_____________________________________
ஊழல்வாதிகளும், பொதுவாழ்வில் பொறுப்பில் உள்ளவர்களும் செய்யும் தவறுகளைக் கேள்விகேட்கும் அமைப்பு லோக் ஆயுக்தா ஆகும். லோக் ஆயுக்தா சட்டங்கள் நிறைவேற்றப்பட்டும் நாடாளுமன்றத்தில் இன்னும் லோக் ஆயுக்தா அமைப்பு நடைமுறைக்கு வரவில்லை.
இதேபோலத்தான், தேசிய மனித உரிமை ஆணையச் சட்டம் 1993ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது இருந்த அ.தி.மு.க அரசு, மாநில மனித உரிமை ஆணையத்தை அமைக்காமலேயே ஆட்சியை விட்டுப்போனது. அதன்பிறகு, 1996ல் வந்த தி.மு.க ஆட்சியில் தான் மாநில மனித உரிமை ஆணையம் நிறுவப்பட்டது.
தமிழக மனித மனித உரிமைகள் ஆணையத்தில், வழக்குகளும் சரியாக பதிவு செய்யாத நேரத்தில், மீண்டும் அ.தி.முக அரசு ஆட்சிக்கு வந்தது.
அந்நேரத்தில், நள்ளிரவில் அனைவரும் வேதனைப் படுகின்ற வகையில் தலைவர் கலைஞர் அவர்களைக் கைது செய்த மனித உரிமை மீறலைக் கண்டித்து, முதன்முதலாக வழக்குத் தொடர்ந்ததோடு மட்டுமல்லாமல், முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, அன்றைக்குக் கைது செய்யப்பட்ட 50,000க்கும் மேலான தி.மு.க நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்களை விடுதலை செய்யவும் வைத்தேன். இந்த செய்தி மறுநாள் செய்தி மற்றும் ஊடகங்களில் வந்தபின்தான் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பு தமிழகத்தில் இருக்கின்றதா என்று பலர் என்னிடம் கேட்டனர். அப்போதுதான் இதுபற்றியான செய்துயும், விழிப்புணர்வும் ஏற்பட்டது.
அமைக்கப்பட்டிருக்கவேண்டிய மாநில மனித உரிமை ஆணையத்தை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் அதிமுக அரசு அமைக்கவில்லை.
அதே போலதான் , ஊழலை எதிர்த்து லோக் ஆயுக்தா அமைப்பு தமிழகத்தில் அமைக்கப்படுவதையும் தாமதப்படுத்துகிறது.
1966 ல், மொரார்ஜி தேசாய் அவர்கள் தலைமையில், Administrative Reforms Commission (ARC) அன்மினிஸ்டிரேடிவ் ரிபார்ம்ஸ் கமிஷன் மத்திய அரசில் லோக் பால், மாநில அரசில் லோக் ஆயுக்தா என்னும் அமைப்புக்கள் உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
லோக் பால் அல்லது லோக் ஆயுக்தா என்பவர் மத்திய மாநில அரசால் நியமிக்கப்படும் ஒரு அதிகாரி. அவர் ஒரு ஓய்வு பெற்ற ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதி மன்ற நீதிபதியாக இருக்கலாம். அவர் கீழ் அமையும் அமைப்புக்கு, பொது மக்கள் தொடுக்கும், புகாரின் பேரில், அரசு ஊழியர்கள் அல்லது அரசியல் தலைவர்கள் பற்றிய ஊழல்களை, தவறுகளை விசாரிக்கவும் தண்டனை அளிக்கவும் அதிகாரம் இருக்கும்.
இந்த மாதிரியான விசாரணையில், பொது மக்களின் குறைகளை விரைவில் களைய ஒரு வழி கிடைக்கும் என்று முடிவானது.
1971ல் முதன் முதலாய், மகாராஷ்டிர மாநிலத்தில், லோக் ஆயுக்தா நியமிக்கப் பட்டது. அடுத்து 19 மாநிலங்களில் லோக் ஆயுத்தா நியமிக்கப் பட்டது. மற்ற மாநிலங்களில் இன்னும் நியமிக்கப் படவில்லை, கர்நாடக மாநிலத்தில், சில ஆண்டுகளுக்கு முன், லோக் ஆயுத்தாவாக முன்னாள் நீதிபதி. சந்தோஷ் ஹெக்டே நியமிக்கப்பட்டார்.
லோக்ஆயுக்தா சட்டம் கொண்டு வர, கர்நாடகா அமைச்சரவையில், அம்மாநில அரசு முயற்சி செய்தது. இதுபற்றி கர்நாடகா சட்ட கமிஷன் பரிந்துரை செய்த போது, பலத்த எதிர்ப்பு கிளம்பவே, ஏற்கனவே உள்ள, மத்திய லோக் ஆயுக்தா சட்டத்தையே, கர்நாடகா லோக் ஆயுக்தா சட்டமாக வைத்து கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது.
புதிய சட்ட மசோதா மூலம், கூடுதலாக ஒன்பது லோக் ஆயுக்தாக்களை அமைத்து, ஓய்வு பெற்ற நீதிபதிகளையும், அதிகாரிகளையும் நியமிக்க அரசு முடிவெடுத்தது. இது தேவையற்றது. ஒன்பது லோக் ஆயுக்தா மூலம், செயல்படுவதைவிட, ஒரே ஒரு லோக் ஆயுக்தா, துணை லோக் ஆயுக்தா மூலம் அனைத்து வழக்குகளுக்கும் தீர்வு காணலாம். இது நேரத்தையும், பணத்தையும் வீணாக்கும் செயலாகும் என்று சந்தோஷ் ஹெக்டே கூறினார்.
கர்நாடக லோக் ஆயுக்தாவாக தீவிரமாக செயல் பட்டு, 12,000 கோடி சுரங்க ஊழலை கண்டுபிடித்து, முதலமைச்சராய் இருந்த எடியூரப்பாவை அவர் சிறைக்கும் அனுப்பினார். குஜராத் மாநிலத்தில், நரேந்திரமோடி முதல்வராக இருந்தபோது பல காலமாய் லோக் ஆயுக்தா நியமிக்க தடையாய் இருந்தார். இப்பிரச்சனை குஜராத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இறுதியில் கவர்னரின் குறிக்கீடில் லோக் ஆயுக்தா குஜராத்தில் நியமிக்கப்பட்து.
லோக்பால் மசோதாவும், லோக் ஆயுக்தா அமைப்பும் அமைக்கவேண்டுமென்று அன்னா ஹசாரே போராட்டம் பெரிய தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது.
மனுநீதிச்சோழன் நீதிக்காக தன் மகனையே தேர்க்காலில் பலி கொடுத்தான். கண்ணகி நீதிகேட்டு மதுரை எரிந்தது என்பது நமது வரலாறு. இந்த வரலாற்று மண்ணிலே ஆளவந்தார்கள் கொள்ளையடிப்பதையும் , தவறு செய்வதையும் தட்டிக் கேட்கும் அமைப்பு தான் லோக் ஆயுக்தா அதற்கேன் தாமதம்?.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13-03-2015.
No comments:
Post a Comment