Thursday, April 30, 2015

கோவை. ஜி.ஆர்.டி - Dr G R Damodaran.




ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பிற்குரிய ஜி.ஆர்.தாமோதரன் அவர்களுடைய நினைவு வந்தது.

அவரோடு இதே சாலையில், 1978ல் சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்தபொழுது ,மாலை நேரங்களில் அவரோடு நடைபயிற்சி செய்த நிகழ்வுகள் மனதில் காட்சிகளாக எழுந்தன.

கோவை என்றால் நமக்கு மனதில் படுவது,  தொழிற்சாலைகளும், ஜி.டி.நாயுடு, பொள்ளாச்சி மகாலிங்கம், பி.எஸ்.ஜி கல்லூரி, அரசினர் கலைக்கல்லூரி போன்ற கல்லூரிகளும், டாக்டர். ஜி.ஆர். தாமோதரனும் அவருடைய கலைக்கதிரும் தான்.   1960லிருந்து கிட்டத்தட்ட 1980வரை இந்த ஆளுமைகளெல்லாம் கோவைக்குச் சிறப்பு சேர்த்தவர்கள்.

கல்வியாளர்.டாக்டர். ஜி.ஆர்.டி 1952லிருந்து 1957வரை பொள்ளாச்சி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர். 1958லிருந்து 1970வரை தமிழ்நாடு சட்ட மேலைவை உறுப்பினர். திரும்பவும் 1974லிருந்து 78வரை மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆற்றல் மிக்க துணைவேந்தராக 1978லிருந்து 1981வரை பதவியில் இருந்தார்.



பல பல்கலைக்கழகங்களுக்கு சிண்டிகேட் உறுப்பினராகவும் விளங்கினார். 1943ல் துவங்கப்பட்ட  பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியினை நிறுவி, அதன் துவக்ககாலம் முதல் 1986வரை  முதல்வராக இருந்தார்.



இப்படியான சிறந்த கல்வியாளரும், நூலாசிரியருமான ஜி.ஆர்.டி பற்றி அவருடைய  கல்லூரியில் பயிலும் மாணவரே சரியாக, விபரமாக தெரிந்திருக்கவில்லை என்பது வேதனைப்படுத்தியது.

கோவையில், திவான் பகதூர் பி.எஸ்.ஜி ரெங்கசாமி நாயுடு, கிருஷ்ணம்மாள் தம்பதியருக்கு, 1914ல் பிப்ரவரி 20ம் தேதி இவர் பிறந்தார். கோவை பீளமேட்டில் உள்ள சாதாரண ஆரம்பப் பள்ளியில் படித்து, சர்வஜனா உயர்நிலைப்பள்ளியில் இறுதியாண்டு பள்ளிப்படிப்பை முடித்து , கோவை அரசுக்கல்லூரியில் இண்டர்மீடியட் கணிதத்தைப் பாடமாகப் முடித்து, இங்கிலாந்து சென்று கிங்க்ஸ் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மெக்கானிக்கல் பொறியியல் பட்டமும் பெற்றார்.

அவரின் சிறப்புகளில் ஒன்றான, “கலைக்கதிர்” இதழை 1948ல் துவங்கினார். இதழின் வடிவமைப்பு அந்தகாலத்தில் வெளிவந்த  “பேசும்படம்” சினிமா இதழைவிட சற்றுப் பெரிதாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் “கதைசொல்லி” இதழ் போன்ற அளவில் இருக்கும். அப்போதே கலைக்கதிர் இதழுக்குச் சந்தா செலுத்தி எங்கள் தந்தையார் அஞ்சல் மூலம் எங்கள் கிராமத்து வீட்டிற்கு வரவழைப்பார்.

வண்ணமயமான அறிவியல் சம்பந்தப்பட்ட அட்டைப்படம். அருமையான தமிழில் பௌதீகம், ரசாயனம், கணிதம், தாவரவியல், உயிரியல், மண்ணியல், வானியல் மற்றும் விஞ்ஞானம் குறித்த கட்டுரைகளை மிகத் தெளிவாகத் தமிழில் அச்சிட்டு அன்றைய நிலவரத்தோடு கலைகதிர் இதழ் வெளியாகும்.  

முதன்தலாக, இந்த இதழுக்காக அப்போதே கணிப்பொறியில் போட்டோ செட்டிங்குகள் செய்து அச்சடிக்கும் கருவியை, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலே ஒரு இதழுக்குச் செய்தது ஜி.ஆர்.டி தான்.

