Thursday, April 9, 2015

கென்னடியும் ஜாக்குலினும்.. - John F Kennedy and Jacqueline.








கென்னடியும் ஜாக்குலினும்.. - John F Kennedy   and  Jacqueline.

____________________________________________________________

உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலங்களில்
அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, அவருடைய மனைவி ஜாக்குலின், ரஷ்ய அதிபர் குருசேவ், எகிப்து அதிபர் நாசர், இந்தோனேசிய அதிபர் சுகர்னோ, எலிசெபெத் ராணி, என பன்னாடுத் தலைவர்களும், அதே போல இந்தியாவில் பண்டிதர் நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், வினோபா , ஜெ.பி என்கின்ற ஜெயபிரகாஷ் நாராயண், இந்திராகாந்தி என்று  கவனத்தை ஈர்த்த  பலஆளுமைகளின் பட்டியல் அதிகம்.


கால்சட்டை போட்டுக்கொண்டிருந்த வயதில் கிராமத்திலுள்ள   எங்கள்வீட்டிற்கு, மதுரை பதிப்பு தினமணியும், நெல்லையிலிருந்து ஒரே பதிப்பாக இருந்த தினமலர்,  சென்னையிலிருந்து ரயிலில் கோவில்பட்டிவரை வந்து, பின் என்னுடைய கிராமமான குருஞ்சாகுளத்திற்கு மதியம் இரண்டரை மணிக்குப் பிறகு சந்திரா பஸ் மூலம வரும் ஆங்கில இந்து நாளிதழும் எங்கள் தந்தையார் படிப்பதற்காக எங்கள் வீட்டிற்கு வரும்.

அப்போது  மேலேசொன்ன தலைவர்களின் கருப்பு வெள்ளைப் படங்களை பிரயாசையோடு அந்தப் பத்திரிகைகளிலிருந்து வெட்டிவைத்துக் கொள்வதுண்டு. அதுபோலவே அமெரிக்கத் தூதரகம், ரஷ்ய தூதரகம், பிரிட்டிஷ் ஹை கமிசன் அலுவலகத்திலிருந்து முறையாக, அமெரிக்கன் ரிப்போர்டர், சோவியத் நாடு, பிரிட்டன் & காமென்வெல்த் என பல சஞ்சிகைகளும் எங்கள் வீட்டிற்கு வருவதுண்டு.

அவற்றிலும்  அமெரிக்கக் கறுப்பினத் தலைவரான மார்டின் லூதர்கிங்,
அமெரிக்கத் தலைவர்களான தியோடர் ரூஸ்வெல்ட்  உட்ரோவில்சன், ஐஸ்நோவர், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டண்ட் சர்ச்சில்,   யுகோஸ்லாவியா அதிபர் மார்ஷல் டிட்டோ , ஜாம்பியா முன்னாள் அதிபர் கென்னத் கெளண்டா, ஆகியோரின் வண்ணப்படங்களையும் ப்ளேடால் வெட்டி வைத்துக் கொள்வதுண்டு. இதே போல அனைத்து நாட்டு அஞ்சல் தலைகளும், நாணயங்களும் சேர்த்து வைப்பதும் வாடிக்கை.

கீழ்கண்ட அமெரிக்க அதிபர் கென்னடியின் மனைவி ஜாக்குலின் தொலைப்பேசியில் பேசும் இந்த கருப்பு வெள்ளை படத்தைப் பார்த்தவுடன் கிட்டத்தட்ட 53ஆண்டுகள் முன்புள்ள நினைவுகள் வந்தன.

இந்த படத்தைப் பார்த்தவுடன், கருப்பு வெள்ளைப் படங்களுக்குள் இருக்கும் மவுசே தனி என்பதை புரிந்திருப்பீர்கள்.

எப்படி ஒரு ஆளுமையுள்ள பெண்மணி ஜாக்குலின். தன்னுடைய கணவர் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டவுடன் அமெரிக்க அரசியலின் துருவ நட்சத்திரமாக விளங்க வேண்டியவர். வயதான ஒனாசிசை மணந்து திசைமாறிவிட்டாரே என்று என்போன்ற அவரை கூர்ந்து கவனத்தவர்களுக்கு வருத்தங்களும் உண்டு.

படத்தில் உள்ள தன்னுடைய இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் பற்றி யோசிக்காமல், உல்லாசத் தீவுக்கும், கப்பல்களுக்கும், பணத்துக்கும் ஆசைப்பட்டு ஒனாசிஸை மணந்ததை பலரும் ரசிக்கவில்லை.  இவரைப் பற்றி தெரிந்தவர்களுக்கு இந்த பெண்மணியின் நடவடிக்கை வருத்தத்தையே தந்தது.

தன்னுடைய இறுதிகாலத்தில் புற்றுநோய்க்கு ஆளாகி ஜாக்குலின் மரணமடைந்தது வருத்தத்திற்குரிய செய்தி. எப்படியெல்லாம் மானிடனுடைய முடிவுகளால் நிலைமைகள் முற்றிலும் தலைகீழாக மாறிவிடுகின்றன என்பதற்கு ஜாக்குலின் ஒரு உதாரணம். அவர் நினைத்திருந்து சரியானபடி காய்களை நகர்த்தியிருந்தால், அமெரிக்காவின் அதிபராகி இருக்கலாம். அப்படி அவர் அதிபராகியிருந்தால் இந்த உலகமே அவரைக் கொண்டாடி இருக்கும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-04-2015. 

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...