரை, தஞ்சை , கோவை, சென்னைவரைக்கும் பேசும் தமிழில் வட்டார வழக்குச் சொற்கள் கலந்து தான் பேசமுடியும். அதுதான் உயிரோட்டமான மொழி என்றுசொல்லி, மாம்பழத்தினுடைய வகைகள் கிளிமூக்கு, அல்போன்சா, பங்கனப்ள்ளி என்று பல பிரிவுகள் இருந்தாலும் மாம்பழம் ஒன்றுதானே என்று குறிப்பிட்டார்.
வட்டார வழக்கு எழுத்துநடையும் வளரவேண்டும். அவ்வாறு வளர்ந்தால் தான் நம்முடைய பண்டைய தரவுகள் நிலைத்திருக்கும் என்ற கருத்தை தெளிவுபடுத்தினார்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-04-2015.
No comments:
Post a Comment