எப்படி, ஊ.வே.சா-வை தமிழ்த்தாத்தா என்று சொல்கின்றோமோ, அதுபோல அறிவியல் தமிழுக்குத் தந்தையாக “ஜி.ஆர்.டி” விளங்கினார்.
இவருடைய வழிகாட்டுதலில் தான், பெ.நா.அப்புசாமி போன்ற அறிஞர்கள் தமிழில்  அறிவியல் கட்டுரைகளை எழுதத் தொடங்கினர்.

மிகவும் குறைந்த விலையில் தமிழில் அறிவியல் மக்களுக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் ஜி.ஆர்.டி தன்னுடைய முழு கவனத்தின் கீழ் கொண்டு வந்தார். பிறகாலத்தில் இதன் முதன்மை ஆசிரியராக, முனைவர்.தா.பத்மனாபன், டாக்டர்.வி.ஆர்.அறிவழகன் ஆகியோர் பொறுப்பேற்றனர்.  கலைக்கதிர், ஜி.ஆர்.டி அறக்கட்டளை மூலம் வெளியிட்டப்பட்டது.

கலைக்கதிர் இதழ் மட்டுமல்லாமல் பல ஆங்கில அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்தும் கலைக்கதிர் பதிப்பகம் வெளியிட்டது. முதன் முதலாக, “தமிழ் அறிவியல் கலைச்சொல் அகராதியினை” கலைக்கதிர் பதிப்பகம் தான் வெளியிட்டது.



இன்றுவரை கோவை அவிநாசி சாலையில்,  கலைக்கதிர் அச்சகம், நவ இந்தியா, லெட்சுமி மில்ஸ் என்று பேரூந்து நிறுத்தங்களை நடத்துனர்கள் பயணிகளிடம் சப்தமிட்டுச் சொல்வதுண்டு.

ஜி.ஆர்.தாமோதரன் அவர்கள் தமிழில்  “எலக்ட்ரான்”  என்ற நூலினையும் மேலே சொன்ன  “தமிழ் அறிவியல் கலைச்சொல் அகராதியையும்” எழுதினார். அதுமட்டுமில்லாமல் ஆங்கிலத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில்  “Listen to a Leader in Education" போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

பீளமேடு அவிநாசி சாலையில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் காலை கல்லூரி துவங்கும்  போது, பொறியியல் மாணவர்கள் வருவதற்கு முன்னாலே ஜி.ஆர்.தாமோதரன் அவர்கள் கல்லூரிக்கு வந்து, வகுப்புகள் துவங்கும் வரை கல்லூரி முகப்பு வாயிலில் கைகளைக் மார்புக்குக் குறுக்கே கட்டிக் கொண்டு நின்று கொண்டிருப்பார். அவர் உடுத்தும் ஆடையும், அவர் அணியும் பூட்ஸ் காலணியும் கம்பீரத் தோற்றத்தைத்தை அவருக்குக் கொடுக்கும்.

கருப்பு வண்ணத்தில் பாலீஷ் செய்யப்பட்ட அவரது பூட்ஸில்  வெயில் பட்டு பளிச்சென்று மின்னும். பொறியியல் படிக்கும் மாணவர்களும் அவரைப் பார்த்ததும் மரியாதை கலந்த வணக்கத்தை தலைதாழ்ந்து தெரிவித்துவிட்டு வகுப்புக்குச் செல்லும் காட்சியை ஒருசில நாட்களில் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததுண்டு.

 மாணவர்கள் நலனில் அக்கரை கொள்வதோடு,  திடீரென்று விடுதியில் உணவு ஆரோக்கியமானதாகவும், சுவையாகவும் உள்ளதா என்றும், தங்கும் அறைகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறதா என்றும் அவர் ஆய்வுகளும் செய்வதுண்டு.

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் விடுதி பல பிளாக்குகளாக வட்ட வடிவில் வித்யாசமான, ஜி.ஆர்.டி அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டது என்பதை இங்கே குறிப்பிடவேண்டிய முக்கியமான விடயமாகும். அந்த விடுதியில் பல முறை 1960-70காலகட்டங்களில் தங்கியுள்ளேன். சுவையான உணவு, ஆரோக்கியமான சுற்றுச் சூழல் அமைந்த வளாகம் அது.

 ஜி.ஆர்.தாமோதரன் அவர்கள், பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களைக் கோவையில் நிறுவியவர். தெற்கு மண்டல பொறியியல் கல்விகளைச் சீராயும் ஏ.ஐ.சி.டி.இ குழுவின் தலைவர். இந்திய அரசின் மேல்மட்ட தொழில்நுட்பக் கல்விக்குழுவின் தலைவர். சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர். சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட்டில் 33 ஆண்டுகால உறுப்பினர்.

பொள்ளாச்சி தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆசிரியர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்ட மேலவைக்கு எம்.எல்.சியாக 1958லிருந்து 1978வரை பணியாற்றினார். இதில் இடைக்காலத்தில் 1970லிருந்து 74ம் ஆண்டு வரை மட்டும் இடம்பெறவில்லை. தமிழ்நாடு மேலவையின் நீண்டகால உறுப்பினரும் ஆவார்.

இவருக்கு நெருங்கிய நண்பர்களாக தந்தை பெரியார், பெருந்தலைவர்.காமராஜர், பேரறிஞர் அண்ணா, அவிநாசிலிங்க செட்டியார், சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன், டாக்டர். வி.கே.ஆர்.வி.ராவ், பேராசிரியர். என்.ஜி.ரங்கா, டி.டி. கிருஷ்ணமாச்சாரி. டாக்டர். திரிகுணசிங் ஆகியோர் இருந்தனர்.

இவர்களில் சிலர் மத்திய அமைச்சர்களாகவும், பண்டிதர் நேருவுக்கும், இந்திரா காந்திக்கும் நெருங்கின சகாக்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

1986ல் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற என்னுடைய  மணவிழாவுக்கு, ஜி.ஆர். தாமோதரன் அவர்களும் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் அச்சமயம்  நோய் வாய்ப்பட்டு தன்னுடைய இறுதி நாட்களைச் சந்தித்து மறைந்தார்.

அறிவியலையும், தமிழையும் தன் இரு கண்களாக நேசித்தவர் ஜி.ஆர்.டி. கல்வியை அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கடமையாற்றிய உத்தம சீலரும், உண்மையான கல்வித்தந்தையும் இவர் தான். இவருடைய நூற்றாண்டு விழா கடந்த 2014ம் ஆண்டு (1914-2014) கோவையில் கொண்டாடப்பட்டது.

கல்வி வணிகமயமாகிவிட்ட இன்றைய  காலத்தில், இத்தனைப் பன்முகத் தன்மையும் சிறப்புகளும் நிரம்பிய , கல்விக்கும், அறிவியல் மேம்பாட்டிற்கும் உழைத்த ஜி.ஆர்.டி போன்ற உத்தமர்கள் யாரும் நம்மிடையே இல்லை என்பது சோர்வான செய்தியாகும்.




-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-04-2015


7 comments:

  1. Fortunate to study at this great institution PSG Tech(1974 79 ). Inspiring leader.

    ReplyDelete
  2. Good educatanist.I am so proud that I am studied in PSG.Also We have close contact with GRD thatsome of my classmate knows

    ReplyDelete
  3. I am alumi of psgtec.
    It's real world shown to rural boys
    About engineering and morals
    We saulte to him ,I met once 1978.





    ReplyDelete
  4. G R D is a great educationist whose contribution to engineering education and industrial as well as agricultural development of Kongu region is unconquerable. His name will live forever. Jaihind

    ReplyDelete
  5. அமரர் ஜி. ஆர். டி. அவர்களைப் பற்றி ,
    "ஜி.ஆர்.டி. என்றொரு மானுடன் " என்ற நூல். அவரது நூற்றாண்டு விழாவினில் வெளியிடப்பட்டது.தமிழில் அவரைப் பற்றி வெளி வந்த அந்த முதல் நூலினை எழுதியவன் அடியேன் தான். .என்பதிலே பெருமிதம் கொள்கிறேன். அ .வேலுப்பிள்ளை. 9790134379

    ReplyDelete
  6. அமரர் ஜி. ஆர். டி. அவர்களைப் பற்றி ,
    "ஜி.ஆர்.டி. என்றொரு மானுடன் " என்ற நூல். அவரது நூற்றாண்டு விழாவினில் வெளியிடப்பட்டது.தமிழில் அவரைப் பற்றி வெளி வந்த அந்த முதல் நூலினை எழுதியவன் அடியேன் தான். .என்பதிலே பெருமிதம் கொள்கிறேன். அ .வேலுப்பிள்ளை. 9790134379

    ReplyDelete

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...